|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 July, 2011

ஹீரோஹோண்டாவின் புதிய பிராண்டு பெயர் லோகோ லண்டனில் அறிமுகம்!

அடுத்த மாதம் 9ந் தேதி ஹீரோஹோண்டா நிறுவனத்தின் புதிய பிராண்டு பெயர் மற்றும் லோகோ லண்டனில் அறிமுகம் செய்யப்படுகிறது.

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக திகழும் ஹீரோ ஹோண்டா திகழ்கிறது.

இந்த நிலையில், ஹீரோஹோண்டா கூட்டு குழுமத்தில் அங்கம் வகித்த ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென விலகியது.

இதையடுத்து, முஞ்சால் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஹீரோ நிறுவனம் மோட்டார்சைக்கிள் சந்தையில் தனித்து களமிறங்க உள்ளது.

ஹீரோஹோண்டாவிலிருந்து விலகியபோதும் வரும் 2014ம் ஆண்டு வரை ஹீரோ நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என்று ஹோண்டா அறிவித்தது.

இருப்பினும், ஹோண்டா விலகியபிறகு அதன் பெயர் தனது தயாரிப்புகளில் ஒட்டிக்கொண்டிருப்பதை ஹீரோ நிறுவனம் விரும்பவில்லை.

மேலும், சொந்த தொழில்நுட்பத்தில் விரைவில் பல புதிய மாடல்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள ஹீரோ தனது சொந்த பிராண்டில் அவற்றை அறிமுகம் செய்ய முடிவு செய்தது.

இதற்காக, புதிய பிராண்டு பெயர், லோகோ ஆகியவற்றை வடிவமைக்கும் பொறுப்புகளை லண்டனை சேர்ந்த பிரபல பிராண்டு வடிவமைக்கும் நிறுவனமான வோல்ப்ஓலின்ஸ் நிறுவனத்திடம் வழங்கியது.அந்த நிறுவனம் ஹீரோஹோண்டாவில் புதிய பிராண்டு பெயர் மற்றும் லோகோவை வடிவமைத்துவிட்டது. ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் என்ற புதிய பிராண்டு பெயர் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை, அடுத்த மாதம் லண்டனில் நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஹீரோஹோண்டாவின் புதிய பிராண்டு பெயர் அறிமுகம் மற்றும் பிரபலப்படுத்தும் பணிகளை லா அன்ட் கென்னத் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனம், ஹீரோஹோண்டாவின் புதிய பிராண்டு பெயரை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புக்குரியவர்கள் பெண்கள்!

ஆண்கள் உடல்ரீதியாக பலசாலியாக இருந்தாலும் அவர்களை விட பெண்கள்தான் பன்முக திறமை படைத்தவர்கள் என்று உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இல்லத்தை கவனிப்பதில் தொடங்கி, கணவன், குழந்தைகளுக்கு தேவையான பணிவிடைகள் செய்வது வரை அவர்களின் திறமைகள் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

அன்புக்குரியவர்கள் பெண்கள்: ஆண்கள் சுயநலவாதிகள். அவர்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும். குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் கூறிவிட்டு மறந்துவிடுவார்கள்.

பெண்களின் பன்முகத்திறன்: பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

மனதிருப்தி: ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோ ஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

வெளிப்படையான பேச்சு : பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

இலந்தை, வேப்பம் பழங்களின் நன்மைகள் !

சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்கான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

இலந்தைப்பழம்: சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்

இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் ஏ சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது.இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்: வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.

நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன் படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்: தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும்.தலைவலியை குணப்படுத்தும். இது சொறி,சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.

வேப்பம்பழம்: வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.

வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும். பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்- வைகோ!

எரித்ரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனி நாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி, புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் தமிழ் ஈழத்தை அமைப்பதற்காக, தமிழ் ஈழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள 26 மாகாண கவுன்சில்களில், 18 மாகாண கவுன்சில்களைக் கைப்பற்றி உள்ளது; 183 உறுப்பினர்கள் வெற்றி பெற்று உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில் வெற்றிபெற்றது.

‘தனித்தமிழ் ஈழமே தீர்வு’ என்று, 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்துக்குப் பின்னர், 1977ம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், வடக்கு கிழக்கு மாநிலங்களில், 90 விழுக்காடு தமிழர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்கு அளித்தனர்.அதேபோலத்தான், இப்போது, உள்ளாட்சித் தேர்தல்களிலும், தமிழ் ஈழ ஆதரவாளர்களையே தேர்ந்து எடுத்து இருக்கின்றார்கள். இது தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல் முடிவுகள் என்றே கொள்ள வேண்டும்.

எரித்ரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனி நாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி, புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், அதேபோல தமிழ் ஈழத்தை அமைப்பதற்காக, தமிழ் ஈழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற பிரஸ்ல்ஸ் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தை, உலகம் முழுமையும் உள்ள தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகள் வரவேற்று உள்ளன.

எனவே, உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், தமிழ் ஈழம் அமைப்பதற்கான வாக்குப் பதிவை நடத்திட வேண்டும்; அந்த வாக்குப்பதியில், உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ள ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே வாக்கு அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்; இலங்கையில் தமிழ் இனக்கொலை நடத்திய ராஜபக்சே மற்றும் அவனது கூட்டாளிகளை, உலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார் வைகோ.

உலக மகா நடிப்புடா சாமி!


திரைக்குப் பின்னால் படு ஜோராகவே நடிப்பவர்கள் சினிமாக்காரர்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

சிங்கள ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை சற்றுத் தாமதமாக உணர்ந்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையை போர்க்குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளனர் உலக மக்கள். குறிப்பாக ராஜபக்சே எந்த நேரமும் சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நேரம் நெருங்கி வருகிறது.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டுக்குழு ஏற்கனவே தடை விதித்துள்ளது. நடிகர் சங்கமும் இந்தத் தடையை வலியுறுத்தி வருகிறது. சீமானின் நாம் தமிழர் இயக்கம் இதுகுறித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இவை எல்லாம் தெரிந்த பிறகும், 'போர்க்குற்றவாளி' ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஆடிப் பாடி தேர்தல் பிரச்சாரம் பண்ணத்தான் மனோ, பாடகி சுசித்ரா, கிரிஷ் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன் ரகசியமாக இலங்கைக்குப் போனார்கள்.

இவர்களின் கெட்ட நேரம், இந்தப் பயணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. வைகோ மற்றும் நெடுமாறன் இருவரும் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர். நடிகர் சங்கமும் உடனே நாடு திரும்புமாறு இவர்களுக்கு செய்தி அனுப்பியது.

ராஜபக்சே தரும் பணத்துக்காக இலங்கைக்கு இவர்கள் மேற்கொண்ட திருட்டுப் பயணம் அம்பலமாகிவிட்டதால், அவமானப்பட்டு நிற்கிறார்கள் மனோ உள்ளிட்ட அத்தனை பேரும்.

இப்போது இழந்துவிட்ட பெயரை எப்படியாது மீட்க, தங்களுக்குத் தோன்றிய பொய்களை அவிழ்த்துவிட்டவண்ணம் உள்ளனர்.

இதில் பாடகி சுசித்ரா சொல்லியிருப்பதுதான் உச்சகட்ட காமெடி. இலங்கையில் தேர்தல் நடப்பதே தெரியாது என்றும், பணத்துக்காக இலங்கைக்குப் போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்:

"எங்களை விளையாட்டு மைதான பூமி பூஜைக்காக சொல்லித்தான் இலங்கைக்கு அழைத்தனர். அரசியல் தொடர்புள்ள நிகழ்ச்சியா என்று விசாரித்தோம். இல்லை என்றனர். அதன் பிறகு இலங்கை புறப்பட்டுச் சென்றோம்.

கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியதும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதற்கு நாங்கள் வந்திருப்பதாக லோக்கல் தமிழ் டி.வி. சேனலில் செய்தி சொன்னார்கள். அதை பார்த்ததும் அதிர்ச்சியானோம். அதன் பிறகுதான் அங்கு தேர்தல் நடப்பதே எங்களுக்கு தெரிந்தது (உலக மகா நடிப்புடா சாமி!).

மனோ உடனடியாக சென்னைக்கு தொடர்பு கொண்டு நடிகர் சங்க நிர்வாகிகளிடம் பேசி என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார். அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பும்படி கூறினர். நாங்களும் வந்து விட்டோம். இலங்கைக்கு எங்களை ஏமாற்றி அழைத்து போய் விட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் உணர்வுபூர்வமாக நான் ஒன்றி இருக்கிறேன். இலங்கையில் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் மனதை ரொம்ப பாதித்தது. இலங்கைக்கு பணத்துக்காக நாங்கள் போகவில்லை. எங்களை அழைத்தவர்களிடம் ஒரு காசுகூட வாங்காமல் திரும்பி விட்டோம்," என்று கூறியுள்ளார் சுசித்ரா.

பலே மனோ...

இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வரை இலங்கைக்கே போகக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் கூறிவரும் நேரத்தில், இனி பல முறை யோசித்துவிட்டே இலங்கை செல்வேன் என்று கூறியுள்ளார் மனோ.

அவர் கூறுகையில், "நாங்கள் பாடகர்கள் இலங்கையில் தமிழர்கள் உள்ளனர். அவர்களை சந்தோஷப்படுத்தும் நோக்கத்திலேயே அங்கு சென்றோம். பணத்துக்காக செல்லவில்லை. அதில் அரசியல் இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சியனோம். இனி இலங்கை செல்ல பல தடவை யோசிப்போம்," என்றார்.

விளையாட்டரங்க பூமி பூஜைக்கு சென்றோம் என்ற இவர்களின் வாதத்தை ஏற்றாலும் கூட, அது தமிழர் நிகழ்ச்சியல்லவே. இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி. ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று வேறு அழைப்பிதழ் தந்திருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்த பிறகுதானே இவர்கள் தேதி கொடுத்து, அட்வான்ஸ் வாங்கி கொழும்பு புறப்பட்டார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அல்லவா இந்தப் பயணத்தை செய்திருக்கிறார்கள்.

"இப்போ நாம இலங்கை போறது மட்டும் தெரிஞ்சா, கறுப்புக் கொடியோட சீமான் எதிர்ல வந்து நிப்பாரு' என்று விமான நிலையத்தில் இவர்கள் கமெண்ட் அடித்துச் சிரித்துள்ளனர். ஆகவே, தெரியாமல் போய்விட்டோம் என்பதோ, ஏமாத்தி கூட்டிட்டுப் போயிட்டாங்க என இவர்கள் கூறுவதோ உண்மையல்ல.

ராஜபக்சே நிகழ்ச்சி இது எனத் தெரிந்தே இவர்கள் பயணம் மேற்கொண்டனர். அதற்கு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும் ஆயிரம் பொய்க் காரணங்களை அடுக்க ஆரம்பித்துள்ளனர்!", என்கிறார் தமிழ் உணர்வாளரான அந்த நடிகர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...