|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 September, 2011

வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.

பயன்கள்: தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருவதாக ஐதீகம் இருக்கிறது. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

சிவன் சொத்து குல நாசம்!


வெறும், 28 கோடி ரூபாய் குத்தகைத் தொகையை வசூலிப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை, 28 ஆயிரத்து, 382 வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படக் கூடாது என்பதற்காக, "சிவன் சொத்து குல நாசம்' என ஒரு பழமொழி சொல்லி மிரட்டிப் பார்த்தனர் முன்னோர். நம் ஆட்கள், "ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என, பதில்மொழி சொல்லி, அதைப் புறக்கணித்துவிட்டனர். இன்றைய தேதியில், வளைத்துப்போட ஏற்ற இடம், அரசு புறம்போக்கை விட, கோவில் நிலங்களே என்பது, ஆக்கிரமிப்பாளர்களின் அவதானிப்பு.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 463 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலம் இருக்கிறது. இது தவிர, 22 ஆயிரத்து, 599 கட்டடங்களும், 33 ஆயிரத்து, 627 மனைகளும் உள்ளன. இவற்றில், விவசாய நிலங்களை, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 729 குத்தகைதாரர்கள், "அனுபவித்து' வருகின்றனர்.

நிலத்தையோ, கடையையோ குத்தகைக்கு வாங்கும்போது, அதிகாரிகளின் காலில் விழுந்து, கோவில்களுக்கு கிடா வெட்டி, உத்தரவு வாங்குபவர்கள், அதை வாங்கிய பின், கோவிலுக்கு ஒரு கற்பூரம் கூட ஏற்றுவதில்லை. "வாங்கும் வரை தான் சிவன் சொத்து; வாங்கிய பிறகு நம் சொத்து' என்ற அனுபவ உண்மை தான் அவர்களின் துணிச்சலுக்கு காரணம். குத்தகைத் தொகையை முறைப்படி கட்டுவதில்லை; குத்தகைத் தொகையை அதிகரித்தால் அதை ஏற்றுக்கொள்ளவதில்லை என்பன போன்றவை, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள். உள்ளூர் அதிகாரிகளை சரிக்கட்டி விடுவதால், இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஒருவேளை, ஏதேனும் பக்திமான் அதிகாரி உணர்ச்சிவசப்பட்டு, வழக்கும் தொடுத்துவிட்டால், மூன்று தலைமுறை வரை அவற்றை இழுத்துவிடுவர்.

இவ்வாறு நடக்கும் வழக்கு, வம்படிகளுக்காகவே, மதுரை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு இடங்களில், வருவாய் நீதிமன்றங்களும், சேலம், மன்னார்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில், முகாம் நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோர்ட்டுகளில், வெறும், 28 கோடி ரூபாய் குத்தகை நிலுவைக்காக, 28 ஆயிரத்து, 382 வழக்குகள் தொடரப்பட்டு, 13 ஆயிரத்து, 307 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.இதன்படி, 12 கோடி ரூபாய், கோவில்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என தீர்ப்பாகியிருக்கிறது. ஆனால், அவற்றை குத்தகைதாரர்கள் செலுத்திவிட்டனரா என்ற தகவல் இல்லை. இதுதவிர, இன்னும், 17 கோடி ரூபாய் குத்தகைப் பணம் தொடர்பாக, 15 ஆயிரத்து, 75 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீதான தீர்ப்பு, எந்த ஜென்மத்தில் வருமோ!

கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்து வெற்றி பெறமுடியாது!


ஈ அடிச்சான் காப்பி' என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது."இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது' என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் முறையாக, வரும் மார்ச் மாதம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, பாட வாரியாக கேள்வித் தாள், "புளூ பிரின்ட்'டை, பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. பாடப் புத்தகங்களைத் தயாரித்த ஆசிரியர் குழுவே, இந்த கேள்வித் தாள்களையும் வடிவமைத்துள்ளது.சி.பி.எஸ்.இ., கேள்வித் தாள்களில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகள் அதிகம் இருக்கும். நேரடியான கேள்விகள், குறைந்த அளவே இருக்கும். அதேபோல், பத்தாம் வகுப்பு கேள்வித் தாள்களை வடிவமைத்துள்ளனர்.இந்த புதிய கேள்வித் தாள் அடிப்படையிலேயே, தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. அறிவியல், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களில், மாணவர்களின் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

"புளூ பிரின்ட்'கள், மாநிலம் முழுவதும், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து, ஆசிரியர்கள் கருத்துக் கூறவும், பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நாகராஜ முருகன், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி குப்புசாமி ஆகியோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்க, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, இந்த வாரத்திற்குள் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கையை சமர்ப்பிக்க, இரு மாவட்ட அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர். இதனடிப்படையில், தேவையான மாற்றங்களைச் செய்து, "புளூ பிரின்ட்'டை, துறை இறுதி செய்ய உள்ளது.

மாற்றங்கள் என்னென்ன?கேள்வித் தாள் அமைப்பு குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது: ஆங்கிலம்:மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, கேள்வித் தாளில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆங்கிலம் இரண்டாம் தாளில் தான் வழக்கமாக, இலக்கணப் பகுதி வரும். தற்போது, முதல் தாளிலேயே இலக்கணத்தைக் கொண்டு வந்து, அதற்கு, 25 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இரண்டாம் தாளில், ஏதாவது சில தலைப்புகளைக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி விளக்குமாறு ஐந்து மதிப்பெண் கேள்வி அமைத்துள்ளனர்.

* அதேபோல், சில வாசகங்களைக் கொடுத்து, அதை வைத்து விளம்பரங்களைத் தயாரிக்குமாறு ஒரு கேள்வி கேட்கின்றனர். இதுவும், ஐந்து மதிப்பெண் கேள்வி பகுதியில் இடம்பெற்றுள்ளது. முதல் தாளில், "ரூட் மேப்' என்றொரு புதிய பகுதி கேட்கப்படுகிறது. ஏதாவது, ஒரு இடத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு இடத்தில் இருந்து, அந்த இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.

* "பொருத்துக' என்றொரு பகுதி, வழக்கமாகக் கேட்கப்படும். இந்த முறை, இந்தப் பகுதி இல்லை. "லெட்டர் ரைட்டிங்' என்ற பகுதி வழக்கமாக இடம்பெறும். இதில், விடுநர், பெறுநர், "பாடி ஆப் தி லெட்டர்' என, ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்கள் தனித்தனியாகப் பிரித்து வழங்கப்படும். மாணவர்கள், விடுநர், பெறுநர் எழுதினாலே, இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். தற்போது, விடுநர், பெறுநர் பகுதிகள், கேள்வித் தாளிலேயே வந்துவிடுகின்றன. "பாடி ஆப் தி லெட்டரை ' மட்டும் மாணவர்கள் எழுத வேண்டும். இதுதான், மாணவர்களுக்குச் சிரமம். இதனால், மாணவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் சில மதிப்பெண்களை, புதிய முறையில் இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

* மொழிபெயர்ப்பில், ஒரு கேள்வி கேட்கப்படும். இதில், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்குமாறு தான் கேள்வி இருக்கும். இப்போது, தமிழில் இருந்து, ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
தமிழில் உள்ள கருத்துக்களை, எப்படி ஆங்கிலத்தில் எழுதப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு, "சாய்ஸ்' கொடுத்தால் நன்றாக இருக்கும். இப்படி, பல புதிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

அறிவியல் : * "அ' பகுதி, "புளூ பிரின்ட்' நன்றாக உள்ளது. மற்ற பகுதிகளில், விடை அளிக்கும் வகையிலான கேள்விகள் அதிகம் இடம்பெறவில்லை. "படங்களுக்கான பாகங்களை எழுதவும்' என்று கேள்வி கேட்கப்படும். பாகங்களை மட்டும், மாணவர்கள் எழுதுவர். தற்போது, கேள்வித் தாளில் உள்ள படத்தை, விடைத் தாளில் வரைந்து, அதன்பின் பாகங்களை எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு நேரம் வீணாகும்.

* 22வது கேள்வி, மாணவர்களின் அறிவை, மிக நுட்பமாகச் சோதிக்கும் வகையில் கேட்கப்பட்டுள்ளது. அதாவது, இதயத்தின் உள்ளமைப்பை படமாகக் கொடுத்துவிட்டு, அதில் நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழல் எங்கே இருக்கிறது, உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழல் எங்கே இருக்கிறது என்பதை, துல்லியமாகக் குறிக்க வேண்டும். இது மிகவும் சிரமம். இதனால், 2 மதிப்பெண்களை இழக்க நேரிடும்.

* 27வது கேள்வி, எது சரி, எது தவறு என குறிக்க வேண்டும். இது பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், பாடப் புத்தகத்தின் உள்பகுதியில், சில வரிகளைத் தேர்வு செய்து, அதில் இருந்து இந்த கேள்வி கேட்கப்படுகிறது. இதுபோன்ற, நுட்பமான கேள்விகள் பல, புதிதாக இடம்பெற்றுள்ளன.
* பாடப் புத்தகத்தின் முழுப் பகுதியையும் முழுமையாகப் படித்தால் மட்டுமே, அறிவியல் தேர்வை நன்றாக எழுத முடியும்.

கணிதம்: கூட்டுத் தொடர், அளவியல் ஆகிய பாடங்கள், மாணவர்களுக்கு மிகவும் சிரமமானவை. இவற்றில் இருந்து இரண்டு கட்டாயக் கேள்விகள் (கேள்வி எண் 42, 45) கேட்கப்பட்டுள்ளன. எனவே, இந்த கேள்விகளுக்கு, மாணவர்கள் அனைவரும் பதிலளிப்பார்கள் என்று கூற முடியாது. அதிகமான மாணவர்கள் விட்டுவிடக் கூடிய நிலைதான், தற்போது இருந்து வருகிறது. எனவே, கணிதப் பாடத்தில், "சென்டம்' குறைய வாய்ப்புகள் அதிகம்.

தமிழ்: * தமிழ் இரண்டாம் தாளில், ஒரு பாடலைக் கொடுத்து, இது என்ன, "பா' என்று கேட்கின்றனர். இரண்டு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டுள்ள இக்கேள்வி, மாணவர்களுக்குச் சிரமமாக இருக்கும்.எட்டு வரிகளில் கவிதை எழுதுக என்று, ஏதாவது ஒரு தலைப்பு கொடுக்கின்றனர். இதேபோன்ற கேள்வி, பிளஸ் 2விலும் வருகிறது. 500 மாணவர்களில், ஒரு மாணவர் தான், இந்த கவிதையை எழுதுகிறார். மாணவர்களில், மிகச் சிலருக்கே கவிதை எழுதும் ஆற்றல் இருக்கும்.

* சமூக அறிவியல் கேள்வித் தாள், நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு "அல்வா' :"இனிமேல், மாணவர்கள், "பிட்' அடிப்பதற்கே வழியிருக்காது' என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:வழக்கமாக, விரிவாக விடை அளிக்கும் வகையிலான கேள்விகள் தான், அதிகம் இடம்பெறும். அதனால், எந்தக் கேள்வி வரும் என்பதை, ஓரளவு யூகித்து, அதற்கான விடைகளை எடுத்துச்சென்று, தேர்வில் "பிட்' அடிப்பர். ஆனால், புதிய கேள்வித் தாள் அமைப்பு, மிக நுட்பமாக, கேள்விகள் எந்த மூலையில் இருந்து வரும் என்பதையே கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அதனால், "பிட்'டும் அடிக்க முடியாது.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இணையத்தில் "புளூ பிரின்ட்' : பாட வாரியான, "புளூ பிரின்ட்' விரைவில், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. எனவே, பகுதி வாரியாக கேட்கப்படும் கேள்விகள் மாதிரிகளை, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.ஆசிரியர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணி கூறும்போது, "சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். 6,7,8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்தின் சார்பிலும், 9,10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் மற்றும் ஆசிரியர் கல்வி இயக்ககம் ஆகிய இரு துறைகள் சேர்ந்தும் பயிற்சி அளிக்கும். இதற்கான திட்டங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் வகுத்து வருகின்றன' என்றார். 

அரசுக்கு நம்பிக்கை துரோகம்: ராஜா மீது சி.பி.ஐ!


2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது ஏற்கனவே சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளோடு, புதிதாக, அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராஜா, கனிமொழிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள ராஜா, கனிமொழி உள்ளிட்ட பலரும், பல மாதங்களாக, சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள், ஜாமினில் வெளிவருவது எப்போது என்ற கேள்வியும் இருந்து வருகிறது. குறிப்பாக, கனிமொழியை எப்படியாவது ஜாமினில் கொண்டு வந்துவிட வேண்டுமென, தி.மு.க., தலைமை தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், டில்லி பாட்டியாலா கோர்ட்டில், நேற்று அதிரடி திருப்பம் நிகழ்ந்தது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகூரியா, ராஜாவின் தனிச் செயலர் சந்தோலியா ஆகிய மூன்று பேர் மீது, சி.பி.ஐ.,யின் வழக்கறிஞர் லலித், தான் இவ்வழக்கில் புதிய குற்றச்சாட்டை பதிவு செய்வதாக தெரிவித்தார்.அதன்படி ராஜா, பெகுரியா, சந்தோலியா ஆகிய மூவரும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 409ன் கீழ், குற்றம் இழைத்திருப்பதாக குறிப்பிட்டார். "2ஜி' ஸ்பெக்டரம் என்பது, அரசின் சொத்து. இதை பகிர்ந்தளிப்பதற்குண்டான உரிமையும் தகுதியும் உள்ள பதவிகளில் இந்த மூவரும் இருந்தனர்.ஆனால், இவர்கள் நேர்மையற்ற வகையில் தங்களது உரிமையை பயன்படுத்தியுள்ளனர்.

ஸ்பெக்ட்ரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பான கொள்கையை, சட்டவிரோதமாக மீறியுள்ளனர். தகுதியற்ற சில கார்ப்பரேட் நிறுவனங்கள், தவறான வழியில் பலன் பெறும்வகையில், இவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.இவர்கள் மீது, ஏற்கனவே சில பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ள நிலையில், "அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கின்றனர்' என்ற, குற்றச்சாட்டையும் பதிவு செய்கிறேன்.இவ்வாறு லலித் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு பிறகு இதுவரை எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.குற்றப்பத்திரிகை தாக்கல் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களது வாதங்களும் கடந்த சில வாரங்களாக கேட்கப்பட்டன.இந்த வாதங்களும் கேட்டு முடிக்கப்பட்டுவிட்டதால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப் பின்னணியை தொகுக்கும் பணிகள் ஆரம்பமாகி நடைபெறும். அந்த தொகுப்பு பணிகள் முடிந்துவிட்டால் அதற்கு பிறகு வாத பிரதிவாதங்கள் முறைப்படி கோர்ட்டில் துவங்கும்.

இந்த வழக்கமான காரணங்களால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஜாமின் கிடைக்காத நிலையும் இருந்து வந்தது. குற்றப்பின்னணி தொகுப்பு பணிகளை, வரும் 30ம் தேதி துவங்க இருப்பதாக நீதிபதி ஏற்கனவே கூறியிருந்தார். இப்பணிகள் ஆரம்பமாகி விட்டால் ஜாமின் கிடைப்பது எளிதாக இருக்கும்.இதனால், குற்றம்சாட்டப்பட்டு நீண்டநாட்கள் சிறையில் இருந்து வரும் ராஜா, கனிமொழி, சரத்குமார், பெகூரியா, சந்தோலியா, சரத்குமார் என பலரும், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். எப்படியும், வரும் 30ம் தேதிக்கு பின், ஜாமினில் வெளிவந்துவிடலாம் என்ற இவர்களது நம்பிக்கை நேற்று பொய்த்துப்போனது.

திருப்பம்: சி.பி.ஐ.,யின் புதிய குற்றச்சாட்டையும் கூடுதலாக கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளதால், பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென ராஜா தரப்பில் கேட்கப்பட்டு, அதன்படி, வரும் 30ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது.அப்போது, ராஜா உள்ளிட்ட மூன்று பேரும் தங்களது வாதங்களை அடுக்குவார்கள், இந்த வாதங்கள் கேட்கும் பணி எப்படியும் ஒரு மாத காலம் நீடிக்கும். அதன்பிறகுதான் குற்றப்பின்னணியை தொகுப்பை நீதிபதி ஆரம்பிக்க இயலும்.இத்தகைய பின்னணி காரணங்களால் ராஜாவுக்கும் சரி,கனிமொழிக்கும் சரி ஜாமின் கோருவதிலும் அது கிடைப்பதிலும் மேலும் காலதாமதம் ஆகலாம்.

குற்றம் நிரூபணமானால் ஆயுள் தண்டனையா? நேற்றைய புதிய பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது சாதாரணமானது அல்ல. அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை தவறாகக் கையாண்டால், அவர்கள் மீது இந்த பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படும்.அதன்படி, இ.பி.கோ., பிரிவு 409ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அத்தகைய கடுமையான பிரிவின் கீழ், ராஜா இப்போது சிக்கியுள்ளார் என்பதால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதே நாள்...


  • சர்வதேச சுற்றுலா தினம்
  •  இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  •  இந்திய ஆன்மிகவாதி மாதா அம்ருதானந்தமயி பிறந்த தினம்(1953)
  •  கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது(1998)
  •  உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
  • தயாநிதி மீதான டெலிபோன் இணைப்பு முறைகேடு விசாரணை துவக்கம்!


    மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோது, சென்னையில் உள்ள அவரின் வீட்டிற்கு 300 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், அந்த இணைப்புகள் சன் "டிவி'க்கு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின், சி.பி.ஐ., விசாரணையை துவக்கியுள்ளது.

    இது தொடர்பாக பி.டி.ஐ., செய்தி ஏஜன்சி வெளியிட்டுள்ள செய்தி:மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில், சென்னையில் உள்ள அவரின் போட் ஹவுஸ் இல்லத்திற்கு, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் பெயரில், 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. சன்"டிவி' அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில் தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம், கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என்., வசதிகளை கொண்டிருந்தன. அதன் மூலம் சன் "டிவி'க்குத் தேவையான தகவல்கள், செய்திகள் மற்றும் "டிவி' நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் இருந்து வெகு விரைவாகப் பெறப்பட்டன என்று சில தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., தொலைத்தொடர்பு செயலரிடம், அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், "தயாநிதியின் வீட்டிற்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் எல்லாம், வர்த்தக நிறுவனங்களால், வீடியோ கான்பரன்சிங்கிற்கும், பெரிய அளவிலான டிஜிட்டல் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவற்றுக்கு மற்ற நிறுவனங்கள் எனில், அதிக கட்டணம் செலுத்த நேரிடும். ஆனால், தயாநிதி அமைச்சர் பொறுப்பில் இருந்ததால், இவற்றை எல்லாம் சன் "டிவி' இலவசமாக பயன்படுத்தியுள்ளது.

    இந்த தொலைபேசி இணைப்புகள் மூலம் நடந்த பரிமாற்றங்கள் எல்லாம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் ஒருவரின் துணையோடு நடந்துள்ளன. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேறு யாருக்கும் இந்த விவரம் தெரியாது' என்றும் கூறப்பட்டிருந்தது.கடந்த 2007ம் ஆண்டில் சமர்ப்பித்த இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை செயலரையும் சி.பி.ஐ., கேட்டுக் கொண்டது. ஆனால், துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், இந்த விவகாரம் தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது முதற்கட்ட விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது. 

    சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது; எம்.எஸ்.பாஸ்கர்!


    காமெடி நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்அளித்த பேட்டி வருமாறு:- கலைஞர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். நடிகர்களுக்கு அனைத்து கட்சிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். என்னை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை. அரசியல் என்பது வேறு களம். நடிகர்கள் அரசியல்வாதியாக நடிக்கலாம். கருத்துக்கள் சொல்லலாம். ஊழலை எதிர்க்கலாம். ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசியலில் சேர்ந்தால் பலரது விருப்புக்கும், வெறுப்புக்கும் ஆளாக நேரிடும். அரசியலை விரும்பும் நடிகர்கள் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக போய் விட வேண்டும்.
     
    சினிமா நல்ல தொழில். அதில் அரசியலை கலக்க கூடாது. ரசிகர்கள் கைதட்டல் போதும். சத்தியமாக நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். வடிவேலு அரசியலில் ஈடுபட்டதும் பிரசாரம் செய்ததும் அவரது சொந்த விருப்பம். என்.எஸ். கிருஷ்ணன் காலத்தில் இருந்து காமெடி நடிகர்கள் அரசியலில் ஈடுபட வில்லை. காமெடி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக விமர்சிக்கின்றனர்.
     
    எனக்கு ஏழு கோடிகள் தெரியும். கிழக்கு கோடி, மேற்கு கோடி, தெற்கு கோடி, வடக்கு கோடி, புண்ணிய கோடி, தனக்கோடியை பார்த்தாலும் தெருக்கோடியில்தான் நிற்க வைக்கிறார்கள். காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. வேலாயுதம், ஒத்த வீடு, கொஞ்சம் மைனாக்களே, புதுமுகங்கள் தேவை, மௌனமான நேரம் உள்ளிட்ட பதி மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

    13 கிங்பிஷர் விமானங்கள் இன்று முதல் ரத்து!


    கிங்பிஷர் விமான நிறுவனம் எரிபொருள் நிறுவனத்துக்கு பலகோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதையடுத்து கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.  இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் கிங்பிஷர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூர், அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும், 13 கிங்பிஷர் விமானங்கள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டன.
     
    இதில் பெங்களூருக்கு மட்டும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானத்தில் செல்ல முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படுகிறது. அல்லது அவர்களை வேறு விமானத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    சென்னை சூப்பர்கிங்ஸ் முதல் வெற்றி பெறுமா?


    சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர், ஐதராபாத், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது.   இந்தப்போட்டியில் இறுதிப்போட்டி, அரை இறுதி உள்பட 10 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. கடந்த 24-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கேப்கோப்ராஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசவுத் வேல்ஸ் அணியையும், மும்பை இந்தியன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் தோற்கடித்தன. 
     
    3 நாள் இடைவெளிக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (28-ந்தேதி) 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் “ஏ” பிரிவில் உள்ள நியூசவுத் வேல்ஸ்- டிரினிடாட் டொபாக்கோ அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தன.
     
    நியூசவுத் வேல்ஸ் அணி 7 விக்கெட்டில் கேப்கோப்ராசிடமும் டிரினி டாட் அணி 1 விக்கெட்டில் மும்பை இந்தியன்சிடமும் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.   இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் “ஏ” பிரிவில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்- கேப்கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா) அணிகள் மோதுகின்றன.
     
    சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் தோற்று இருந்தது. வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் தோற்றது. மலிங்கா கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி சென்னை அணியின் வெற்றியை பறித்தார். மும்பையிடம் தோற்ற அதிர்ச்சியில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன. தொடக்க வீரர் மைக் ஹஸ்சி, கேப்டன் டோனி பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
     
    கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடிய பத்ரிநாத் சொதப்பிவிட்டார். இதனால் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்திவ்ல் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உள்ளனர். கேப்கோப்ராஸ் அணி சென்னை அணிக்கு சவாலானது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் நியூசவுத் வேல்ஸ் அணியை வென்று இருந்தது.
     
    2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கேப்டன் கெம்ப், டுமினி, கிப்ஸ், பீட்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.   இரு அணி வீரர்கள் விவரம்:-
     
    சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), முரளி விஜய், மைக் ஹஸ்சி, ரெய்னா, பத்ரிநாத், அல்பி மார்கன், ஜகாட்டி, அஸ்வின், பிராவோ, போலிஞ்சர், அணிருதா ஸ்ரீகாந்த், குலசேகரா, சுரஜ் ரந்தீவ், விர்த்திமான் சகா, ஸ்டைரிஸ். கேப்கோப்ராஸ்: ஜஸ்டின் கெம்ப் (கேப்டன்), கிப்ஸ், டுமினி, ஜஸ்டின் ஆன்டாங், ஓவாசிஸ் ஷா, ஸ்டெயன், டெனி விலாஸ், மைக்கேப் ரிப்பன், ஆண்ட்ரூபுட்டிக், ராபின் பீட்டர்சன், பிலான்டர், ஜான் லோவ், ரிச்சர்டு லெவி, லாங்வெல்ட், ரோளகெலின் வெலட். 

    40 சதவீத இந்தியர்களே கருத்தடை சாதனம் பயன்படுத்துகின்றனர்: சர்வதேச ஆய்வில் !


    கருத்தரிப்பு, உயிர் கொல்லி நோய் தடுப்பு போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கையில் மக்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் உள்ளனர் என்பதை கண்டறிய, “பொதுமக்கள் விழிப்புணர்வு இயக்கம்” உலக அளவில் ஆய்வு மேற்கொண்டது. அதில் இந்தியர்களில் 40 சதவிகிதம் பேர் மட்டுமே கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. கர்ப்பம் தரிக்கும் அபாயத்தை சந்திக்க விரும்பவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
     
    72 சதவிகிதம் பேர் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில்லை. இவர்களிடம் கர்ப்பம் தரிப்பது குறித்த கவலை எதுவும் காணப்படவில்லை. எய்ட்ஸ் மற்றும் பாலியல் தொடர்பான நோய்களின் ஆபத்து பற்றி அவர்கள் கவலைப்படவும் இல்லை. இளைய தலைமுறையினர் இடையே கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை.
     
    திட்டமிடப்படாத கருத்தரிப்புதான் உலக அளவில் பெரிய கவலையை ஏற் படுத்தி இருக்கிறது. உலக அளவில் ஆண்டு தோறும் 20.8 கோடிப் பேர் கருத்தரிக்கின்றனர். அவர்களில் 41 சதவிகிதம் பேர் முன் கூட்டியோ சிக்காமலேயே கருத்தரிப்புக்கு ஆளாகின்றனர். ஆஸ்திரேலியா, சிலி, கொலம்பியா, இங்கிலாந்து, இந்தோனேசியா, லூதியானா, மெக்சிகோ, போலந்து, சிங்கப்பூர், சுவீடன், துருக்கி போன்ற நாடுகளில் 40 சதவிகிதம் பேர் பாதுகாப்பில்லாத உறவை வைத்துள்ளனர்.
     
    சீனா, எத்தியோப்பியா, கென்யா, நார்வே, தாய்லாந்து போன்ற நாடுகளில் இது 50 சதவிகிதமாக உள்ளது. இதுபற்றி இந்திய குடும்ப கட்டுப்பாடு சங்க பொதுச்செயலாளர் விஸ்வநாத் கோலிவாட் கூறுகையில், கருத்தடை சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இவற்றை எவ்வாறு பயன்படுத்து வது என்று பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
     
    இந்தியாவில் இதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஆணும், பெண்ணும் தீவிரமாக எடுத்துக் கொள்வது அவசியம். கருத்தடை சாதனங்களில் எதை தேர்ந்து எடுப்பது என்பதை பார்ட்னர்கள் இருவரும் முடிவு செய்து தெரிவு செய்து கொள்ள வேண்டும் என்றார். 

    பழச்சாறு குடித்தால் புற்றுநோய் ஏற்படும் = ஆஸ்திரேலிய விஞ்ஞானி!


    தினமும் காலையில் எழுந்ததும் பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு உகந்தது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தற்போது இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினசரி பழச்சாறு சாப்பிடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  அதில், பழச்சாறு சாப்பிடு பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுவது தெரியவந்தது. அதில் உள்ள சர்க்கரை புற்றுநோயை உருவாக்குவது கண்டறியப்பட்டது. குறிப்பாக, டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைக்கப்படும் பழச்சாறுகளில் அவை கெட்டுப்போகாமல் இருக்க பல மூலப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நாள் ஒன்றுக்கு 3 டம்ளருக்கு மேல் குடிப்பவர்களுக்கு இது போன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் 

    பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் பள்ளிக் கல்வித் துறை!


    பள்ளித் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு முறைக்குப் பதிலாக மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. அதாவது மதிப்பெண் போடும் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ என கிரேடு வழங்க முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுககு புதிய கல்விமுறையை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது. மேலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு 2013-14-ஆம் ஆண்டுகளில் இப்புதிய முறை விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

    நேர்மையின் மதிப்பு ரூ.2000: ரயிலில் கிடந்த ரூ.10லட்சத்தை ஒப்படைத்த பணியாளர்!

    ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

    எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ்.

    இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் ‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு, போர்வைகளை ‘இலவச’ பொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு. அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான் தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் ’வெட்டு’ விழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை. கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்‌ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப் பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாக அந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர் அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.


    ஊழல் செய்திகள் பத்திரிகைகளில் ஒரு சிறு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்திருக்கும் இந்நாளில், பகவான் தாஸ் போன்றவர்களின் நேர்மை சின்னஞ்சிறு இடத்தையும் ஆக்கிரமிக்காதது ஆச்சரியம்தான். மக்களின் மனங்களில் இவர் போன்றவர்களின் நேர்மை ஆக்கிரமிக்குமானால் நிச்சயம் பத்திரிகைகளில் பத்திகளிலும் இடம்பெறுமோ என்னவோ? தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும். ‘’எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன். உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்...”


    பகவான் தாஸ் சொன்னது போல் செய்தார். அவருக்குப் பரிசாக ஜபல்பூர் பகுதி உயரதிகாரியிடம் இருந்து அவருக்குப் பரிசாக ரூ.2000 கிடைத்தது. இருப்பினும், உயரதிகாரிகள் பகவான் தாஸின் செயலுக்கு தகுந்த பரிசு அளிக்கும்படி ரயில்வேத் துறைக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக்  கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாது” என்கிறார்.


    அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக ராம் லீலா மைதானத்தை நோக்கி இவரும் சென்றார். ஆனால், அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் இவரால் அண்ணா ஹஸாரேவின் அருகில்கூட செல்ல முடியவில்லை. கூட்டத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட பகவான் தாஸ், அப்படியே திரும்பினார். ஆனாலும் அவர் மனத்தில் கொஞ்சமும் வருத்தம் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் அழுக்கடைந்த பிளாட்பாரங்களில், அழுக்கடைந்த மனிதர்களுக்கு மத்தியில் நேர்மையோடு தூய்மையாக செயல்படும் பகவான் தாஸ் போன்றவர்களின் வாழ்க்கைச் செய்தி, ஆயிரம் அண்ணா ஹசாரேக்களின் உண்ணாவிரதச் செய்தியை விட மேலானதன்றோ?!  

    தபால் நிலையங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை!


    தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை துவங்கியுள்ளது. கடித போக்குவரத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்த தபால் துறை இன்று பல துறைகளில் தடம் பதித்து வருகிறது. மியூச்சுவல் பன்ட் துவங்கி தங்கம் வரை விற்பனை செய்து வருகிறது. அடுத்த கட்டமாக வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள தபால் நிலையங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

    நெல்லையிலும் மினி பிரிட்ஜ் விற்பனயைத் துவங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதையடுத்து கோத்ரேஜ் நிறுவனத்துடன் இணைந்து மினி பிரிட்ஜ் விற்பனை துவங்கப்பட்டது. 43 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த மினி பிரிட்ஜில் 4 முதல் 5 ஒரு லிட்டர் பாட்டில்கள், 2 முதல் 3 கிலோ காய்கறிகள், 2 லிட்டர் வரை பால், 3 பாத்திரங்கள் வைக்கலாம்.

    8.9 கிலோ எடை கொண்ட இந்த மினி பிரிட்ஜ் 230 வோல்ட் மின்சாரத்திலும், இன்வென்டரிலும் செயல்படும். இதை வியாபாரத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 3,790 ஆகும். இந்த மினி பிரிட்ஜை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். நெல்லை கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ரூ. 3,790 செலுத்தினால் 5 நாட்களுக்குள் மினி பிரிட்ஜ் வீடு தேடி வரும் என்று பாளையங்கோட்டை தபால் துறை அலுவலர் கனகசபாபதி தெரிவித்தார்.

    நச்சரிப்பு அழைப்புகள், எஸ்.எம்.எஸ்களில் இருந்து இன்று முதல் விடுதலை!

    இந்த வாரத்தில் இருந்து தேவையில்லாத தொலைபேசி விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

    இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "தேவையற்ற அழைப்புகளின் பதிவு" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in  என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

    இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம். தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ. 2. 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ரத்த தானம் வேண்டுபவர்கள் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். மட்டுமே இனி அனுப்ப முடியும்.

    நோய் தீர்க்கும் மகாளய அமாவாசை!


    மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபட்டனர்.

    இதிகாசங்களில் பித்ரு பூஜை: நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது.ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன. ஆனால் இக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றதுநாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம். நம் பித்ருக்கள் (மண்), புரூரவர் (நீர்), விசுவதேவர் (நெருப்பு), அஸீருத்வர் (காற்று), ஆதித்யர் (ஆகாயம்) என பஞ்ச பூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.வம்சம் செழிக்கும்: சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான். எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினால் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.தீராத வியாதிகள் தீரும்: மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

    பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ. 5,000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

    வியாபார விஷயமாக இந்தியா வந்துள்ள சோஷியலைட் பாரிஸ் ஹில்டன் கைக்குழந்தையுடன் வந்து யாசகம் கேட்ட பெண்ணுக்கு ரூ. 4,943 கொடுத்தார். நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்திய அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசையும் வந்துள்ளது.  இந்தியாவும், இந்தியப் பெண்களும் அழகு என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். 

    நேற்று மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலில் பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் வந்த பெண் கார் கண்ணாடியைத் தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே பாரிஸ் 100 டாலர் (ரூ. 4,943) நோட்டை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

    தனக்கு எவ்வளவு ரூபாய் கிடைத்துள்ளது என்பதை அறியாத அந்த பெண் அங்கு நின்று கொண்டிருந்த புகைப்படக்காரரிடம் போய் நோட்டை நீட்டி சில்லறை கேட்டுள்ளார்.  இந்தியாவில் உள்ள வறுமைக் கொடுமையைப் பற்றி பாரிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று அவர் டுவிட்டரில். 

    தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்ஏசி - கேயார்!


    தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர்கள் கேயார் மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் மோதுகிறார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராமநாராயணன் விலகியதை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்கள் இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 770 தயாரிப்பாளர்கள் ஓட்டு போட்டு இவர்களை தேர்வு செய்கிறார்கள். தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். எஸ்.ஏ. சந்திரசேகரன் தற்போது சங்கத்தில் பொறுப்புத் தலைவராக இருக்கிறார். அவர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

    இந்த முறை எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். தலைமையில் இரண்டு அணிகள் மோதுகின்றன. எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு புஷ்பா கந்தசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு தாணுவும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ராதாரவி, கோவைத்தம்பி, சங்கிலி முருகன், மாதேஷ், ஆர்.கே. செல்வமணி, சந்திரபிரகாஷ் ஜெயின், எடிட்டர் மோகன், அமுதா துரைராஜ், மைக்கேல் ராயப்பன், ரிஷிராஜ், பவித்ரன் உள்பட 21 பேரும் போட்டியிடுகின்றனர்.

    ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!


    தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மீது தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில், அவருக்கு நியூயார்க் மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது . விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த கர்னல் ரமேஷின் மனைவி வத்சலாதேவி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார் (வழக்கு எண்: 1:11-cv-06634-NRB).  இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் தன் கணவர் கர்னல் ரமேஷை படுகொலை செய்துவிட்டதாக, வத்சலாதேவியின் சார்பில் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 -ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    ரமேஷின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இலங்கை ராணுவ தளபதிக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபக்சேவுக்கும் இப்போது சம்மன் அனுப்ப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அவர் அவசரமாக இலங்கை திரும்பும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

    ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற ராஜபக்சேவுக்கு அங்குள்ள தமிழர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான இன மக்கள் பெரும் எதிர்ப்பு காட்டினர். இதனால் நியூயார்க்கை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என ராஜபக்சேவுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.  மேலும் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இந்த முறை ராஜபக்சேயை சந்திக்கவும் மறுத்துவிட்ட நிலையில், அவருக்கு போர்க்குற்ற வழக்கில் நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அமைச்சர் ஹினா பேச்சால் அமெரிக்கா கடும் டென்ஷன்!


    வாஷிங்டன் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானியை தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்புமாறு அந்நாட்டு பிரதமர் யூசுப் ராசா கிலானி உத்தரவிட்டதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் தரப்பு மறுத்துள்ளது. திட்டமிட்டபடி தனது பயணத்தை முடித்துக் கொண்ட பின்னரே ஹினா நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பாரி கர் அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானிதான் அமெரிக்கா செல்வதாக இருந்தது. ஆனால் தன்னை சந்திக்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுத்து விட்டதால் அதிருப்தி அடைந்த கிலானி, தனக்குப் பதில் ஹினாவை அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹக்கானி தீவிரவாத குழுவுக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த ஹினா, அமெரிக்கா தாராளமாக பாகிஸ்தானுடனான உறவை முறித்துக் கொள்ளட்டும். அது அவர்களது இஷ்டம். ஆனால் அதனால் நஷ்டம் பாகிஸ்தானுக்கு கிடையாது, அமெரிக்காவுக்குத்தான் என்று கடுமையாக பதிலளித்தார். அதற்கும் மேலாக, உலக அளவில் தீவிரவாதிகளை வளர்த்து ஆளாக்குவதே அமெரிக்காதான் என்றும் மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

    மேலும் அவர் கூறுகையில், அமெரிக்கா பாகிஸ்தானின் பொறுமையை சோதித்துப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்படி அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தானை குறை சொல்வதைத் தொடர்ந்தால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படும். அமெரி்ககாவின் இந்த குற்றச்சாட்டிற்கு அதனிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. அமெரிக்காவே ஹக்கானி அமைப்பை உருவாக்கிவிட்டு தற்போது அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் கூறுகிறது. அமெரி்ககாவின் சிஐஏவுக்கு உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. ஹக்கானி அமைப்பு சிஐஏவுக்கு பிடித்தமான ஒன்று தான். நட்பு நாடுகளும், நண்பர்களும் ஊடகங்கள் மூலம் பேசிக்கொள்ளக்கூடாது. வெளியுறவு விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் வழியாகத் தெரிவிப்பது பாகிஸ்தானின் சட்டதிலேயே இல்லை. கடும் போராட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்திற்கு எதிரான போர் குறித்து மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளால் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். எங்களால் தீவிரவாதத்தை எதிர்த்து தனியாக போரிட முடியும். நாங்கள் அமெரி்ககாவுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவே விரும்புகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகளை விட பாகிஸ்தான் தான் அதிகமான மக்களை இழந்துள்ளது. அமெரிக்கா தன் விருப்பத்திற்காக எந்த நாட்டையும் அழிக்க முடியாது. எங்களாலும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்த முடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. அமெரி்ககாவில் ஒரு 9/11 தாக்குதல் தான் நடந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் அது போன்று 311 தாக்குதல்கள் நடந்துள்ளது என்றார். இந்த பேச்சால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவே முறிந்து போகும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அமெரிக்க பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக நாடு திரும்புமாறு ஹினாவுக்கு கிலானி உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவரும் நாடு திரும்பவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால் இதை பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஹினாவை நாடு திரும்புமாறு பிரதமர் உத்தரவிடவில்லை. அவர் திட்டமிட்டபடி ஐ.நா பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை பேசவுள்ளார். அதன் பின்னர்தான் நாடு திரும்புகிறார் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி நேற்று ராணுவ அதிகாரிகளை அழைத்து வரிசிஸ்தானில் ஹக்கானி அமைப்புக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து பேசினார். இந்த கூட்டம் சுமார் 6 மணி நேரம் நடந்தது.

    திருச்சி இடைத் தேர்தல்: புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட விஜய்காந்த்!


    திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை தேமுதிக புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது தேமுதிக. இந்தத் தொகுதியில் அதிமுக போட்டியிட தேமுதிக தனது ஆதரவைத் தந்தது. இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று நம்பிய தேமுதிக, திருச்சி இடைத் தேர்தலிலும் அதிமுகவை ஆதரிக்கும் திட்டத்தில் இருந்தது.

    ஆனால், தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கே அழைக்காமல் அசிங்கப்படுத்தியது அதிமுக. இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகுவதாகக் கூட முறைப்படி அறிவிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக. இப்போது அதிமுகவிலிருந்து கோபித்துக் கொண்டு வரும் கட்சிகளுக்கு அடைக்கலமும் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

    உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்கு தேமுதிகவைத் தள்ளியது அதிமுக தான். ஆனால், இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், தேமுதிகவை அதிமுக கழற்றிவிட்ட 'நேரம்' தான். காரணம், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே தேமுதிகவுக்கு கூட்டணியில் இடமில்லை என்று அதிமுக அறிவித்திருந்தால், திருச்சி இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை நிச்சயம் நிறுத்தியிருப்பார் விஜய்காந்த்.

    ஆனால், அதைச் செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடனும் பேசுவோம் என்றரீதியில் அதிமுக தரப்பிலிருந்து விஜய்காந்துக்கு தகவல்கள் போனதால், அவர் நம்பிக்கையுடன் காத்திருந்தார். இதனால் தான் திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் யோசிக்கக் கூட இல்லை. கூட்டணிக் கட்சியான அதிமுகவை ஆதரிப்பது என்ற திட்டத்தில் இருந்தார் என்கிறார்கள்.

    இதனால் அக்டோபர் 13ம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் 19ம் தேதி துவங்கியது முதல், அங்கு தனித்துப் போட்டியிடும் எந்த முடிவையும் விஜய்காந்த் எடுக்கவில்லை. இந் நிலையில், நேற்றுடன் அங்கு மனுத் தாக்கலும் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு தேமுதிகவைச் சேர்ந்த யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவை கழற்றிவிட்ட அதிமுகவை எதிர்த்து திருச்சி இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று கருதப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் ஏற்பட்டுள்ள பிரிவு தாற்காலிகமானது தான் என விஜய்காந்த் கருதுவதாகத் தெரிகிறது.

    மக்களவைத் தேர்தல் வரை தனது தயவு அதிமுகவுக்கும், அந்தக் கட்சியின் தயவு தனக்கும் தேவை என்பதை விஜய்காந்த் உணர்ந்துள்ளார். இதனால் திருச்சி இடைத் தேர்தலை விஜய்காந்த் புறக்கணித்துள்ளார் அல்லது புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதன்மூலம் மக்களவைத் தேர்தல் வரை அதிமுகவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்பதை விஜய்காந்த் சுட்டிக் காட்டியுள்ளார்.

    திருச்சி தேர்தலை பற்றி சிந்திக்க நேரமில்லை: இந் நிலையில் இன்று நிருபர்களி்டம் பேசிய விஜய்காந்த், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மிக அதிகமாக உள்ளதால் திருச்சி மேற்கு இடைத் தேர்தலைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூன்றாவது அணி அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று மாலை 4.00 மணி முதல் நான் எனது உள்ளட்சித் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன் என்றார்.ஆனால், அவரது இடைத் தேர்தல் புறக்கணிப்பு தங்களுக்கு உதவும் என திமுக கருதுகிறது. கடந்த தேர்தலில் வெறும் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றார் திமுக வேட்பாளர் நேரு. இந்தத் தோல்விக்கு அதிமுகவுக்கு கிடைத்த தேமுதிக வாக்குகளும் அடக்கம். இந் நிலையில் இப்போது தேமுதிக தனியே வேட்பாளரை நிறுத்தாததால், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக மீது கோபத்தில் உள்ள தேமுதிகவின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கும் என திமுக கருதுகிறது.ஊரு ரெண்டுபட்டா...!

    அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் விவகாரம்!


    நடிகை சோனா கொடுத்த பாலியல் பலாத்கார புகார் விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் ஆகும் நிலை உருவாகியுள்ளது. மங்காத்தா பார்ட்டியில் பங்கேற்றதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் பார்த்தவர்களில் ஒருவரான, பெயர் சொல்ல விரும்பாத, ஒரு நடிகர் நம்மிடம் இப்படிச் சொன்னார்: "எஸ்பிபி சரண் மீது புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அவரை கைது செய்யவில்லை போலீசார். குறைந்தபட்சம், கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை. மாறாக அவர் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள போதிய அவகாசம் அளித்தனர்.

    திமுகவினர் படாதபாடு பட்டாலும் கிடைக்காத முன்ஜாமீன், எஸ்பிபி மகன் கேட்டவுடன் கிடைத்துவிட்டது. அதுவும் பாலியல் பலாத்கார வழக்கில். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக எஸ்பி பாலசுப்ரமணியன் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக சோனாவும் சில மகளிர் அமைப்புகளும் அறிவித்தன.

    ஆனால் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி தராத போலீசார், எஸ்பிபி வீட்டுக்கு எக்கச்சக்க போலீஸ் பாதுகாப்பு போட்டனர். சோனாவை நேரடியாக அழைத்து, போராட்டம் நடத்தினால் உள்ளே தூக்கி போடுவோம் என மிரட்டியும் அனுப்பியுள்ளனர். இது என்ன வகை நியாயம்... இதுதான் போலீஸார் சட்டத்தைக் காப்பாற்றும் லட்சணமா...

    புகார் கொடுத்தவர் எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? அவர் கொடுத்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என்றுதானே பார்க்க வேண்டும்?" என்று ஆதங்கப்பட்டார். இந்த நிலையில், சோனா வழக்கை அரசியல் காமெடியாக மாற்ற வெளிப்படையாகவே முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

    தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் அருள்துமிலன் என்ற வழக்கறிஞர், ஆண்கள் மீது பொய்யான புகார்கள் தரும் நடிகைகள் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

    போராட்டம் நடத்தக்கூடாது என சோனாவை எச்சரித்த போலீஸ், இந்த நபரை மட்டும் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள்? எந்த தைரியத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இதில் எஸ்பிபி சரணின் விளையாட்டு இருக்கலாம் என சோனா தரப்பில் சந்தேகிக்கிறார்கள்.

    "பாதிக்கப்பட்ட சோனா பணம் பறிக்கவோ, வேறு வகையில் பேரம் பேசவோ முயற்சிக்கவில்லை. தன் விருப்பத்துக்கு மாறாக பலாத்காரம் செய்த சரணுக்கு தண்டனை தரவேண்டும் என விரும்பினார். குறைந்தபட்சம் அவர் தனது செயலுக்காக மன்னிப்பாவது கேட்க வேண்டும் என்றுதானே போராடி வருகிறார். ஆனால் எஸ்பிபி மகன் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, சோனாவை கேவலப்படுத்துவதில் குறியாக உள்ளார். அதன் எதிரொலிதான் இதுபோன்ற காமெடி அறிவிப்புகள்," என்றார் அந்த நடிகர்.

    திருந்துங்கப்பா!

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் 'பேசிக்கொண்டே இருக்கலாம்'!


    தமிழ்நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, இலவச செல்போனுடன், வாழ்நாள் முழுவதும் பேசும் வகையிலான மொபைல் இணைப்பை, பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. 
    தமிழகத்தில் திமுக அரசு ஏராளமான இலவசத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தப் பாணியை இப்போது மத்திய அரசும் பின்பற்றத் துவங்கியுள்ளது. சமீபத்தில் கூட தமிழக அரசின் இலவச எரிவாயு - அடுப்புத் திட்டத்தை நாடு முழுக்க அமலாக்கப் போவதாக அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவசமாக செல்போனும், பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பும் திட்டமிட்டுள்ளது. 

    இந்த திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு, எல்.ஜி. செல்போனும், அதற்கான பிரி-பெய்டு இணைப்புக்கான 'சிம்' கார்டும் இலவசமாக வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும், வெளியில் இருந்து வரக்கூடிய அழைப்புடன் பேசிக்கொண்டே இருக்கலாம்.

    வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருபவர்கள் யார்?


    நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 32 க்குக் குறைவாகவும், கிராமங்களில் ரூ 26-க்குக் கீழும் தனி நபர் நுகர்வு கொண்ட அனைவரும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருபவர்களாகக் கருதப்படுவார்கள் என திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார். வறுமைக்கோடு என்பதற்கான அடிப்படை என்ன? அந்த விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டிருந்தது. சீனாவில் நடக்கும் இந்திய - சீனா பொருளாதார பேச்சுக்களில் பங்கேற்கச் சென்றுள்ள மாண்டேக் சிங் அலுவாலியாவிடம், இந்திய நிருபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அலுவாலியா, "உச்சநீதி மன்றம் கேட்ட விவரங்களை திட்டக் குழு ஏற்கெனவே கொடுத்துவிட்டது. ஒரு இந்தியனின் தனி நபர் நுகர்வு சராசரியாக நாளொன்றுக்கு ரூ 32-க்கு குறைவாக இருந்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவராகக் கருதப்படுவார். இது நகர்ப்புறத்துக்குதான். கிராமப் புறங்களில் ரூ 26 ஆக தனி நபர் நுகர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது (இது தனி நபர் வருவாய் அல்ல. ஒரு நாளைக்கு ரூ 32 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை பயன்படுத்துவதுதான் தனி நபர் நுகர்வு ஆனால் ஏழைகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த இந்த அளவுகோல் பொருந்தாது. 

    வறுமைக்கோட்டுக்கான இந்த வரையறை, அதை நிச்சயிக்க நியமிக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் கமிட்டியின் பரிந்துரையாகும். இது ஒரு குடும்பத்தின் நுகர்வு அல்ல. குடும்பத்தில் உள்ள தனிநபர்களின் நுகர்வு அளவீடு என எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். ஆனாலும் அரசு இந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்கிறது," என்றார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...