|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 July, 2011

சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்!

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.

சர்க்கரைக் கொல்லி: சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.

விதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

விஷக்கடி போக்கும்: வண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema)

நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.

சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் திருமலைக்கு முதலிடம்!

மத்திய சுற்றுலாத்துறை வெளியிட்ட 2010-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் உள்நாட்டவர்கள் அதிகம்பேர் பார்வையிட்ட இடங்களில் திருப்பதி, திருமலை கோயில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஏறக்குறைய 155.8 மில்லியன் பேர் இந்த கோயிலைப் பார்வையிட்டுள்ளனர். தாஜ்மஹால் அமைந்துள்ள உத்தரப் பிரதேசத்தைவிடவும், அஜந்தா எல்லோரா அமைந்துள்ள மகாராஷ்டிராவை விடவும் ஆந்திரப் பிரதேசத்துக்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 கோடி பேர் பட்டினியால் அவதி தினம் 6 பேர் பலி சோமாலியாவில்!

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 1992-ம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது. அப்போது பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் பலியானார்கள்.   ஐ.நாசபை, மேலை நாடுகளின் உதவியால் நிலைமை சீறடைந்தது.  இந்த நிலையில் இப்போது மீண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கின்றனர். ஒரு கோடியே 13 லட்சம் பேர் பட்டினி கிடப்பதாக ஐ.நாசபை தகவல் தெரிவித்துள்ளது.

சோமாலியா நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதுவும் இல்லை. 1990-ம் ஆண்டு அங்கு அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு எந்த ஆட்சியும் இல்லை. நாட்டின் பெரும் பகுதியை  தீவிரவாத அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. 
அவர்கள் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கிறார்கள். அதை மீறி தொண்டுநிறுவனங்கள் உணவு போன்றவற்றை கொடுத்து உதவி செய்தால் தொண்டு நிறுவன ஊழியர்களை சுட்டுக் கொல்கிறார்கள். 

எனவே, ஐ.நாசபை உள்ளிட்ட எந்த தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை. இதனால் வறட்சியால் பாதித்து மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். தினமும் 6 பேர் பட்டினியில் சாவை சந்திக்கின்றனர். அதில் பாதிபேர் குழந்தைகளாக உள்ளனார். 

வறட்சி தாங்கமுடியாமல் பெரும்பாலான மக்கள் பக்கத்து நாடான எத்தியோப்பியாவுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டில் மட்டும் விலைவாசி 270 சதவீதம் உயர்ந்துள்ளது. அங்கு தொற்றுநோயும் ஏற்பட்டுள்ளது. 90 சதவீத கால்நடைகள் வறட்சியால் இறந்து விட்டன. நிலைமை இப்படியே சென்றால் பல்லாயிரக்கணக்கானோர் சாவை சந்திப்பார்கள் என்று நிபுனர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலியாவுக்கு உதவ உடனடியாக 2500 கோடி ரூபாய் தேவைப்படுவதாகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் ஐ.நாசபை கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்து சேனல்களுக்கும் இதுவே இறுதி கெடு!

அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவராக கேபிள் தொழிலில் அனுபவம் உள்ள கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அரசு கேபிள் டி.வி. திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களையும் அழைத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கேபிள் டி.வி. செயல்பாடுகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அடுத்த முயற்சியாக கட்டண சேனல்களுக்கு தமிழக அரசு இறுதிக்கெடு விதித்துள்ளது.


மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த இறுதி கெடு விடுவிக்கப் பட்டது.   இந்த ஆலோசனை கூட்டத்துக்கு கேபிள் ஆபரேட்டர்களுக்கும் தனியார் டி.வி. சேனல்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ராஜ் டி.வி., இ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ டி.வி. உள்ளிட்ட பெரும்பாலான தனியார் டி.வி. சேனல்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் கே.ராதாகிருஷ்ணன்,

’’தமிழகத்தில் ஒரே ஒரு டி.வி. சேனல் பிடியில் கேபிள் டி.வி. தொழில் இருந்து வருகிறது. சர்வாதிகார நிலையை தடுக்கவே, அரசு கேபிள் டி.வி. கொண்டு வரப்பட்டுள்ளது. 



சில சேனல்கள் சென்னையில் இலவச சேனலாகவும் பிற மாவட்டங்களில் கட்டண சேனல்களாகவும் உள்ளன.வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையை தவிர்த்து மாநிலம் முழுவதும் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட வேண்டும். அரசு கேபிள் டி.வி.க்கு அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவையை வழங்க வேண்டும். நுகர்வோரிடம் இருந்து சந்தா எதுவும் வசூலிக்க கூடாது. அனைத்து சேனல்களுக்கும் இதுவே இறுதி கெடுவாகும்’’ என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு!


சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு 2ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில், அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் வரும் 22ம் தேதிக்குள் மாணவர் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் இறுதி விசாரணை ஜூலை 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் ஆகஸ்டு 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...