அரசியல் கட்சிகளின் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்புக்கு உள்பட்டவையே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்துள்ளது.ஜனநாயக சீர்திருத்த சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பேயர்வால் ஆகியோர், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய 6 அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் எழுதி இருந்தனர். நன்கொடையாக பெற்ற தொகை, நன்கொடை வழங்கியவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தனர். ஆனால், அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் வராது எனக் கூறி, 6 கட்சிகளும் தகவல் தர மறுத்தன.
சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பேயர்வால் ஆகியோர் இதுகுறித்து மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தனர். இந்த மனுவை தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிஸ்ரா, தகவல் ஆணையர் எம்.எல். சர்மா மற்றும் அன்னபூர்ணா தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.இந்த மனு மீதான விசாரணையின்போது, தங்களது மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில்
3 முக்கிய வாதங்களை பேயர்வால் முன் வைத்தார். குறிப்பாக, மத்திய அரசிடம் மறைமுகமாக நிதியுதவி பெறுவதால் அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உள்பட்டவையே என கூறினார்.இதனை ஏற்றுக் கொண்ட அமர்வு இன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. தகவல் உரிமை சட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டவையே என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களது தலைமை அலுவலகங்களில் மத்திய பொதுத் தகவல் அதிகாரியையும் (சிபிஐஓ), மேல் முறையீட்டு அதிகாரிகளையும் 6 வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட உள்ள சிபிஐஓ-களுக்கு சிஐசி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆர்டிஐ சட்டத்தின்படி, மனுதாரர்கள் கேட்டுள்ள விவரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பதையும், தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்வதற்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதையும் இந்த அமர்வு சுட்டிக் காட்டியுள்ளது. இவ்வாறு மறைமுகமாக அரசின் நிதியுதவியைப் பெறும் அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்டத்துக்கு உள்பட்டு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளன என்று சிஐசி அமர்வு கூறியுள்ளது.