|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 September, 2011

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள வேண்டாம்: ஐ.நா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டிக் கூட்டம் இந்தியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் எந்தச் சூழலிலும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள வேண்டாம் என உறுப்பு நாடுகளை பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொள்ளும் என அறிக்கை வெளியிடப்பட்டது.

 
தங்கள் நாட்டில் தங்க பயங்கரவாதிகளை அனுமதிக்காமல் நீதியின் முன் அவர்களை நிறுத்துங்கள் என்று அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது. பயங்கரவாதத்தைத் தடுக்கவும் அதை எதிர்த்துப் போராடவும் உறுப்பு நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை கேட்டுக்கொண்டது.

 பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியொன்றில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

 
மேலும், செப்டம்பர் 11-ம் தேதி நடந்த அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி 10 ஆண்டுகள் ஆவதையும் இந்நிகழ்ச்சி குறித்தது.  எல்லைப் பகுதிகளை தகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பயங்கரவாதிகளின் ஆயுத நடமாட்டத்தை தடுப்பதில் உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

 
 சில அறக்கட்டளை நிறுவனங்களுக்குச் சென்று சேரும் நிதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படாமல் இருப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாத நடவடிக்கையின் நோக்கம் எதுவாக இருந்தாலும், பயங்கரவாதம் ஒரு குற்றமே; அதை நியாயப்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டது.

 போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் ஹவாலா தொழிலில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவரும் சர்வதேசக் கும்பல்களுக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிக்கை கவலை தெரிவித்தது.

 
பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி உருவாகி 10 ஆண்டுகள் ஆன பின்னரும் தேசிய, சர்வதேச, பிராந்திய அளவில் செய்யவேண்டியவை நிறைய உள்ளன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.  நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்கா மீதான தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும் பயங்கரவாதம் முக்கிய ஆபத்தாக இன்னமும் உள்ளது. இந்த ஆபத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை இழக்கின்றனர். பிராந்திய இணக்கம் குலைகிறது என்று கவலை தெரிவித்தார்.

 

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி, பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் உறுப்பு நாடுகளிடையே ஓர் ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையை சாத்தியமாக்கியிருக்கிறது என்றார்.  பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாமல் இருப்பது என்பது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், தங்கள் மண்ணைப் பயன்படுத்த பயங்கரவாதிகளை அனுமதித்தல் ஆகியவற்றுக்கு எதிரானது என்றார் ஹர்தீப் சிங்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...