வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரையும்
விடாமல், அனைவரையும் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். எங்களது உடலிலும்,
மனதிலும் ஏற்பட்ட வலி அப்போதுதான் தீரும் என்று வாச்சாத்தி கொடூரத்தால்
பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். வன்கொடுமையின்
உச்சகட்ட வெறித்தனத்தை 19 ஆண்டுகளுக்கு முன்பு மலை கிராமமான
வாச்சாத்தியில் வக்கிரத்துடன் நிறைவேற்றிய வனத்துறை, காவல்துறை மற்றும்
வருவாய்த்துறையின் கோர வெறியாட்ட வழக்கில், இன்று தர்மபுரி கோர்ட் பரபரப்பு
தீர்ப்பளித்துள்ளது.
வாச்சாத்தியில் வெறியாட்டம் ஆடிய 269 பேரில்
தற்போது 215 பேர்தான் உயிருடன் உள்ளனர். மற்றவர்கள் செத்துப் போய்
விட்டனர். இந்த 215 பேர் மீதும் இன்று தர்மபுரி கோர்ட் தீர்ப்பளித்தது.
ஒருவரையும் விடாமல் அத்தனை பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடியாக
தீர்ப்பளித்தார்.
இதுகுறித்து கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த
பாலியல் பலாத்காரம், சித்திரவதை உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளான பெண்கள்
கூறுகையில், எங்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் அன்று வெறித்தனமாக
நடத்தினர் காவல்துறையினரும், வனத்துறையினரும். அவர்கள் யாரையும் சும்மா
விடக் கூடாது. அத்தனை பேருக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும் என்று
நீதிபதி ஐயாவைக் கேட்டுக் கொள்கிறோம்.
அவர்களால் நாங்கள் பட்ட
சித்திரவதை கொஞ்சநஞ்மல்ல, அதை வார்த்தையாலும் சொல்ல முடியாது. அன்று
எங்களுக்கு ஏற்பட்ட உடல் வலியும், மன வலியும் இன்னும் கூட மறக்க
முடியவிலல்லை. குற்றம் செய்த அத்தனை பேரையும் கடுமையாக தண்டித்தால் மட்டுமே
எங்களது வேதனை தீரும் என்று கண்ணீருடன் கதறியபடி கூறினர்.
215
பேரும் குற்றவாளிகள் என்று கோர்ட் அறிவித்ததை கோர்ட் வளாகத்தில்
கூடியிருந்த வாச்சாத்தி கிராம மக்கள் அமைதியுடன் வரவேற்றனர். அவர்களின்
முழுக் கவனமும், கவலையும் குற்றவாளிகளுக்குக் கிடைக்கப் போகும் தண்டனை
குறித்துதான் உள்ளது. இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்
என்று அத்தனை பேரும் கோரியபடியும், தங்களது குல தெய்வமான மாரியம்மனை
வேண்டிக் கொண்டும் உள்ளனர்.
No comments:
Post a Comment