எந்த வம்பு தும்புக்குக்கும் போகாமல்
சாதுவாய் இருக்குது பசு மாடு!
சோறு கண்ட இடம் சொர்க்கமென்று
விழுந்த இடத்தில் தூங்குது, கோயில் மாடு!
காலையில் ஆபீஸ் போய்
மாலையில் வீடு வருது செக்கு மாடு!
உழைத்து உழைத்து
ஓடாய் தேயுது உழவு மாடு!
எந்தக் கட்டுக்குள்ளும் சிக்காமல்
சுதந்திரமாய் சுற்றித் திரியுது மலை மாடு!
பத்தடிக்கு பத்தடி உட்கார்ந்த இடத்தில்
காரியம் முடிக்குது, பட்டி மாடு
செல்ஃபோனும் பைக்குமாக
வர்த்தகம் பேச ஓடுது... வண்டி மாடு!
ஏ.சி. அறையில், ஆங்கிலம் பேசி
ஹை-டெக்காக டை கட்டுது ஜெர்சி மாடு!
இரவு முழுவதும் ஊரைச் சுற்றி சந்து முனையில்
டூ-வீலரை தள்ளுது ஊக்காளி மாடு!
துஷ்பிரயோகம் செய்து ஓசைப் படாமல்
மக்கள் காசை சாப்பிடுது கள்ள மாடு!
சுயநலமாய் சமூக வயலை மேயுது
புலித் தோல் போர்த்திய பசு மாடு!
மேலதிகாரிகளிடம்
தலையாட்டி வாழுது பூம்பூம் மாடு!
அக்கிரமம் கண்டு, பொங்கியெழாமல்
மேய்ந்து திரியுது மந்தை மாடு!
அநியாயத்தை எதிர்த்து
தனியனாய் ஜெயிக்குது ஜல்லிக்கட்டு மாடு!
மாடுகளில் மனிதர்களுண்டு
மனிதர்களில்தான் மனிதர்கள் இல்லை!
கவிதை: எஸ்.கதிரேசன்