|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 October, 2012

உங்களுக்கு ஸ்பூன் பலுபலுக்கன்மா?


சில ஆண்டுகளுக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்.ஒரு சிவந்த பெண்மணி சீரியசான முகத்துடன், ''உங்களுக்கு ஸ்பூன் பலுபலுக்கன்மா... துண்மனி பலுபலுக்கன்மா?'' என்று கேட்டுவிட்டு ''எங்கல் சோப்பப் போட்டா துணிலாம் பலுபலுக்கும்'' என்றார்.அது ஒரு சோப்பு விளம்பரம் என்பது புரிந்தது. பலுபலுக்கன்மா என்கிறாரே அது என்ன என்று தீவிரமாக யோசிக்கபிறிதொரு நாள் வேறு ஒரு விளம்பரத்தைப் பார்க்கும்போது என் குழப்பத்துக்கு விடை கிடைத்தது.அது இன்னொரு சோப்பு கம்பெனியின் விளம்பரம். அந்த சோப்பை வாங்கினால் ஒரு ஸ்பூன் இலவசம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்."சோப்பு வாங்கினால் இலவசமாக ஸ்பூன் தருகிறார்கள். அதை நம்பி அந்த சோப்பை வாங்குகிறீர்களே... உங்களுக்கு ஸ்பூன் பளபளக்க வேண்டுமா? துணிமணிகள் பளபளக்க வேண்டுமா?" என்பதைத்தான் விளம்பரத்தில் சொல்லியிருக்கிறார்கள்."பளபளக்க வேண்டுமா?" என்று கேட்பதைவிட "பலுபலுக்கன்மா?" என்று கேட்பதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக மக்கள் ரசிக்கிறார்கள் என்றார் விளம்பரத்துறையில் இருக்கும் ஒரு நண்பர். இது ஓர் ஆபத்தின் அறிகுறி.

இன்னொரு விளம்பரம்...இரண்டு குழந்தைகள் ஒரு கட்டையையோ / இரும்புக்கம்பியையோ பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கின்றனர். பெரியவன். இளையவள்.இளையவள் கேட்கிறாள்.. "அன்னா, நாமயிப்பயேன் தொங்கறம்?"
"அம்ம பாக்கணும்னுதான்"
"அம்ம பாத்தா என்னாஹும்"
"அம்ம நமக்கு காம்ப்ளான் குடுப்பாங்க"
-புத்திசாலித்தனமான குழந்தைகள் தம்முடைய அம்மாவுக்குத் தாங்கள் உயரமாக வளரவிரும்புவதை இப்படித் தொங்குவதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

ஹிந்தியில் தயாரான இந்த விளம்பத்தில் இந்தக் குழந்தைகள் இதே போல் புத்திசாலித்தனமாகத்தான் உணர்த்தியிருப்பார்கள். தமிழில் மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று புரியாமல் இருந்தது.இந்தக் குழந்தைகளுக்காகத் தமிழில் பின்னணிக் குரல் கொடுத்தவர்கள் அப்படி பேசியிருப்பது தெரிகிறது.ஒரு பெயின்ட் கம்பெனி விளம்பரம். இந்த பெயின்டைத் தடவிவிட்டால் எவ்வளவு புழுதி பறந்தாலும் சுவரின் மீது தூசு ஒட்டாது என்பது விளம்பரம் செய்ய வேண்டிய செய்தி.துணிச்சலான மன்னர். அவரை நோக்கிப் புழுதிக்கால் பிடறிப்பட ஓடி வருகின்றன சில நூறு குதிரைகள். அரசர் அசையாமல் நிற்கிறார். கூட்டமாக நிற்கும் மக்கள் அவருடைய துணிச்சலை வியக்க வேண்டும். ஆனால் புழுதியால் போர்த்தப்பட்டுக் கிடக்கும் மன்னரை கவனிக்காமல் அவருக்குப் பின்னால் இருக்கும் மாளிகை தூசி படாமல் ஜொலிப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருவன் சொல்கிறான்... "மாலிக... மாலிக மின்னுது..!" - அதாவது எவ்வளவு தூசு பட்டாலும் மாளிகை மின்னிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் அப்படி வினோதமாகச் சொல்கிறான்..

இப்படியான பிழையான தமிழில் பேசுவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் பம்பாயில்.. மன்னிக்கவும்.. மும்பையில் தயாராகின்றன. பெரும்பாலும் இந்தி பேசும் சூழலில் இந்த விளம்பரங்கள் உருவாகின்றன. பின்பு அதே விளம்பரங்கள் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் என மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இந்தி தெரிந்த அந்தந்த மொழிக்காரர்களை அணுகி வசனத்தை மொழி பெயர்க்கிறார்கள். இப்படி மொழி பெயர்க்கும்போதே சில நேரங்களில் தவறு நடந்துவிடும். பிறகு அந்தத் தவறான தமிழை உச்சரிக்க அங்கேயே உள்ள மாநில மொழி பேசுபவர்களை அணுகிறார்கள். மும்பையில் செட்டிலாகி, தங்கள் பிராந்திய மொழியை தவறாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் வாயின் வழியாக அது மேலும் தவறாக மாறி, நம்மை வந்து அடைகிறது. இந்தப் பிழை உச்சரிப்பில் நம்மவர்க்கு நாட்டம் அதிகம்.உதித் நாராயண் என்ற பாடகர், "காதலிலே ரென்டு வகை, சய்வமுண்டசய்வமுண்டு.. ரென்டில் நீ என்ன வகைகூறு" என்று கேட்டும் "பருவாயில்லை" என்று 'காதல் பிசாசிடமும்'  பாடுவார். தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் பாடகர் அவர்தான் என்கிறார்கள்.
எஃப்.எம்.மில் வரம்பு மீறி ஜோக் அடிக்கிறார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி, போலீஸ் அதிகாரி, உழைப்பாளி எல்லாருமே வேடிக்கைக்கு உரியவர்கள்தான். தொகுப்பாளர்கள் ஒன்று, தப்புத் தப்பாகப் பேசுகிறார்கள். இரண்டாவது, தப்புத் தப்பாக தமிழ் பேசுகிறார்கள்.
தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ எல்லாவற்றிலும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து காட்சிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். கேட்பதும் பார்ப்பதும் மக்களின் மனதில் வினோதமான உணர்வுகளை விதைத்தபடி இருக்கிறது.ஒரு வாசனை திரவத்தை வெற்றுடம்பில் ஒருவன் தெளித்துக்கொள்கிறான். உலகத்தின்வெவ்வேறு மூலையில் இருந்தும் பெண்கள் அவனைத் தேடி அலைபாய்ந்தபடி வருகிறார்கள். பூவுலகம் தாண்டி, வேறு கிரகத்திலிருந்தும் கூட ஒரு பெண் வருகிறாள்.ஒன்றைக் காண்பித்து இது அதிகம் உறிஞ்சும் என்கிறார்கள். இன்னொன்றைக் காட்டி இது நீடித்த இன்பம் தரும் என்கிறார்கள். இலை மறைவு காய் மறைவான கலாசாரம் கொண்ட நம் நாட்டுக்கு இத்தகைய பன்னாட்டு பாணி விளம்பரங்கள் பொருந்தாது. உலகமயமாக்குவது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் நிதானமாக அரங்கேற்ற வேண்டியதும் அவசியமாகும்.விளம்பரங்கள் குழந்தைகளை எளிதில் வசீகரிக்கக் கூடியவை. செய்திகளோ, வயலும் வாழ்வு நிகழ்ச்சியோ, அரசியல் அரங்கமோ, நேர்படப் பேசுவோ அவர்களை அவ்வளவாகத் தூண்டுவதில்லை. இந்த விளம்பரத் தமிழ் குழந்தைகளைச் சுலபமாகப் பாதிக்கும். தூசுகளை அண்டவிடாத பெயின்டுகளையோ, அழகுதரும் கிரீமையோ விற்பதாகச் சொல்லி இப்படி ஆபத்தை வரவேற்கலாமா? தமிழையும் நோகடித்து, பண்பாட்டையும் பதம்பார்க்கும் இத்தகைய விளம்பரங்களை, நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து அரசு யோசிக்கலாம்.'எது உன்னதோ அது எனது' என்று இப்போது ஒரு விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. உன்னது.. மக்களுக்குப் பிடிக்கிறது. எனக்குத் தெரிந்த தமிழில் அப்படி ஒரு வார்த்தை தட்டுப்படவில்லை. இது 'என்னதோ' எனக்கு புரியவில்லை!

பின்னணி இசைக்காக ஒருமுறை பார்க்கலாம்.!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...