ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
23 June, 2014
கூடிய விரைவில் பிசாசு முனையும், கச்சத்தீவும் இணைந்துவிடும்!
சமீப காலங்களில், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும், வளர்ந்து வரும் எல்லைப் பங்கீடுகள், மிகப்பெரிய பிரச்னைகளாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா - இலங்கை இடையே, வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவும், இரு நாடுகளுக்கும் இடையே, மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. சரித்திர மற்றும் ஆவணங்களின் ஆதாரப்படி, கச்சத்தீவு பண்டைய காலத்தில், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது. 1974ல், மத்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததால், இந்திய மீனவர்கள், தங்கள் மீன்பிடி படகு களை ஓய்விற்கு நிறுத்த முடியாமலும், வலைகளை உலர வைக்க முடியாமலும், ஏன் அதன் துாரத்து சுற்று வட்டாரங்களில் மீன் பிடிக்க இயலாமலும், பலவகையான உயிர் மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.எந்த அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், பூமியின் அமைப்பையும், நடைபெறும் புவியியல் மாறுதல்களையும் படம் எடுக்கும் செயற்கைக்கோள் படங்களையும், புவியின் தரைமட்டம் மற்றும் கடல் கீழ் தரைமட்டம் ஆகியவற்றையும் காண்பிக்கக் கூடிய வான் வெளிசார், 'ஈ டோப்போ' படங்களையும் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த, ஒரு நிலப்பரப்பு என்பது தெரிகிறது.
கிட்டத்தட்ட, 7,000 கி.மீ.,க்களுக்கு மேலான நீளமுடைய, இந்திய கடலோரப் பகுதி, ஒரு நேர்கோடு போல் இல்லாமல், குவியமாகவும், குழியாகவும் மாறி மாறி அமைந்து வளைந்தும், நெளிந்தும், சில இடங்களில் முக்கோண வடிவமாகவும், கடலுக்குள் நீட்டியபடியும் அமைந்துள்ளது. இவ்வமைப்பு, இந்திய கிழக்கு கடற்கரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியக் கடற்கரையின், இதுபோன்ற அமைப்பிற்கு, இந்தியத் தட்டில் ஏற்பட்டபடி இருக்கும் வளைவுகள் மற்றும் வெடிப்புகளே காரணம்.
மேலும், கடற்கரை ஓரமாக இருக்கும் நீரோட்டங்களும், கடலோரப் பகுதிகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்திய கிழக்கு கடற்கரை ஓரத்தைப் பொருத்தவரை, இந்நீரோட்டமானது, பிப்ரவரி முதல் அக்டோபர் வரை, (ஒன்பது மாதங்களில்), தெற்கே கன்னியாகுமரியில் இருந்து இலங்கையைச் சுற்றி, வடக்காக கடற்கரை ஓரமாக ஓடி, மேற்கு வங்கத்தில் இருந்து தெற்காக, கடிகாரம் சுற்றுவது போல் திரும்பி, அந்தமான் வரை செல்கிறது.நவம்பர் முதல் ஜனவரி வரை (மூன்று மாதங்கள்) உள்ள வடகிழக்கு பருவமழை காலங்களில், அந்தமானில் இருந்து திரும்பி, இந்நீரோட்டம் கடிகார சுற்றிற்கு, எதிர்மறையாகச் சுற்றி வங்கதேசக் கடற்கரை ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்கரை வழியாக, தெற்காக ஓடி, தமிழக கடற்கரையை அடைகிறது.இதுபோன்று, ஒரு வருடப் பருவத்தில், இரு திசைகளிலும் சுற்றும் கடலோர நீரோட்டம், அலைகள் கொண்டு வரும் கடல் கீழ் மணலோடு, வங்கக் கடலில் கலக்கும் இந்திய நதிகளின் மணலையும் தன்பால் இழுத்துக் கொண்டு சுற்றும் போது, குவியான மற்றும் முக்கோண கடற்கரை ஓரங்களை அரித்தும், குழிவடிவக் கடலோரப் பகுதிகளில் மணல் துகள்களை கொட்டவும் செய்கிறது.
இவ்வாறு, இந்நீரோட்டத்தால் கொட்டப்பட்ட மணலே திருநெல்வேலி, ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் முயல்தீவு, உப்புத் தண்ணீர் தீவு, நல்லத் தண்ணீர் தீவு என்று பல தீவுகளாகவும், நதிகளின் முகத் துவாரங்களில் மணல் மேடுகளாகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் கடற்கரை மணல் மேடுகளாகவும் தென்படுகின்றன.இவ்வாறு தெற்காக, மூன்று மாதங்களில் ஓடும் கடல் நீரோட்டம், தமிழகத்தில் வேதாரண்யத்திற்கும், யாழ்ப்பாணப் பகுதிக்கும் இடையே நுழைந்து, கடிகாரச் சுற்றிற்கு எதிர்மறையாகச் சுற்றுகிறது.இவ்வாறு, கடல் நீரோட்டம் கடிகாரச் சுற்றிற்கு எதிர் சுற்றாக வடக்கிலும், கடிகாரம் சுற்றும் திசையில் தெற்கிலும், ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சுற்றுவதால், நீரோட்டச் சலனமற்ற, இவ்விரு நீரோட்டங்களுக்கும் இடைபட்ட ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம், ராமேஸ்வரம், பிசாசு முனை வரையிலும் நீரோட்டம் கொண்டு வந்த மணல் கொட்டப்பட்டு, நீளமான நிலப்பகுதியாக உருவாகி உள்ளது.இவை, ETOPO படத்தில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும் நன்கு தெரிகிறது. பிசாசு முனையில் இருந்து, வடக்கிழக்கே திரும்பும் இதே நீரோட்டம் ராமேஸ்வரம், பிசாசு முனையில் மணலைக் கொட்டிய பின், எஞ்சிய மணலை பிசாசு முனைக்கு வடகிழக்கே கொட்டி, கச்சத்தீவாக உருவாக்கி உள்ளது.ராமேஸ்வரம், பிசாசு முனையில் இருந்து கச்சத்தீவு வரை, இவ்விரு நிலப்பகுதிகளுக்கும் இடையேயுள்ள தொடர்ச்சி, கடல் மட்டத்திற்கு கொஞ்சம் கீழே மஞ்சள் நிறத்தில், ETOPO படத்தில் நன்கு தெரிகிறது. கடல் நீரோட்டம், இதே திசையில் சுற்றினால், கூடிய விரைவில் ராமேஸ்வரத்தில் உள்ள பிசாசு முனையும், கச்சத்தீவும் இணைந்துவிடும் என்றும் தெரிகிறது.
மேற்கே ராமநாதபுரத்தில் இருந்து, கிழக்கே மண்டபம் வரை காணப்படும் மணல் மேடுகள், 3,500 ஆண்டுகள் வயது கொண்டவையாக, கார்பன் வயதுக் கணிப்பு கள் காண்பிப்பதால், ராமேஸ்வரம், பிசாசு முனை, கச்சத்தீவும், 3,500 மற்றும் 3,000 ஆண்டுகள் வயது கொண்டவையாக இருக்கும் என்று தெரிகிறது.ஆனால், யாழ்ப்பாணம் தீபகற்பத்தைச் சுற்றியுள்ள இந்தியாவை நோக்கி, வளைந்து காணப்படும் டேல்ப் தீவு உள்ளிட்ட தீவுகள், 4,000 ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட களிமண், மணல், மணற்பாறைகள் கொண்ட படுகைப் பாறைகளாகும். ஆகவே, இவ்வுண்மைகள் எல்லாம், கச்சத்தீவு நிலவியல் ரீதியாக, இந்தியாவின் ஒரு பாகமே என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)