கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, டாய் இச்சி அணுமின் நிலையத்தின் அனைத்து உலைகளும் தாமாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டன. ஒன்றாம் எண் உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்ததால், வெப்பம் அதிகரித்தது.அதனால், பீதிக்குள்ளான அதிகாரிகள், கடல் நீரை உட்புறம் செலுத்திக் குளிர்விக்க முயன்றனர். எனினும் அம்முயற்சி பலனளிக்காமல், நேற்று முன்தினம் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. உலையின் உட்புறத்தில், அணுக்கரு பிளப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் சீசியம் - 137 மற்றும் ஐயோடின் - 131 ஆகிய தனிமங்கள் கிடந்தது கண்டறியப்பட்டது.மேலும், அணுக் கழிவு கலந்த நீர் வெளியேறியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அணுக்கதிர் வீச்சு அபாயம் ஏற்படலாம் என்ற கருத்தில், அணுமின் நிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., வட்டாரத்தில் வசித்த 45 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.இச்சம்பவத்தில் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலியானார். மேலும் மூன்று பேருக்கு கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அபாயத்தில் இன்னொரு உலை: இந்நிலையில், மூன்றாம் எண் உலையில், நேற்று அதிகாலை முதல், திடீரென குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து, உலைக்குள் வெப்பம் அதிகரித்து விடாமல் இருக்க போரிக் அமிலம் கலந்த கடல்நீர் உலைக்குள் செலுத்தப்பட்டது.பொதுவாக அணு உலை நிறுத்தம் தானியங்கி நடைமுறையாகும். ஆனால் அதிலிருந்து அணுக்கசிவு ஏற்படாதவரை அபாயமில்லை. அதே சமயம் அளவுக்கதிக வெப்பத்துடன் இருக்கும் அணு உலையை குளிரூட்டுவது சுலபமானதல்ல. உலைக்குள் வெப்பம் அதிகரிக்கும். அதனால் அழுத்தமும் அதிகரிக்கும். உலையின் வெளிப்புற கொள்கலச் சுவர் இந்த அதிக அழுத்தத்தால், வெடித்து விடும். இதுதான் ஒன்றாம் எண் அணு உலை வெடிப்பில் நிகழ்ந்தது.இதைத் தடுப்பதற்காக, உலைக்குள் அதிகரித்து வரும் அழுத்தத்தை வால்வுகளை திறந்து வெளியேற்ற அதிகாரிகள் முயன்றனர். அதை வெளியேற்றுவதிலும் அளவு இருக்கிறது. இல்லை எனில் அதிக அளவு அணுக்கதிர் நச்சு பரவி பலரையும் பாதிக்கும். அம்முயற்சி வெற்றி பெற்றதா என்பது பற்றிய தகவல்கள் வரவில்லை.இந்த அணுமின் உலைகளை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம்(டெப்கோ), வெளியிட்ட அறிக்கையில், "நிலையத்தைச் சுற்றிப் பரவியுள்ள கதிர்வீச்சு அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து க்யோடோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இது ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி நிர்ணயித்துள்ள சட்டப்பூர்வ அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், மூன்றாம் எண் உலையில் வெப்பம் மற்றும் அழுத்தம் அதிகரித்து எந்நேரம் வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 160 பேர் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு லட்சம் பேர் வெளியேற்றம்:இதைத் தொடர்ந்து, டாய் இச்சி அணுமின் நிலையத்தை ஒட்டி 20 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அனைவரும் அவசர கதியில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, கதிர்வீச்சினால் தைராய்டு புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சுற்றுவட்டார மக்களுக்கு ஐயோடின் சத்துப் பொருட்கள் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.நிலவரத்தை ஆராய்ந்து வரும், அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் கடந்த 1986ல் நடந்த செர்னோபிள் அணுமின் உலை விபத்து பாதிப்பைப் போல ஜப்பானிலும் ஏற்படக் கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.