|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 March, 2013

பார்த்ததில் பிடித்தது!


உலக குருவிகள் தினம்!

அறிவியல் கண்டுபிடிப்புகளும், நவீன தொழில் நுட்பமும் அறிமுகம் ஆவதற்கு முன்பு விவசாயிகளின் உற்ற நண்பனாக சிட்டுக் குருவிகள் திகழ்ந்தன. பயிர்களை அழிக்கும் புழு, பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிட்டுக் குருவிகள் முக்கிய பங்கு வகித்தன.இத்தகைய சிறப்பான சிட்டுக்குருவி இனத்தை இன்றைய தலைமுறை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. உலகில் தற்போது 226 பறவை இனங்கள் அழிந்து வருவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதில் சிட்டுக்குருவி இனம் அழிவது முதன்மையாக உள்ளது.
 
சிட்டுக் குருவிகள் அழிவதற்கு என்ன காரணம்?முதல் காரணம், நாம் பயிரிடும் தானிய வகைகளுக்கு இயற்கை உரம் போடுவதற்கு பதில் ரசாயண உரத்தை பயன்படுத்துவதுதான். ரசாயன கலவையிலான பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வளரும் தானியங்களை சாப்பிடும் சிட்டுக் குருவிகள் இறந்து விடுகின்றன.ஒரு வேளை தப்பி பிழைத்தாலும் அந்த சிட்டுக்குருவிகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அவை போடும் முட்டைகள் உடனே உடைந்து விடுகின்றன.
 
அடுத்து நாம், சுற்றுச் சூழலை பற்றி கவலைப்படுவதில்லை. சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்களை நாம் தெரிந்தோ, தெரியாமலோ அழித்து வருகிறோம்.சமீபகாலமாக செல்போன் டவர்கள் சிட்டுக்குருவிகளுக்கு மிகப் பெரும் எமனாக மாறியுள்ளன. செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு (சிக்னல்) சிட்டுக் குருவிகளின் முட்டைகளை பொரிக்க விடுவதில்லை.
 
இப்படி நாம் எல்லா கோணங்களிலும் சிட்டுக் குருவிக்கு பாதகமாக நடந்து வருகிறோம்.அதனால்தான் தமிழ்நாட்டில் சுமார் 60 சதவீத கிராமங்களில் சிட்டுக்குருவி இனமே இல்லாமல் போய் விட்டது.அபூர்வமாகி வரும் சிட்டுக் குருவி இனத்தை நம் கண் முன்னே அழிய விடலாமா? நமது அடுத்த தலைமுறையும் சிட்டுக் குருவிகளின் "கீச்...கீச்...'' ஒலி கேட்டு குதூகலிக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் மார்ச் மாதம் 20-ந்தேதியை உலக குருவிகள் தினமாக அறிவித்துள்ளனர். நாளை (புதன்கிழமை) உலக குருவிகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நீங்களும் முடிந்த அளவுக்கு சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள். ஒரு இனத்தை காப்பாற்றிய புண்ணியமாவது உங்களுக்கு கிடைக்கும்!

போச்சு-வார்த்தை பேசாத பேச்சு!


என்னங்க உங்க அமைச்சரவை சகாக்களுங்க இப்படி ஆயிட்டாங்க..?
எப்படி ஆயிட்டாங்க...? ஒருத்தர் இன்னாடான்னா எதுக்கெடுத்தாலும் 15 நாள் டயம் கொடுக்குறாரு... இன்னொருத்தரு இன்னாடான்னா குடுகுடுப்பைக் காரன் ரேஞ்சுக்கு மார்ச் 22க்கு அப்புறம் என்ன நடக்கும்ன்னு பாருங்கங்கிறாரு... ஓ... அப்படியா? சரி நாங்க நாளைக்கு தில்லிக்குப் போய் எல்லாத்தையும் அங்க காதுல போட்டு வெக்கிறேன். இன்னும் 24 மணி நேரத்துல என்ன நடக்குதுன்னு பாருங்க..?

விளையாட்டில் இப்படி ஒரு விளையாட்டு!

 
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில், இரண்டாவது இடத்தை பிடிக்க, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.டெஸ்ட் தரவரிசையில் மார்ச் 30 தேதியில் "டாப்-4' இடங்களில் இருக்கும் அணிகளுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கோப்பை மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு 128 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா (ரூ. 2.5 கோடி) அணி முதலிடத்தை உறுதி செய்துவிட்டது. அடுத்த இடத்தை பிடித்து ரூ. 1.9 கோடியை தட்டிச் செல்ல, இங்கிலாந்து (114), ஆஸ்திரேலியா (112), இந்தியா (111) இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 2வது இடம் பிடிக்க, டில்லி டெஸ்டில் (மார்ச் 22-26) ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அதேநேரம், மூன்றாவது டெஸ்டில் (மார்ச் 22-26) இங்கிலாந்து அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைய வேண்டும். இதன்மூலம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா 112 புள்ளிகள் பெறும். தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி 2வது இடத்தை பிடிக்கும்.

* இங்கிலாந்து அணி, 2வது இடத்தை தக்கவைத்துக் கொள்ள நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த பட்சம் "டிரா' செய்தாலே போதுமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றால் கூட எவ்வித பாதிப்பும் வராது.

* ஆஸ்திரேலிய அணி 2வது இடத்துக்கு முன்னேற, டில்லி டெஸ்டில் இந்தியாவை கட்டாயம் வீழ்த்த வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்திடம் தோற்க வேண்டும். தரவரிசைப் பட்டியலில் மூன்று, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு ரூ. 1.35 கோடி, ரூ. 81 லட்சம் கிடைக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...