2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது
ஏற்கனவே சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளோடு, புதிதாக, அரசுக்கு
நம்பிக்கை துரோகம் செய்ததாக, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன்
காரணமாக, ராஜா, கனிமொழிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள ராஜா, கனிமொழி உள்ளிட்ட பலரும்,
பல மாதங்களாக, சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள், ஜாமினில்
வெளிவருவது எப்போது என்ற கேள்வியும் இருந்து வருகிறது. குறிப்பாக,
கனிமொழியை எப்படியாவது ஜாமினில் கொண்டு வந்துவிட வேண்டுமென, தி.மு.க.,
தலைமை தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், டில்லி
பாட்டியாலா கோர்ட்டில், நேற்று அதிரடி திருப்பம் நிகழ்ந்தது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா,
தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகூரியா, ராஜாவின் தனிச் செயலர்
சந்தோலியா ஆகிய மூன்று பேர் மீது, சி.பி.ஐ.,யின் வழக்கறிஞர் லலித், தான்
இவ்வழக்கில் புதிய குற்றச்சாட்டை பதிவு செய்வதாக தெரிவித்தார்.அதன்படி
ராஜா, பெகுரியா, சந்தோலியா ஆகிய மூவரும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு,
409ன் கீழ், குற்றம் இழைத்திருப்பதாக குறிப்பிட்டார். "2ஜி' ஸ்பெக்டரம்
என்பது, அரசின் சொத்து. இதை பகிர்ந்தளிப்பதற்குண்டான உரிமையும் தகுதியும்
உள்ள பதவிகளில் இந்த மூவரும் இருந்தனர்.ஆனால், இவர்கள் நேர்மையற்ற வகையில்
தங்களது உரிமையை பயன்படுத்தியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பான கொள்கையை, சட்டவிரோதமாக
மீறியுள்ளனர். தகுதியற்ற சில கார்ப்பரேட் நிறுவனங்கள், தவறான வழியில் பலன்
பெறும்வகையில், இவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.இவர்கள் மீது, ஏற்கனவே சில
பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ள நிலையில், "அரசுக்கு நம்பிக்கை
துரோகம் செய்திருக்கின்றனர்' என்ற, குற்றச்சாட்டையும் பதிவு
செய்கிறேன்.இவ்வாறு லலித் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதற்கு பிறகு இதுவரை எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல்
செய்யப்படவில்லை.குற்றப்பத்திரிகை தாக்கல் முடிந்து,
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களது
வாதங்களும் கடந்த சில வாரங்களாக கேட்கப்பட்டன.இந்த வாதங்களும் கேட்டு
முடிக்கப்பட்டுவிட்டதால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப் பின்னணியை
தொகுக்கும் பணிகள் ஆரம்பமாகி நடைபெறும். அந்த தொகுப்பு பணிகள்
முடிந்துவிட்டால் அதற்கு பிறகு வாத பிரதிவாதங்கள் முறைப்படி கோர்ட்டில்
துவங்கும்.
இந்த வழக்கமான காரணங்களால் இவ்வழக்கில்
குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஜாமின் கிடைக்காத நிலையும் இருந்து
வந்தது. குற்றப்பின்னணி தொகுப்பு பணிகளை, வரும் 30ம் தேதி துவங்க
இருப்பதாக நீதிபதி ஏற்கனவே கூறியிருந்தார். இப்பணிகள் ஆரம்பமாகி விட்டால்
ஜாமின் கிடைப்பது எளிதாக இருக்கும்.இதனால், குற்றம்சாட்டப்பட்டு
நீண்டநாட்கள் சிறையில் இருந்து வரும் ராஜா, கனிமொழி, சரத்குமார், பெகூரியா,
சந்தோலியா, சரத்குமார் என பலரும், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
எப்படியும், வரும் 30ம் தேதிக்கு பின், ஜாமினில் வெளிவந்துவிடலாம் என்ற
இவர்களது நம்பிக்கை நேற்று பொய்த்துப்போனது.
திருப்பம்: சி.பி.ஐ.,யின் புதிய குற்றச்சாட்டையும் கூடுதலாக
கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளதால், பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய
குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென ராஜா தரப்பில்
கேட்கப்பட்டு, அதன்படி, வரும் 30ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது.அப்போது,
ராஜா உள்ளிட்ட மூன்று பேரும் தங்களது வாதங்களை அடுக்குவார்கள், இந்த
வாதங்கள் கேட்கும் பணி எப்படியும் ஒரு மாத காலம் நீடிக்கும். அதன்பிறகுதான்
குற்றப்பின்னணியை தொகுப்பை நீதிபதி ஆரம்பிக்க இயலும்.இத்தகைய பின்னணி
காரணங்களால் ராஜாவுக்கும் சரி,கனிமொழிக்கும் சரி ஜாமின் கோருவதிலும் அது
கிடைப்பதிலும் மேலும் காலதாமதம் ஆகலாம்.
குற்றம் நிரூபணமானால் ஆயுள் தண்டனையா? நேற்றைய புதிய பிரிவின்
கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது சாதாரணமானது அல்ல. அரசாங்க
பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை தவறாகக்
கையாண்டால், அவர்கள் மீது இந்த பிரிவின் கீழ் குற்றம்
சுமத்தப்படும்.அதன்படி, இ.பி.கோ., பிரிவு 409ன் கீழ் குற்றம்
சுமத்தப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ
கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அத்தகைய கடுமையான பிரிவின் கீழ், ராஜா இப்போது
சிக்கியுள்ளார் என்பதால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment