இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் மனித உரிமை மீறல் தீர்மானம் பெரும் சதி என்றும், இதிலிருந்து காப்பாற்றுமாறும் இலங்கையில் உள்ள புத்தர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இறுதிப் போரில் இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை ராணுவம். போருக்குப் பின், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, இலங்கையின் மனித உரிமைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த செய்தி வெளியானதும் இலங்கை அரசும், அரசியல்வாதிகளும் பெரும் பதட்டத்துக்கு உள்ளாகிவிட்டனர். இலங்கையை இந்த பெரிய சதியிலிருந்து காப்பாற்றக் கோரி, புத்த மடாலயங்களில் பூஜைகள் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
நேற்று பல புத்த கோயில்களில் 'அதிஷ்டான பூஜை' நடத்தப்பட்டது. இதில் ராஜபக்சே சார்பிலும், அரசின் சார்பிலும் அதிகாரிகளும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இன்று நாடு முழுவதும் உள்ள புத்த ஆலயங்களிலும் பூஜைகள் நடக்கின்றன. இதில் துணை நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டியா கலந்து கொள்கிறார். இந்தப் பூஜையுடன் தங்களின் மாதாந்திர 'போயா நாள்' பூஜையையும் நடத்துகின்றனர். இந்த பூஜைகள் குறித்து அமைச்சர் ரஞ்சித் கூறுகையில், "இது இலங்கைக்கு எதிரான சர்வதேச சதி. புலி ஆதரவாளர்களின் வேலை. இந்த சதியிலிருந்து புத்த பெருமான் எங்களைக் காப்பார்," என்றார்.
No comments:
Post a Comment