இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப்போரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கையைக் கடுமையாகத் தண்டிக்க வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானம் மீது விரைவில் விவாதம் நடந்து, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் இத்தீர்மானத்தை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசு அமைத்த ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.மேலும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் எனவும், இலங்கையில் தனிநாடு கோரி இன்னொரு யுத்தம் ஏற்படாத வண்ணம் ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது.