விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை பழமை மாறாமல் புனரமைப்பு செய்வது தொடர்பாக தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் டேவிட் ஹோலி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. விருதுநகர் சுலோச்சன் தெருவில் காமராஜர் வாழ்ந்த இல்லம், தமிழக அரசின் சார்பில் நினைவு இல்லமாக பராமரிக்கப்படுகிறது.காமராஜர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலை மாறி டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு கண்ணாடி மற்றும் அலங்கார விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தி பராமரிக்கப்படுகிறது.
கட்டிடங்களின் பழமையை மாற்றாமல் பலப்படுத்தும் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலிய நாடு பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய கட்டிட கலை நிபுணர்கள் கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் நினைவு இல்லம், மும்பையில் வீரசிவாஜி நினைவு இல்லத்தை பழமை மாறாமல் மத்திய அரசு உதவியுடன் புனரமைப்பு செய்துள்ளனர்.ஆஸ்திரேலியா சென்றிருந்த போது விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், காமராஜர் நினைவு இல்லத்தை பழமை மாறாமல் பராமரிக்க புனரமைப்பு செய்ய கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் டேவிட் ஹோலி தலைமையிலான குழு காமராஜர் இல்லத்தை பார்வையிட்டு சென்றுள்ளது.