தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவை (ப்ளாக்) பதிவேற்றம் செய்து வந்த ராஜூ பருலேகருடனான உரசல் காரணமாக, மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே இனி வலைப்பதிவு எழுதுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரான பருலேகர், ஹஜாரே கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை, அவரது அனுமதியின்றி வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. அக்டோபர் 23 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், தமது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உயர் நிலைக் குழுவை கலைத்துவிட முடிவு செய்துள்ளதாக ஹஜாரே கூறுவதாக தகவல் இடம்பெற்றிருந்தது. பருலேகர் சனிக்கிழமை வெளியிட்ட அந்த வலைப்பதிவில் கேஜரிவால், கிரண் பேடி, பிரசாந்த் பூஷன் ஆகியோரை உயர் நிலைக்குழுவில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவாளரால் வெளியிடப்பட்ட கடித விவரம் குறித்து அண்ணா ஹஜாரே மறுப்பு தெரிவித்துள்ளார். தாம் சொல்லாத விஷயங்கள் எல்லாம் அதில் எழுதப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தமக்கு எதிராக சதி நடப்பதாக தெரிவித்தார். இந்த சர்ச்சையின் காரணமாக, இனி வலைப்பதிவு எழுதுவது இல்லை என்று தாம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment