மத்திய அரசிடமிருந்து போதிய நிதி உதவி கிடைக்காததால் பஸ், பால்,
மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக முதல்வர்
ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஆற்றிய உரை:
பொதுமக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் இன்றியமையா சேவைகள் சென்றடைய
வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்கள்
உருவாக்கப்பட்டன. இந்த உயரிய நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில், அதன்
செயல்பாடுகள் முடங்கிப் போகும் அளவுக்கு, முந்தைய தி.மு.க. அரசு, பொதுத்
துறை நிறுவனங்களை சீரழித்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஏகோபித்த
ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட எனது தலைமையிலான அரசு, தேர்தல்
வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிக் கொண்டு வந்த அதே சமயத்தில்,
துறை வாரியான ஆய்வுகளையும் மேற்கொண்டேன். இந்த ஆய்வுகளின் போது, தமிழக அரசு
மட்டுமல்லாமல் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள்
உட்பட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் கடும் கடன் சுமை காரணமாகவும், நிதி
நெருக்கடி காரணமாகவும் முடங்கும் அபாயத்திற்கு வந்துள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை சீர் செய்து மக்களுக்கு நன்மை
பயக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களையும், சமூக நலப் பணிகளையும்
முடுக்கிவிட முடிவு செய்து, மின் வாரியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தும்
வகையில் சிறப்பு உதவிகள் வழங்கப்பட வேண்டும்; அதிக அளவில், கூடுதல் விலை
கொடுத்து, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்கும்
பொருட்டு, மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து கூடுதலாக 1000 மெகாவாட்
மின்சாரம் வழங்கப்பட வேண்டும்; மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க,
தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும்; மடிக் கணினி வழங்கும்
திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும்; கடலோரப் பகுதி மீனவர் மேம்பாட்டு
திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி 14 ஜூன், 2011 அன்று புது டெல்லி சென்று பாரதப் பிரதமர்
அவர்களிடத்தில் ஒரு கோரிக்கை மனுவினை அளித்தேன். இது குறித்து நீண்ட நேரம்
என்னுடன் உரையாடிய பாரதப் பிரதமர், ஆவன செய்வதாக உறுதி அளித்தார். பின்னர்,
இந்த கோரிக்கை மனு மத்திய திட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும்,
திட்டக் குழு இது குறித்து உரிய முடிவு எடுக்கும் என்றும் பாரதப் பிரதமர்
தெரிவித்தார்.
6 ஜூலை, 2011 அன்று மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் திரு. மான்டெக்
சிங் அலுவாலியா அவர்களை நான் சந்தித்த போது, இந்தச் சிறப்பு நிதியுதவி
குறித்து அவருக்கு நினைவூட்டினேன். இருப்பினும், திட்டக் குழுவிடமிருந்தோ
அல்லது மத்திய அரசிடமிருந்தோ எவ்வித நிதி உதவியும் கிடைக்கவில்லை. அதே
சமயத்தில், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க
அரசுக்கு மட்டும் 21,614 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு நிதி தொகுப்பு
உதவி வழங்கியுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் அல்லாத கட்சிகள், காங்கிரஸ்
தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநில
அரசுகளை மத்திய அரசு புறக்கணித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசு எந்த உதவியையும் தமிழகத்திற்கு செய்ய முன் வராத நிலையில்;
தமிழகத்தின் நிதி நிலைமையும் அதலபாதாளத்தில் இருக்கின்ற சூழ்நிலையில்;
முடங்கும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை, குறிப்பாக
மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் நிலையில் இருக்கின்ற
பொதுத் துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு
இருக்கிறது. ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற பழமொழியை
நாம் அனைவரும் அறிவோம். மரணப் படுக்கையில் உள்ள இந்த பொதுத் துறை
நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால், அவை முற்றிலும்
செயலற்று போய்விடும். அதனால் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக ஏழை, எளிய
மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, அத்தகைய ஒரு நிலையை
தடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்த அரசு உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை எடுத்துக் கொண்டால், 31 மார்ச், 2011
அன்றைய நிலவரப்படி 40,659 கோடி ரூபாய் நஷ்டத்தில் அது இயங்கிக் கொண்டு
இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக்
காலத்தில் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல்,
மின் தேவையை சமாளிக்க மின்சாரத்தை வெளிச் சந்தையிலிருந்து அதிக விலை
கொடுத்து வாங்கியது தான். 2010-2011 ஆம் ஆண்டில் மட்டும் 19,302 கோடி
ரூபாய் அளவுக்கு வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு இருக்கிறது.
எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2005-2006 ஆம் ஆண்டில், 4,911
கோடி ரூபாய் என்று இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த
நஷ்டத்தை 40,659 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், மின்
மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக மாற்றிய பெருமை
முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியையே சாரும். இது மட்டுமல்ல.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி ரூபாய் ஆகும். இதே
நிலைமை நீடித்தால், இந்த நிதி ஆண்டின் இறுதியில் இந்தக் கடன் அளவு 53,000
கோடி ரூபாயை தாண்டிவிடும். மேலும், மின்சாரம் விற்பனை செய்தவர்களுக்கும்,
ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய தொகை 10,000 கோடி ரூபாய் ஆகும்.
தமிழக அரசின் மொத்த கடன் அளவான 1 லட்சத்து 1 ஆயிரத்து 349 கோடி ரூபாயுடன்,
மின்சார வாரியத்தின் கடன் அளவான சுமார் 53,000 கோடி ரூபாயை ஒப்பிட்டுப்
பார்த்தால், மின் வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெளிவாகும். கடந்த சில
ஆண்டுகளாக மின்சார வாரியம் புதியதாக கடன் வாங்கி, பழைய கடனுக்கான தவணைத்
தொகையையும், வட்டியையும் செலுத்தி வருகிறது.
2010-2011 ஆம் ஆண்டில், 21,385 கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் பெற்று, 15,000 கோடி ரூபாய்க்கு
மேல் கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தியுள்ளது. இவ்வாறு
கடனில் மூழ்கி திவாலாகும் நிலையை மின்சார வாரியம் எட்டிவிட்டது. இந்த
நிலையை மாற்ற வேண்டுமெனில், மின்சார வாரியம் மேலும் கடன் பெறவேண்டும்.
ஆனால், மதிப்பீட்டு நிறுவனங்கள் மின்சார வாரியத்தின் மதிப்பை
குறைத்துவிட்டதால், வெளிச்சந்தையில் இருந்து கடன் பெற வழியில்லை. தமிழ்நாடு
மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என பாரத ரிசர்வ் வங்கி,
வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு முழுமைக்கும்
வழங்கப்பட வேண்டிய மானியத் தொகையான 2,016 கோடி ரூபாயை முன்னதாகவே அரசு
வழங்கியுள்ளது. மேலும், பங்கு மூலதனம் மற்றும் றயலள யனே அநயளே யனஎயnஉந ஆக 1,055 கோடி
ரூபாயை அரசு அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வெளிச்சந்தையில் இருந்து
மின்சாரம் வாங்குவதற்காக 500 கோடி ரூபாயை அரசு வழங்கி உள்ளது. இதற்கு
மேலும் மின்சார வாரியத்திற்கு பணம் அளிக்க மாநில அரசிடம் பணம் இல்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீரமைக்க வேண்டிய
பொறுப்பும், மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டிய கடமையும் எனது தலைமையிலான
அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதே போன்று தான் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன.
எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை
விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக
வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில்
பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம்
மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு
ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.
போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில்
அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும்
எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. 2001
ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை
தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால்
உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி
பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன.
இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு
இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால்,
போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக
அரசு ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. அரசுப்
போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை
தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை
இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதே போன்று ஆவின் நிறுவனத்தின் நிலைமையும் முந்தைய தி.மு.க. அரசின்
தவறான நடவடிக்கைகளால், மோசமடைந்துவிட்டது. எனது தலைமையிலான அ.தி.மு.க.
ஆட்சியில், 2006-ஆம் ஆண்டு வரை, லாபம் ஈட்டி வந்த பால் கூட்டுறவு சங்கங்கள்
எல்லாம் 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளாக
நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள்
கழித்தும் பணம் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஆவின் நிறுவனம்
உள்ளது. கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் சுமார் நான்கு
ரூபாய் அளவுக்கு ஆவின் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, 22 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வந்த ஆவின் நிறுவனம்,
தனது கொள்முதலை குறைத்துக் கொள்ள வேண்டிய மோசமான நிலைக்குத்
தள்ளப்பட்டுவிட்டது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு
பணம் கொடுப்பதற்காக எனது தலைமையிலான அரசு மாதா மாதம் 17 கோடி ரூபாய்
அளவுக்கு ஆவின் நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்து வருகிறது. தனியார்
நிறுவனங்களை விட, ஆவின் பால் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவதன்
காரணமாக, பொதுமக்கள் அடையும் பயனை விட இடைத் தரகர்கள் அதிக அளவில் பயன்
பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கும் வருவாய்
இழப்பு ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்
கோரி பால் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு
தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு
போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுப்பது
குறித்தும், அந்த நிறுவனங்கள் தங்களது இன்றியமையாப் பணியை மக்களுக்கு
தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கான வழிவகைகள் குறித்தும் இன்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, “வெள்ளம் வரும் முன்னே
அணை போட வேண்டும்” என்ற பழமொழிக்கேற்ப சில முடிவுகளை எடுக்க வேண்டிய
கட்டாயத்திற்கு எனது தலைமையிலான அரசு தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரையில், மின் கட்டணத்தை
நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே
மின்சார உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை மாற்றியமைப்பது
பற்றி ஆய்வு செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை
வைத்து,
அந்த ஆணையம் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து மின் கட்டணத்தை
நிர்ணயம் செய்து முடிவுகளை அறிவிக்கும். அதே சமயத்தில், விவசாயிகள், நெசவாளர்கள், ஒரு விளக்கு திட்டத்தின் கீழ்
வருபவர்கள், ஆகியோருக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வழி வகை
செய்யும் வகையில் அதற்கான மானியத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்த
அரசு தொடர்ந்து வழங்கும்.
இது மட்டுமல்லாமல், அதிக அளவு மின்சாரம் உபயோகிப்பவர்களைத் தவிர, ஏனைய
வீட்டு மின்சார பயனீட்டாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கும். மின்
அமைப்புகளின் நிதிநிலையை சீர்படுத்தவும்; புதிய உற்பத்தித் திட்டங்களை
தொடர்ந்து செயல்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்கவும்; நிதி உதவி தேவை
என்பதைக் கருத்தில் கொண்டு, 2,000 கோடி ரூபாய் கூடுதல் பங்கு மூலதனமாக
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எனது தலைமையிலான அரசு வழங்கும். மேலும், மின்சார திருட்டை ஒழிப்பது; மின் உற்பத்தி நிலையங்களின்
செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்பது; மின்சார
பகிர்மான கட்டமைப்புகளை மேம்படுத்துவது; மின் இழப்பை குறைப்பது; நிர்வாக
செலவுகளை நெறிமுறைப்படுத்தி கட்டுப்படுத்துவது; செயல்படுத்தப்பட்டு வரும்
மின் திட்டங்களை துரிதப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு
எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரையில், டீசல், உதிரி பாகங்கள்
மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழகங்கள்
செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக்
கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை
என்பதையும் கருத்தில் கொண்டு; சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர்
ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா
என்றும்; விரைவு, மற்றும் Semi deluxe புறநகர் பேருந்துகளுக்கு கிலோ
மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை
56 பைசா என்றும்; Super Deluxe மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு
கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும்
கட்டணத்தை 60 பைசா என்றும்; Ultra Deluxe புறநகர் பேருந்துகளுக்கு கிலோ
மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை
70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர
பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3
ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை
நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம் 2
ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும், இவ்வாறு
உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணம் கூட தென் மாநிலங்களில் உள்ள பேருந்துக்
கட்டணங்களை விட குறைவானதே ஆகும். பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பாலின் கொள்முதல்
விலையை உயர்த்தி வழங்க கொடுத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகும்.
தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் வழங்கும் பால் கொள்முதல் விலையை விட அதிக
விலையினை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு உற்பத்தி
செய்யப்படும் 150 லட்சம் லிட்டர் பாலில், 22 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே
தற்போது ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. தனியார் பால்
நிறுவனங்கள் விவசாயிகளுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும்
போது, ஆவின் நிறுவனம் குறைவாக கொடுப்பது நியாயமானதல்ல. எனவே, பசும்
பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை
18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர்
ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து
28 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் ஏற்கெனவே பெருத்த நட்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால்
கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு; அட்டைதாரர்களுக்கு
வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது
வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட
பின்பும் வெளிச் சந்தையில் விற்கப்படும் பாலின் விலையை விட ஆவின் பால் விலை
குறைவாகவே இருக்கும். மேலும், தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள
விலையை விடவும் குறைவாகவே இருக்கும்.இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலோட்டமாக
பார்க்கும் போது, அவை பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என்ற எண்ணத்தை
தோற்றுவித்தாலும்; இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரண காரியங்களை
ஆராய்ந்து பார்த்தால், அது அவ்வாறு அல்ல என்பது விளங்கும். முற்றிலுமாக
முடங்கிப் போயுள்ள நிறுவனங்களை கைதூக்கி விடவில்லை என்றால், இந்த
நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும்.
டீசல் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே
செல்கின்ற நிலையில், சிறப்புக் கடன் உதவி என்ற வகையில், மத்திய அரசு
தமிழகத்திற்கு ஒரு ரூபாயைக் கூட அளிக்காத நிலையில், மத்திய
தொகுப்பிலிருந்து மாநில அரசு கோரிய 1000 மெகாவாட் மின்சாரத்தை கூட வழங்காத
நிலையில், தமிழக அரசே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளித்துக்
கொண்டிருக்கும் நிலையில், இந்த பொதுத் துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட
வைக்க தமிழக மக்களாகிய உங்களிடம் அல்லாமல் நான் வேறு எங்கே செல்ல
முடியும்? எத்தனை முறை கேட்டாலும், தமிழ்நாட்டிற்கு உதவி செய்ய மத்திய அரசு
மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம்
சென்று உதவி கேட்க முடியும்? முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு,
தமிழ்நாட்டை முற்றிலுமாக சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும்
நிலைக்கு தள்ளிவிட்ட சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற
தேர்தலில், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தமிழக மக்களாகிய நீங்கள்,
ஆட்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள். கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டை சீரமைக்க,
மத்திய அரசு ஓரளவிற்காவது உதவி செய்யும் என்று எதிர்பார்த்து கடந்த 6 மாத
காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழ்நாட்டை அடியோடு
புறக்கணித்து, கைவிட்டுவிட்ட நிலையில், எனதருமை தமிழக மக்களாகிய உங்களிடம்
வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்? எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள்
அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா உரை நிகழ்த்தினார்.