|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 September, 2011

சிவன் சொத்து குல நாசம்!


வெறும், 28 கோடி ரூபாய் குத்தகைத் தொகையை வசூலிப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை, 28 ஆயிரத்து, 382 வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படக் கூடாது என்பதற்காக, "சிவன் சொத்து குல நாசம்' என ஒரு பழமொழி சொல்லி மிரட்டிப் பார்த்தனர் முன்னோர். நம் ஆட்கள், "ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என, பதில்மொழி சொல்லி, அதைப் புறக்கணித்துவிட்டனர். இன்றைய தேதியில், வளைத்துப்போட ஏற்ற இடம், அரசு புறம்போக்கை விட, கோவில் நிலங்களே என்பது, ஆக்கிரமிப்பாளர்களின் அவதானிப்பு.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 463 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலம் இருக்கிறது. இது தவிர, 22 ஆயிரத்து, 599 கட்டடங்களும், 33 ஆயிரத்து, 627 மனைகளும் உள்ளன. இவற்றில், விவசாய நிலங்களை, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 729 குத்தகைதாரர்கள், "அனுபவித்து' வருகின்றனர்.

நிலத்தையோ, கடையையோ குத்தகைக்கு வாங்கும்போது, அதிகாரிகளின் காலில் விழுந்து, கோவில்களுக்கு கிடா வெட்டி, உத்தரவு வாங்குபவர்கள், அதை வாங்கிய பின், கோவிலுக்கு ஒரு கற்பூரம் கூட ஏற்றுவதில்லை. "வாங்கும் வரை தான் சிவன் சொத்து; வாங்கிய பிறகு நம் சொத்து' என்ற அனுபவ உண்மை தான் அவர்களின் துணிச்சலுக்கு காரணம். குத்தகைத் தொகையை முறைப்படி கட்டுவதில்லை; குத்தகைத் தொகையை அதிகரித்தால் அதை ஏற்றுக்கொள்ளவதில்லை என்பன போன்றவை, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள். உள்ளூர் அதிகாரிகளை சரிக்கட்டி விடுவதால், இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஒருவேளை, ஏதேனும் பக்திமான் அதிகாரி உணர்ச்சிவசப்பட்டு, வழக்கும் தொடுத்துவிட்டால், மூன்று தலைமுறை வரை அவற்றை இழுத்துவிடுவர்.

இவ்வாறு நடக்கும் வழக்கு, வம்படிகளுக்காகவே, மதுரை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு இடங்களில், வருவாய் நீதிமன்றங்களும், சேலம், மன்னார்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில், முகாம் நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோர்ட்டுகளில், வெறும், 28 கோடி ரூபாய் குத்தகை நிலுவைக்காக, 28 ஆயிரத்து, 382 வழக்குகள் தொடரப்பட்டு, 13 ஆயிரத்து, 307 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.இதன்படி, 12 கோடி ரூபாய், கோவில்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என தீர்ப்பாகியிருக்கிறது. ஆனால், அவற்றை குத்தகைதாரர்கள் செலுத்திவிட்டனரா என்ற தகவல் இல்லை. இதுதவிர, இன்னும், 17 கோடி ரூபாய் குத்தகைப் பணம் தொடர்பாக, 15 ஆயிரத்து, 75 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீதான தீர்ப்பு, எந்த ஜென்மத்தில் வருமோ!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...