|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

1973ம் ஆண்டை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு! 2073ம் ஆண்டை நோக்கி விலைவாசி!


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அனைத்து நாடுகளின் கரன்சிகளும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டே மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எத்தனை இந்திய ரூபாய்கள் என்பதை வைத்தே ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு டாலருக்கு 48 ரூபாய் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு டாலருக்கு 52 ரூபாய் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அர்த்தம். இப்போது ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக, அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வங்கிகளும், முதலீட்டாளர்களும் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து தங்கத்திலும், டாலர்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், டாலரில் மற்ற முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து அதை போட்டி போட்டி வாங்க ஆரம்பித்திருப்பதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை மேலும் உயர்வதற்கு முன் நாமும் அதை வாங்கிக் குவிப்பதே நல்லது என்று கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களும் பணத்தை டாலர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் டாலருக்கு திடீரென டிமாண்ட் அதிகமாகிவிட்டது. எந்தப் பொருளுக்கு டிமாண்ட் அதிகமாகிறதோ அதற்கு தட்டுப்பாடும், இதனால் அதன் மதிப்பும் உயர்வது அதிகம். இது தான் டாலர் விஷயத்திலும் நடந்துள்ளது.

டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால், ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய கரன்சியான யூரோ, சீன கரன்சியான யென் ஆகியவற்றின் மதிப்பும் சரிந்துவிட்டது. நேற்று மட்டும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 81 காசு வரை குறைந்தது (அதாவது 0.8% வீழ்ச்சி). இன்று காலை நிலவரப்படி 1 அமெரிக்க டாலரைத் தந்தால், ரூ. 52.56 கிடைக்கும். இது கடந்த வாரத்தில் ரூ. 51 ஆகவே இருந்தது.

இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. 38 ஆண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட அதே கீழ்மட்ட அளவை இந்திய ரூபாயின் மதிப்பு எட்டியுள்ளது. (இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தனது கையிருப்பில் உள்ள டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

ரிசர்வ் வங்கியால் முழுவதும் தடுக்க முடியாது: ஆனாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை முற்றிலுமாக தடுக்கும் சக்தி ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் கோபாலன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியிடம் ஒரு அளவுக்குத் தான் சக்தி உண்டு. மதிப்பு சரிவதைத் முற்றிலும் தடுக்கும் ஆற்றல் அதனிடம் இல்லை என்றார். ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு அதிக லாபம் கிடைக்கும்.

இறக்குமதி செய்யும் செலவு அதிகமாவதால், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அதிக பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவழிக்க வேண்டி வரும் (மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?!). அதே போல மருந்துகள், ரசாயணம் (உரம் விலையும் மேலும் உயரலாம்), எலெக்ட்ரானிக் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், ரப்பர் ஆகியவற்றை இறக்கமதி செய்ய நாடு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும். அதே நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஜவுளி, நகைககள், நவரத்தினக் கற்கள் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு போன வாரத்தில் கிடைத்ததை விட அதிகமான பணம் கிடைக்கும்.

ஆனால், மொத்தத் தேவையில் 80 சதவீத பெட்ரோலிய எண்ணெய்யை இறக்குமதி செய்யும் தேசம் இந்தியா. இந் நிலையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயர்ந்து, அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயர்ந்தால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் (தமிழக மக்களுக்கு 'போனஸாக' பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு ஏற்கனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனுடன் சேர்ந்து மேலும் மற்ற விலைகளும் உயர்ந்து வாட்டி எடுக்கும் இந் நிலையில் சர்வதேச அளவில் நிலைமை சரியாகாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 54 ரூபாய் வரையில் கூட சரியலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆக, இதற்கு முந்தைய பாராவில் சொல்லியிருப்பது நடக்கலாம். மேலும் டாலரில் அதிகமாக முதலீடு செய்வதற்காக பங்குச் சந்தைகளில் போட்டு வைத்துள்ள பணத்தையும் பல முதலீட்டாளர்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம்!


சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பல வருடங்களாக போஸ்டர் கட்-அவுட் கோஷங்களுக்காக அடிமட்டத் தொண்டர்களாகவே காலம் கழித்தவர்கள். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள். அரசியல் கட்சியாகாமல் ஒரு தனி ராணுவ படையாக இவர்கள் செயல்படுகிறார்கள்.

கபிலன் வைரமுத்துவின் "உயிர்ச்சொல்" எனும் புதிய நாவலில் இந்த கற்பனை இடம் பெற்றிருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீட்டை ஒரு சில இலக்கியவாதிகள் "அதீதமான கனவு- நம்பும்படியாக இல்லை" என்று விமர்சிக்கிறார்கள். ஒரு சிலர் "ஒரு மாற்று அரசியலுக்கான தாகம் இளைஞர்கள் மத்தியில இருக்கு. அந்த தாகமும் விரக்தியும் ஒட்டுமொத்தமா வெளிப்படும்போது இந்த கற்பன ஒன்னும் அதீதமா தெரியில" என்று வாதாடுகிறார்கள்.

இந்த இயக்கத்திற்கு வேண்டா வெறுப்பாக விளம்பர சேவை செய்யும் அமலன்- அவர் மனைவி தருணா - இவர்களைச் சுற்றித்தான் நகர்கிறது கதை. நீண்ட நாட்களாக குழந்தைக்கு ஏங்கி பின் குழந்தை பிறந்ததும் தருணா சந்திக்கும் மனப்போராட்டம் - பின்னணியில் தனி இயக்கத்தின் களப்போராட்டம் - இதுதான் இந்த நாவலின் இரண்டு முகங்கள். இதில் தருணா அமலன் கதை உண்மைச்சம்பவம். தனி இயக்கம் கற்பனை.

நாவல் பற்றி துளிச் செய்திகள்:
1. முதல் முறையாக ஒரு நாவலுக்கு முன்னோட்டப் பாடல் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தோடு சி.டி. இணைக்கப்பட்டிருக்கிறது.

2. இந்த முன்னோட்டப் பாடலுக்கு வந்த முதல் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய வாழ்த்து. கபிலனை தொலைபேசியில் அழைத்து "ரொம்ப நல்லா இருந்துச்சு கண்ணா" என்று மனமார வாழ்த்தியிருக்கிறார்

3. தருணாவும் அமலனும் தங்கள் அனுபவங்களை எழுதிக்கொள்ளும் slambook-ஆக முழு நாவலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

4. கதையில் வரும் தருணா ஓவியத்தில் நாட்டமுடையவள். அவள் வரைவதுபோல கதையோடு இழைந்த அவள் ஓவியங்களைப் புத்தகமெங்கும் காண முடிகிறது. யாரும் அதிகம் பகிர்ந்துகொள்ளாத ஒருவிதமன அழுத்தத்திற்கான விழிப்புணர்ச்சியாக இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்பது கபிலனின் எண்ணம். அந்த எண்ணத்தைத் தாண்டி இதில் வரும் அரசியல் பரிசோதனைகளும் சில ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டுமெனத் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள்!


இரும்பு சத்து குறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால் அவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஆபத்தானது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இருப்பு சத்தின் பங்கு அதிகம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்த சோகை உண்டாகும். இதனால் உடல் சோர்வடைந்து சுறுசுறுப்பு குறைந்து விடும்.

பெண்களுக்கு இரும்பு சத்து பெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப் போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

நச்சாகும் இரும்பு சத்து சிறு குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

காய்கறிகள் கீரைகள் சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா!


கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு ‘இக்சி‘ எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது.கடந்த மார்ச் மாதம் பெருமாள்சாமியின் உயிரணுக்களை எடுத்து, ரத்தினத்துக்கு கருவூட்டப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி ரத்தப் பரிசோதனையும், 21ம் தேதி ஸ்கேன் பரிசோதனையும் செய்ததில் கருவுற்றது உறுதிப்படுத்தப்பட்டது.வயது மற்றும் ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்தினத்துக்கு சிறப்பு மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி ரத்தினம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் செந்தாமரைச் செல்வி, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களது உடலில் உயிரணு உற்பத்தி இருக்கும். எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறலாம் என்றும் மருத்துவர் கூறினார்.

பற்களை பாதுகாக்கும் நாகலிங்கம் பூ!



நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள் செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றன. இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன.

வெடிக்கும் கனிகள் உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூக்கள் வணங்கப்படுகின்றன. மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர். பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி முனிவர்கள் இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும். இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதில் டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.

விஷ ஜூரத்திற்கு மருந்து இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. வைரத்தை வைரத்தால் அறுப்பதைப் போல விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது.இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

பற்களை பாதுகாக்கும் இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

பெண் என்ஜினியர், ஷேர் ஆட்டோ டிரைவர் காதல்!


மாதம் ரூ.70,000 சம்பாதிக்கும் என்ஜினியர் நாகஜோதி என்பவர், ஷேர் ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அவர் பாதுகாப்பு வேண்டி சென்னை கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தார். சென்னை பாடி புதுநகரைச் சேர்ந்தவர் நாகஜோதி(21). என்ஜினியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியின் மகன் ரகு. ஷேர் ஆட்டோ டிரைவர். நாகஜோதியும், ரகுவும் காதலித்து வந்தனர். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த நாகஜோதி தனது பெற்றோர் எதிர்பபையும் மீறி ரகுவை திருமணம் செய்து கொண்டார். அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்திக்க தனது கணவருடன் வந்தார். திரிபாதியை சந்தித்த அவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் என்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.70,000 சம்பளத்தில் வேலை பார்க்கிறேன். எங்கள் பகுதியில் வசிக்கும் ரகு என்பவரை நான் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தேன். எங்கள் காதலை எனது பெற்றோர் ஏற்கவில்லை. எங்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர்.

இதனால் நான் மதில் சுவர், வேலி ஏறி தாண்டி குதித்து வீட்டை விட்டு ஓடி வந்து ரகுவை பதிவு திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் எனது குடும்பத்தினர் என்னை, எனது கணவரிடம் இருந்து பிரிக்க தேடி அலைகிறார்கள். எனது குடும்பத்தாரால் எனக்கும், எனது கணவருக்கும் ஆபத்து உள்ளது. எங்கள் திருமணத்தை அங்கீகரித்து, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். நீங்களோ வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நீங்களும் கைநிறைய சம்பாதிக்கிறீர்கள். உங்கள் கணவரோ ஆட்டோ டிரைவராக உள்ளார். அப்படி இருக்கையில் உங்கள் மண வாழ்க்கை பொருத்தமானதாக இருக்குமா என்று கேட்டதற்கு, நாகஜோதி கூறியதாவது, நிச்சயமாக நன்றாக இருக்கும். நான் என்ன தான் ரூ.70,000 சம்பாதித்தாலும், எனது கணவரின் வருமானத்தில் வாழ்க்கை நடத்துவதையே பெருமையாக நினைக்கிறேன் என்றார்.

பஸ் கட்டண உயர்வு குறித்து நாளிதழ்களில் விவரம் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு!


 தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு விவரத்தை நாளிதழ்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 3 வாரங்களுக்குள் தமிழக அரசு தனது விளக்கத்தை சமர்ப்பிக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து ராமசாமி கூறுகையில், கட்டண உயர்வை அறிவித்து விட்டு, அதை முறைப்படி மக்களுக்கு என்று முதல் அமலாகிறது என்பதைச் சொல்லாமல், இரவோடு இரவாக, ஏதோ திருடர்கள் போல அமல்படுத்தியுள்ளனர். இது சட்டவிரோதமானது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளேன்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதை நீதிபதிகள் ஏற்று செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் என்றார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதே பிரச்சினை தொடர்பாக மேலும் ஒரு வழக்கும் தாக்கலானது. இரண்டையும் சேர்த்து விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டண உயர்வு எவ்வளவு என்பது குறித்த முழு விவரத்தையும் பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழ்களில் விளம்பரமாக அரசு வெளியிட வேண்டும். ஊடகங்கள் வாயிலாக இதை அறிவிக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து 3 வாரங்களுக்குள் அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

திருச்செந்தூரில் தர்ம தரிசனம் மீண்டும் அமல்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தர்ம தரிசனம் செய்வது, இன்று முதல் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. இங்கு தினமும், மூன்று கால பூஜைகள் முடிந்த பின், பக்தர்கள் சுவாமியை தர்ம தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 2009ல் நடந்த இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன், இந்த தரிசன முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் மூன்று கால பூஜைகள் முடிந்ததும், பக்தர்கள் சிறப்பு தரிசன பகுதி வழியாக, தர்ம தரிசனத்திற்கு அரை மணி நேரம் அனுமதிக்கப்படுவர் என, கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

முருகன் சென்டிமெண்ட்! திருச்செந்தூரில் விஜய்!!

வேலாயுதம் ஹிட் ஆனதில் இருந்து நடிகர் விஜய் முருகன் சென்டிமெண்ட் நம்ப ஆரம்பித்து விட்டார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் சூட்டிங்கை திருச்செந்தூரில் இருந்து தொடங்கும்படி கூறியிருக்கிறாராம். வேலாயுதம் படம் ஹிட் ஆனதால் வேலாயுதக்கடவுள் முருகன் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய். படத்தின் தொடக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம். சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர். எ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ். திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய், அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் 

பாலமுரளி கிருஷ்ணாவுக்கு பி.ஓபுல் ரெட்டி விருது!


ஆண்டுதோறும் நடைபெறும் இசை விழசவை ஒட்டி சென்னை பாரதிய வித்யா பவனில் கலாச்சார விழா- 2011 நடைபெற்றது. இதில் பிரபலமான முன்னள் மற்றும் இந்நாள் கலைஞர்கள் கவுரவிககப்பட்டனர். பாலமுரளி கிருஷ்ணாவுக்கு பி.ஓபுல் ரெட்டி விருது வழங்கப்பட்டது. விரதை ஏற்று பாலமுரளி கிருஷ்ணா பேசுகையில், கலைகள் மற்றும் கலைஞர்களின் தாய்வீடாக திகழ்வது பாரதிய வித்யா பவன். கலைக்கும் கலாச்சாரத்தற்கும் இந்த அமைப்பு ஆற்றி வரும் பணி மகத்தானது. இந்த பணி தொடர வேண்டும் என்றார்.விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறவன மேலாண் இயக்குநர் ஜி.ஸ்ரீநிவாசன் பேசுகையில், இசை விழாவின்போது சென்னை வித்தியாசமான நகராக மாறி விடுகிறது. பாரதிய வித்யா பவனில் நடைபெறும் கலாச்சார விழா தரம் வாய்ந்ததாக உள்ளது. சிறந்த தரமான கலைஞர்களையும் ரசிகர்களையும் சந்திக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது. இந்த பாரதிய வித்யா பவனை உருவாக்கிய கே.எம்.முன்ஷி கூறியதைப் போல, இந்த அமைப்பு கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் நம்பிøக் வைத்து அறிவு பூர்வ கலாச்சார இயக்கத்தின் முன்னோடியாக திகழ்கிறது. ஒழுக்கச் சீர்குலைவால் பாதிக்கப்பட்டுள்ள உலகை எதிர்நோக்கியுள்ள சவால்களைச் சமாளிக்கும் தகுதியான அமைப்பாக இது விளங்குகிறது என்றார். 
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், மூத்தவர்களின் நலனில் அக்கறை கொண்டு, மூத்த கலைஞர்களுக்கு, எதிர்காலம் இஞைர்கள் கையில் என்பதை நிரூபிக்கும் வøயில் இறைய கலைஞர்களுக்கும் இங்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில், பி.ஞானாம்பாள் நினைவு விருதை கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவனுக்கு, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் சி.ரெட்டியின் மனைவி சுசாரிதா ரெட்டி வழங்கினார்.  பாரூர் எம்.எஸ். அன்நதராமன், செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா, சுகுணா வரதாச்சாரி, பிரபஞ்சம் சீதாராம், ஜி.அபிலேஷ் ஆகியோருக்கும் கலாச்சார விருதுகள் வழங்கப்பட்டன.

இலவச ஆன்லைன் வீடிய‌ோ ச‌ேவை யாகூ அறிமுகம்!

சர்வதேச அளவில் முனன்ணி இணையதள நிறுவனமான யாகூ நிறுவனத்தின் இந்திய அங்கமான யாகூ இந்தியா நிறுவனம், டிவி சேனல்கள் மற்றும் பட தயாரி்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து இலவச ஆன்லைன் வீடியோ சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த யாகூ இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அருண் ததாங்கி கூறியதாவது, இந்தியாவில், சமீபகாலமாக ஆன்லைன் வீடியோ பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த தருணமே, தாங்கள் இப்பிரிவில் களமிறங்குவதற்கு சிறந்த தருணமாக கருதி, இந்த சேவையை துவக்கி உள்ள‌ோம். இந்தியாவில், 30 மில்லியன் பேர் ஆன்லைன் வீடியோ சேவையை உபயோகித்து வருவதாகவும், இதன்மூலம், ஒருவர், மாதம் ஒன்றிற்கு குறைந்தது 58 வீடியோக்களை கண்டுகளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. யாகூ இந்தியா நிறுவனம், என்டிடிவி, ஸ்டார் டிவி , ஷெமாரோ, ஹெட்லைன்ஸ் டுடே, பிவிஆர் பிக்சர்ஸ், அல்ட்ரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செய்தி, பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமல்லாது, யாகூ மூவிப்ளெக்ஸின் மூலம், முழு நீளத்திரைப்படங்களையும் இலவசமாக வழங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கூகுள் டிவியை அறிமுகப்படுத்துகிறது சாம்சங்!

டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், விரைவில், கூகுள் டிவியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் உடனான இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக சாம்சங் நிறுவனத்தின் டிவிக்கள் பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். லாஜிடெக் இண்டர்நேஷனல் நிறுவன செட் டாப் பாக்ஸ்களுடன் சோனி கார்ப் டெலிவிஷன் நிறுவனம், தற்போதைய அளவில் கூகுள் டிவிக்களை வர்த்தகப்படுத்தி வருகிறது. இந்த டிவியின் மூலம், ஆன்லைன் வீடியோக்கள் மற்றும் இணையதளங்களை பார்த்து மகிழலாம். வீடியோ கேம்கள் விளையாடுவதற்கென சிறப்பு அப்ளிகேசன்களும் இதில் உள்ளன. புளூ ரே பிளேயர் மற்றும் கம்பானியன் பாக்ஸ் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய கூகுள் டிவியை, சமீபத்தில் நடைபெற்ற கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில், சாம்சங் நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது. இதை வர்த்தகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று அப்போது கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சநதித்த சாம்சங் நிறுவனத்தின் டிவி பிரிவின் தலைவர் யான் பூ கியூன் கூறியதாவது, பல சிறப்பு அம்சங்கள் கொண்டதான கூகுள் டிவியை, அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ள‌ோம். இதுதொடர்பான நடவடிக்கைகளில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நாள்...


  •  லெபனான் விடுதலை தினம்(1943)
  •  இந்திய அரசியல்வாதி முலாயம்சிங் யாதவ் பிறந்த தினம்(1939)
  •  சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன(1574)
  •  அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
  •  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)

மகளை கழுத்தறுத்து, மனைவியை குத்தி,தற்கொலைக்கு முயற்சித்த ஆசிரியர்!


மதுரையில் மகளை கழுத்தறுத்தும், தடுத்த மனைவியை கத்தியால் குத்தியும், தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்த ஆசிரியரால், பரபரப்பு ஏற்பட்டது. மன அழுத்தத்தால், ஆசிரியர் எடுத்த இந்த விபரீத முடிவால், சிறுமி உயிருக்குப் போராடுகிறார்.மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்,35. ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில், தமிழாசிரியராக உள்ளார். நேற்று காலை 7 மணிக்கு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் ஜென்சியை,11, சிறு கத்தியால் கழுத்தறுத்தார்.ஜென்சி அலறலைக் கேட்டு, சமையல் அறையில் இருந்து ஓடிவந்த மனைவி சகாயம்,30, கணவரின் செய்கையால் அதிர்ச்சி அடைந்து, தடுக்க முயன்றார். ஆத்திரமடைந்த செல்வராஜ், சகாயத்தை குத்தியதில், கையில் காயம் ஏற்பட்டது.

செல்வராஜ் தானும் கழுத்தறுத்துக் கொள்ள, வீட்டிற்கு வெளியே ஓடிவந்து சகாயம் அலறினார். பின், ஆட்டோவில் மூவரும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின், மேல் சிகிச்சைக்காக, ஜென்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு, மதியம் ஆபரேஷன் நடந்தது. இவர், 6ம் வகுப்பு படிக்கிறார்.மன அழுத்தம் தான் காரணமா?கரிமேடு போலீசில், சகாயம் கொடுத்த புகாரில், கணவர் செல்வராஜுக்கு அடிக்கடி தலைவலி வரும். பள்ளி ஆசிரியர் சங்க செயலர் பதவியில் இருந்து, அவர் மாற்றப்பட்ட பின், மனச்சோர்வாக இருந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், அவர் இம்முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.


இதன் அடிப்படையில், கொலை முயற்சி, தற்கொலைக்கு முயன்றதாக, செல்வராஜ் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவருக்கும், சகாயத்திற்கும் ஏற்பட்ட பிரச்னையால், இது நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதை மறுத்த போலீஸ், ""மன அழுத்தத்தால் தற்கொலை செய்ய, செல்வராஜ் முடிவு செய்தார். தான் இறந்த பின், மனைவியும், மகளும் கஷ்டப்படுவார்களே எனக் கருதி, அவர்களைக் கொல்ல முயற்சித்துள்ளார். வேறு காரணம் இல்லை'' என்றனர்.

ஆசிரியர்கள் கூறுவதென்ன?புனித பிரிட்டோ பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது :ஆறு மாதங்களாகவே செல்வராஜ் சோர்வாக, கவலையுடன் இருந்தார். இதுகுறித்து, நாங்கள் கேட்டபோது, "ஒன்றுமில்லை' என்றார். அவரின் மனைவி கொடுத்த புகாரில், பள்ளி ஆசிரியர் சங்கச் செயலர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால், மனச்சோர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இப்பதவிக்கு ஆட்கள் மாற்றப்படுவர். இதனால் தான், அவர் இந்த முடிவை மேற்கொண்டார் என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. வேறு காரணங்கள் இருக்கலாம்.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர். மதுரையில் நீளும்கழுத்தறுப்பு பட்டியல்:வழக்கமாக, கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள் தான் கழுத்தறுக்கும் முறையை கையாளுவர். சிறு கத்தி இருந்தாலே போதும் என்பதால், மதுரையில் சமீபகாலமாக, கழுத்தறுப்பதும், கழுத்து நெரித்து கொலை செய்வதும் அதிகரித்திருக்கிறது.இந்தாண்டு மார்ச் 19ல், ஊர்மெச்சிக்குளத்தில் நேரு,52, என்பவர் கழுத்தில் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். ஏப்.,2ல் விராட்டிப்பத்தில், 3 பவுன் நகைக்காக, லதா என்பவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார். ஜூன் 20ல் முடக்குச்சாலை இந்திரா நகரில், மூன்றரை பவுன் நகைக்காக சிவகாளி தேவி,24, என்பவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இவ்விரு வழக்குகளும், இன்னும் மர்மமாகவே உள்ளன.

செப்.,3ல், புதுராமநாதபுரம் தமிழன் தெருவில், காதல் மனைவி ஸ்டெல்லா மேரியை,31, கணவர் வெங்கடேஷ் கழுத்து நெரித்துக் கொலை செய்தார். செப்.,20ல், காமராஜர் ரோடு நவரத்னபுரம் 2வது தெருவில், விஜயகுமாரின் மனைவி துர்காதேவி, மகன் ஸ்ரீராம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். அக்.,16ல், ஊமச்சிகுளம் உசிலம்பட்டியில் வெள்ளையம்மாள்,75, 2 பவுன் நகைக்காக, கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். அக்.,22ல், மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், மனைவி மீனாட்சி,33, மகன் தினேஷை,10, கழுத்து நெரித்துக் கொலை செய்துவிட்டு, மகள்களுடன் தலைமறைவான திருப்பதி என்ன ஆனார் என்று, இதுவரை தெரியவில்லை.நேற்று முன்தினம் சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில், மனைவி முத்துலட்சுமியை,40, கணவர் கண்ணன்,43, கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இன்று, இந்த "கழுத்தறுப்பு பட்டியலில்' ஆசிரியர் செல்வராஜும் சேர்ந்துள்ளார்.

மன அழுத்தம் மோசமான வியாதி!மன அழுத்தம் உடையவர், கொலை செய்ய கத்தியை எடுக்கும்போது, அந்த எண்ணத்திலிருந்து விடுபட முடியாதா என, மதுரை அரசு மருத்துவமனை மன நல டாக்டர் ராமானுஜத்திடம் கேட்ட போது கூறியதாவது:மன அழுத்தம் மிக மோசமான வியாதி, விளைவு விபரீதமாக இருக்கும், பாதிக்கப்பட்டவர், அந்த நேரத்தில் எடுக்கும் முடிவிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தாலும், மூளை செயல்பட விடாது.ஒருவர் மனச்சோர்வாக இருக்கிறார் என்று, குடும்பத்தினர் அறிந்தால், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முறையான சிகிச்சையால், முழுமையாக குணப்படுத்தி, சாதாரண மனிதர்கள் போல் வாழச் செய்ய முடியும்.ஆனால், குடும்பத்தினர் செய்வதில்லை. செல்வராஜ் மனச்சோர்வாக இருந்தார் என்று, அவரின் மனைவி கூறியிருக்கிறார். இது, முன்கூட்டியே தெரிந்திருந்தும், முறையான சிகிச்சைக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தால், இந்த விபரீதத்தை தடுத்திருக்கலாம்.இவ்வாறு, டாக்டர் ராமானுஜம் கூறினார்.

குடிசைகளில், 270 வாட்ஸ் திறன் மின் சாதனங்கள் பயன்படுத்த, சலுகை !


தமிழக அரசு வழங்கும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் லேப்-டாப் பயன்பாட்டுக்கு, கூடுதல் மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கினாலும், அரசின் சார்பில், இலவச மின்சாரப் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலவச மின்சாரத்திற்கான தொகையை அரசு வழங்கினாலும், கட்டணத்தை மிகவும் குறைவாகவே கணக்கிட்டுத் தருகிறது. இதனால், மின் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு விளக்கு...இந்த நிலையில், "ஒரு விளக்கு' என்ற பெயரில், குடிசைகளுக்கு மட்டும், இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 40 வாட்ஸ் திறனுள்ள ஒரே ஒரு பல்பு மட்டும், குடிசைகளில் பயன்படுத்தலாம். கடந்த தி.மு.க., ஆட்சியில், இலவசமாக "டிவி' கொடுத்ததால், "டிவி'யை பயன்படுத்துவதற்காக, கூடுதலாக 70 வாட்ஸ் திறன் அனுமதி தரப்பட்டது. இதனால், ஒரு விளக்குத் திட்டம், "ஒரு விளக்கு' மற்றும் ஒரு "டிவி' திட்டமானது.

தற்போது, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசில், இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. இவற்றையும், குடிசைவாசிகள் பயன்படுத்தும் வண்ணம், இலவச திட்டத்தின் சலுகையை அதிகரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மிக்சி, கிரைண்டர்,லேப்-டாப்இலவச மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றிற்கு, தலா 40 வாட்ஸ் திறன் என, கூடுதலாக 160 வாட்ஸ் வழங்கப்படும். இதனால், குடிசைகளில், 270 வாட்ஸ் திறன் மின் சாதனங்கள் பயன்படுத்த, சலுகை வழங்கப்படும். இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், சலுகைக்கான அனுமதி கேட்டு, மின் துறை விண்ணப்பித்துள்ளது.

தமிழகத்தில், மொத்தம் 17.41 லட்சத்து 131 குடிசை இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கு, இலவச மின்சாரம் என்பதால், மீட்டர்களே கிடையாது. அதனால், இந்த குடிசைகளுக்கு இலவச மின்சார திறன் நிர்ணயிக்கப்பட்டாலும், மீட்டர்கள் இல்லாததால், குடிசை இணைப்புகளில் எவ்வளவு மின்சாரம் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். அளவே தெரியாமல்..."ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்ற பழமொழிக்கு ஏற்ப, இலவச மின்சாரத்தின் அளவையாவது குறித்து வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அளவே தெரியாமல், தோராயக்கணக்கில், ஆண்டுக்கு 120 ரூபாய் என, வாரியம் கணக்கிட்டு, அதற்கு அரசிடம் நடப்பாண்டு மானியமாக, 20.89 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதன்மூலம், ஒரு குடிசைக்கு, மாதம் 10 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.ஆனால், 110 வாட்ஸ் திறன் பத்துமணி நேரம் பயன்படுத்துவதாக கணக்கிட்டால், தினமும் 1.1 யூனிட் வீதம், மாதம் 33 யூனிட் செலவாகும். இவற்றிற்கு, வீடுகளுக்கான குறைந்த கட்டணமான யூனிட்டிற்கு, 65 பைசா கணக்கிடும் போது, மாதம் 21.45 ரூபாய் கணக்காகிறது. ஆண்டுக்கு, 257.40 ரூபாய் செலவாகிறது.


அரசின் சார்பில், பாதிக்கும் குறைவான தொகையாக, மாதம் 120 ரூபாய் மட்டும், வாரியத்திற்கு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும், குடிசை இணைப்புகளுக்கான இலவச மின்சாரத்தால், வாரியத்திற்கு மாதம் ஒரு குடிசை இணைப்பிற்கு, 137.40 ரூபாய் வீதம், 17.41 லட்சத்து 131 குடிசைகளுக்கான மின் வினியோக கட்டணம், 23.92 கோடி ரூபாய் நஷ்டமாகிறது. பெரும்பாலான குடிசை இணைப்புகளில், குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை விட, அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, மீட்டர் வைத்தால் தான் கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீட்டர் வைக்காமல், குறிப்பிட்ட அளவை நிர்ணயிப்பது, எந்த வித பயனையும் தராது என்பது, மின்துறை வட்டாரக் குமுறலாக உள்ளது.இதேபோல், லட்சக்கணக்கான இலவச இணைப்புகளிலிருந்து, வணிகப் பயன்பாடுகளுக்காகவும், ஆடம்பரச் செலவுகளுக்கும் மின்சாரம் திருடப்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதும், மின் துறையினரின் நீண்ட கால புலம்பலாக உள்ளது

காசநோய் குறித்து பேராசிரியர் நாராயணசாமி பாலாஜி.


காசநோய் தடுப்பு குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தின் பேராசிரியர் நாராயணசாமி பாலாஜி. காசநோய் குறித்து பாலாஜி குறிப்பிடுகையில், "காசநோய் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு இரண்டு பேரை கொன்று வருகிறது. காசநோய் எனப்படும் டி.பி., ஒரு மருந்துக்கு மட்டும் கட்டுப்படக்கூடியதல்ல என்பதால் அதை குணப்படுத்துவது எளிதானதல்ல. சர்க்கரை நோய் போன்று இந்த நோயும் பலவிதங்களில் உடலை பாதிக்கச் செய்கிறது.

நுரையீரல் மட்டுமல்லாது மூளை மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் இந்த காசநோய் பாக்டீரியாக்கள் புகுந்து கொண்டு, ஒட்டு மொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தடுத்து விடுகிறது. கிராமப்புறம் மற்றும் ஏழை மக்களை மட்டுமே இந்த நோய் தாக்கும் என கூற முடியாது. 70ம் ஆண்டுகளில் தான் இந்த நோயை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன், இந்த நோயுடன் போராடியே ஏராளமானவர்கள் மாண்டு போய் விட்டனர். கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நிலையில் உள்ளவர், குழந்தைகள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அப்போது, இந்த பாக்டீரியாக்கள் எளிதாக தொற்றுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த நோயை ஒழிக்க நவீன மருத்துவம் தேவைப்படுகிறது' என்றார். இந்த பாதிப்பை இவர் கண்டறிந்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பாலாஜியின் சேவையைப் பாராட்டி இந்த ஆண்டுக்கான சாந்தி ஸ்வருப் பட்நாகர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விருது 5 லட்ச ரூபாய் ரொக்கமும், 65 வயது வரை மாதம் 15 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் கொண்டது

அய்யப்ப பக்தர்களுக்கு, கேரள போலீசார், "சுக்கு காபி'

மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக இரவு நேரத்தில் சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு, கேரள போலீசார், "சுக்கு காபி' வழங்கி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கண் விழித்து வாகனங்களில் வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்கும் நோக்கில் கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பக்தர்களுக்கு போலீசார் அடிமாலி அருகில் உள்ள சீயப்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில், "சுக்கு காபி' வழங்கி வருகின்றனர். நள்ளிரவு ஒரு மணி முதல், காலை 5 மணி வரை சுக்கு காபி வழங்கப்படுகிறது. ஜன.15 வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மூன்று வீரர்களுடன் பூமிக்கு திரும்பியது சோயூஸ்!

விண்வெளியில் ஐந்து மாத காலம் தங்கியிருந்த ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய விண்வெளி வீரர்கள், சோயூஸ் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல, நாடுகளின் ஒத்துழைப்புடன் விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள், பல மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு தேவையான தண்ணீர், பிராணவாயு, உணவு மற்றும் அத்யாவசிய பொருட்களை, அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் சுமந்து செல்கின்றன.விண்வெளியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த, அமெரிக்காவின் மைக் போசம், ஜப்பானின் சதோஷி புருகவா, ரஷ்யாவின் செர்ஜி வோல்கோவ் ஆகியோர், சோயூஸ் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பினர்.கஜகஸ்தானில் உள்ள அர்கல்யங்க் என்ற இடத்தில், தரையிறங்கிய சோயூஸ் விண்கலத்திலிருந்து, மூன்று நாட்டு வீரர்களும் வெளியே வந்தனர். கஜகஸ்தானில், அவர்கள் தரையிறங்கிய இடத்தில் மைனஸ், 15 டிகிரி குளிர் காணப்பட்டது. நல்ல உடல் நிலையில் இருந்த, அவர்கள் சம்பிரதாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்

கருணாநிதி ஓய்வு!

தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, நேற்று இரவு, சிறுநீர் நோய் தொற்று ஏற்பட்டதால், சிறுநீர் கழிப்பதில் சிரமமும், அடிவயிற்றில் வலியும் ஏற்பட்டது.சிகிச்சைக்காக அவர், சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிறுநீர் நோய் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற பின், நேற்று இரவே வீடு திரும்பினார். டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்று முழுவதும் தமது கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி ஓய்வெடுத்தார். அவரை, ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.!

புதிய மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம்!


மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின் கட்டண உயர்வு கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. இதில், மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன மாற்றம்?இதுகுறித்து, எரிசக்தி துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும், யூனிட்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, கட்டண விகிதம் மாறுபாடாக உள்ளது. இக்கட்டண முறை அனைத்தும், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 201 முதல், 500 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 501 யூனிட்களுக்கு மேல் ஒரு கட்டணம் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.இவ்வாறு எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

துரத்தும் நஷ்டக்கணக்கு... : புதிய கட்டண முறை, வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. இக்கட்டண உயர்வு குறித்த மின் வாரியத்தின் கணிப்பு பட்டியலுக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்து, மாற்றமின்றி அமலுக்கு வந்தால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வரும்.அதேநேரம், 2012-13ம் நிதியாண்டிற்கான கணக்கில், 63,593 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆண்டு நஷ்டம், 14,500 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால், வாரியத்திற்கு வரும் 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் போக, மீதமுள்ள 5,000 கோடி ரூபாய், மின் வாரிய நஷ்டத்தை மேலும் அதிகரிக்கும்.மின் உற்பத்தி, நிலக்கரி கொள்முதல், நிலக்கரி இறக்குமதி, வெளிச்சந்தை மின்சாரம், ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பென்ஷன், தேய்மானம், பராமரிப்பு, மின்பகிர்மான இழப்பு ஆகிய செலவுகளை கணக்கிடும்போது, மின் கட்டணத்தை உயர்த்தினாலும், மின் வாரியம் மீள முடியாத நிலையையே காட்டுகிறது.

ஆணையம் மாற்றும்?தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் கட்டணத்தில், மேலும் மாற்றம் கொண்டு வர உத்தரவிடும் எனத் தெரிகிறது. ஏனெனில், மின் வாரிய நிறுவனங்களின் இழப்புகளை சரிகட்டும் விதத்தில், மின் கட்டண மாற்றம் இருக்க வேண்டும் என, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல், இந்திய மின்சார சட்டப்படி, மின்சாரம் வழங்குவதற்கு ஆகும் செலவில், 20 சதவீதம் குறைவாகவோ அல்லது 20 சதவீதம் அதிகமாகவோ மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இருப்பதால், தமிழக மின் துறையின் கணக்குகள், மாறுபட வாய்ப்பு உள்ளது.

மக்களிடம் கருத்து கேட்பு...:புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

திருச்சியிலிருந்து மற்ற ஊருக்கு புதிய பஸ்கட்டண விவரம்!

தமிழக அரசின் கட்டண உயர்வு அறிவிப்பின் படி திருச்சியிலிருந்து மற்ற ஊர்களுக்கு புதிய பஸ்கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ் பழைய கட்டணம் புதிய கட்டணம் 


திருச்சி-சென்னை(முன்பு)175 தற்போது 235 ரூபாய். 
திருச்சி-மதுரை (முன்பு) 75 தற்போது 90 ரூபாய். 
திருச்சி-நெல்லை (முன்பு) 160 தற்போது 205. 
திருச்சி-நாகர்கோவில் (முன்பு) 200 தற்போது 260. 
திருச்சி-மார்த்தாண்டம்(முன்பு) 220 தற்போது 280. 
திருச்சி-கோவை (முன்பு) 120 தற்போது 160. 
திருச்சி-ஊட்டி (முன்பு) 170 தற்போது 235. 
திருச்சி-பெங்களூரு (முன்பு)295 தற்போது 325. 
திருச்சி-வேலூர் (முன்பு) 165 தற்போது 215. சாதாரண 
திருச்சி-சென்னை (முன்பு) 125 தற்போது 181. 
திருச்சி-புதுக்கோட்டை (முன்பு) 18 தற்போது 25. 
திருச்சி-தஞ்சை (முன்பு) 18 தற்போது 23. 
திருச்சி-சேலம் (முன்பு) 50 தற்போது 84. 
திருச்சி-திண்டுக்கல் (முன்பு)35 தற்போது 57. 
திருச்சி-கரூர் (முன்பு) 25 தற்போது 35. 
திருச்சி-திருப்பூர் (முன்பு) 60 தற்போது 100. 
திருச்சி-ஈரோடு (முன்பு) 60 தற்போது 84. 
திருச்சி-மதுரை (முன்பு) 41தற்போது 70. டவுன் பஸ்கள்: 
திருச்சி-ஸ்ரீரங்கம் (முன்பு)4தற்போது 6. 
திருச்சி-சத்திரம் பஸ்ஸ்டாண்ட் (முன்பு)3 தற்போது 4. 
திருச்சி-சமயபுரம் (முன்பு) 4.50 தற்போது 7. 
திருச்சி-புங்கனூர் (முன்பு) 3 தற்போது 4. புதிய கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக் கல்வித் துறையில் 57 ஆயிரம் பேரை நியமிக்க ஒப்புதல்!


பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர்கள்,சிறப்பாசிரியர்கள்,பகுதி நேர ஆசிரியர்கள், நூலகர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம்56 ஆயிரத்து 853 பேரைநியமிக்க, ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம் அவர்களை நியமிக்க, கல்வித் துறைமுனைந்துள்ளது.

வழக்கு:மாநில அளவிலான பதவி மூப்பு மூலம்,ஆசிரியர்களை நியமிப்பதுதொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஆட்சியில் இவ்வழக்கில்,அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்யாமல் இருந்தது.தற்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் மூலம், பதில்அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குவிசாரணை, ஜனவரி மாதம்வரும் எனத் தெரிகிறது.இவ்வழக்கின் தீர்ப்பைபொறுத்து தான், வேலைவாய்ப்பு பதிவு மூப்புஅடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதா அல்லது போட்டித் தேர்வுமூலம் நியமிப்பதா என்பது தெரியவரும். எனினும், தற்போதுகட்டாய கல்விச் சட்டம்அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன்படி, போட்டித் தேர்வு மூலம் தான்,ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.இந்நிலையில், சுப்ரீம்கோர்ட் முடிவு வரும்வரை, பள்ளிகளில் வழக்கமான சம்பள விகிதத்தில்நியமிக்கப்படும் ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையிலேயே, ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் நியமிக்க, தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.பகுதி நேர ஆசிரியர்களை பொறுத்தவரை, அந்தந்த துறைத் தலைவர்மூலம், அரசு வெளியிடும்வழிகாட்டுதலின் அடிப்படையில், நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். பணியிட அறிவிப்பு விவரம்*சிறப்பாசிரியராக நியமிக்கப்பட உள்ளவர்களில், தமிழாசிரியர்கள்1,000 பேர் உட்பட,உடற்கல்வி ஆசிரியர்களும் அடங்குவர். 

*பகுதி நேர ஆசிரியர்களில் பெரும்பாலானோர், ஓவியம்,தையல், கைவினை,உடற்கல்வி போன்றபயிற்றுனர்களாக நியமிக்கப்படுகின்றனர்.பள்ளியில் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமெனில், இதற்காகமாதம், 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.இரண்டு பள்ளிகளுக்கும் சேர்த்து ஒருவரேநியமிக்கப்பட்டால்,அவருக்கு, ஆறு மணிநேர வேலைக்கு, 10ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.



*கிரேடு-3 தகுதிக்கு,நூலகர்கள் பணியிடங்கள் உயர்த்தப்படஉள்ளன. மேலும், புதிதாக 1,093 நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைநிரப்ப, வேலைவாய்ப்புத் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

*ஆசிரியரல்லா பணியிடங்களான துப்புரவுபணியாளர்கள், 5,000பேர் நியமிக்கப்படஉள்ளனர். இவர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்வழங்கப்படும். இதில்,3,000 பணியிடங்கள்தான் ஒப்புதல் பெற்றவை. தற்போது, 2,000பணியிடங்கள் கூடுதலாக ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

*உதவி தொடக்க கல்விஅதிகாரி பணியில், 34பேரை நியமிக்க, தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு இதுவரை, 70ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

*இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படாமல்உள்ள பின்னடைவுஆசிரியர் பணியிடங்கள், 1,800 நிரப்பவும்,அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம் எண்ணிக்கை
இடைநிலை கல்வி ஆசிரியர்கள் 7,907
பட்டதாரி ஆசிரியர்கள்15,525
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்5,869
சிறப்பாசிரியர்கள்1,538
வேளாண் பயிற்றுனர்கள்25
பகுதி நேர ஆசிரியர்கள்16,549
மேம்படுத்தப்படும் நூலகர் பணியிடம்260
புதிய நூலகர் பணியிடங்கள்1,093
ஆசிரியரல்லா ஊழியர்கள்5,000
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்831
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்34
ஆசிரியர் பயிற்றுனர் சீனியர் விரிவுரையாளர்கள்34
இளநிலை உதவியாளர்கள் மற்றும் லேப் உதவியாளர்கள்388
பின்னடைவு பணியிடங்கள்1,800

சிவகாசி பகுதியில் நிலத்தின் மதிப்பீடு 50 சதவீதம் உயர்வு!


சிவகாசி நகராட்சி பகுதியில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட சிவகாசி நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள 20 கிராமங்களில் நில வழிகாட்டி மதிப்பீடு, நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்போது வெளியிட்டுள்ளனர். சிவகாசி நகராட்சி தொழில் நகரம் என்பதால், இங்கு நன்செய், புன்செய் நிலங்கள் எதுவும் இல்லை. குடியிருப்பு பகுதிகள் அதிகமாகியுள்ளன. குடியிருப்பு பகுதியில் ஒரு சதுர அடியில் மதிப்பிடப்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சி குடியிப்பு பகுதி தரம் 1ஆக ஆறுமுகம் ரோடு, சேர்மன் பி.எஸ்.ஆர்., நகர், வேலாயுதம் ரஸ்தா ரோடு உள்ளிட்ட 135 தெருக்களில், கடந்த வழிகாட்டி மதிப்பீட்டில் ஒரு சதுர அடி ரூ.750 ஆக இருந்தது. தற்போது ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. நகராட்சி குடியிருப்பு பகுதி தரம் 2க்கு உட்பட்ட சேர்மன் ஏ.எஸ்.கே. தங்கையா நாடார் ரோடு பகுதி வழிகாட்டி மதிப்பீடு, முன்பு ரூ.550 ஆக இருந்த சதுர அடி ,தற்போது ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. குடியிருப்பு பகுதி 3வது தரத்திற்கு உட்பட்ட பகுதியான சேர்மன் அருணாசலம் ரோடு பகுதி முன்பு ரூ.500 ஆக இருந்தது.

தற்போது ரூ.650 ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு வணிக பகுதியில் ஒரு சதுர அடி ரூ.1600, ரூ.1350, ரூ.950 எனவும், தொழிற்பேட்டை பகுதி ஒரு சதுர அடி ரூ.850 என வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவகாசியை ஒட்டியுள்ள விஸ்வநத்தம் பகுதியில் புஞ்சை கிணற்று பாசன நிலம் ஒரு ஏக்கர் ரூ.10 லட்சமாகவும், இதர சாலைகள் ஒட்டிய நிலமாக இருந்தால் ஒரு ஏக்கர் ரூ.15லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனுப்பங்குளத்தில் புஞ்சை கிணற்று பாசனம் ஒரு ஏக்கர் ரூ.4.50 லட்சம், புஞ்சை மானாவாரி நிலம் ஒரு ஏக்கர் ரூ.3.50 லட்சம், இதர சாலைகள் ஒட்டிய நிலமாக இருந்தால் ஏக்கர் ரூ.12 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. ஆனையூரில் புஞ்சை மானாவாரி நிலம் ஒரு ஏக்கர் ரூ.7 லட்சமாகவும், ரயில்பாதை மற்றும் இதர சாலைகளை ஒட்டிய நிலங்கள் ஒரு ஏக்கர் ரூ.12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு மதிப்பீடு பொதுமக்கள் பார்வைக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மீரா குமார் குடும்பம் ரூ.1.98 கோடி பாக்கி!


லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் குடும்பத்தினர், டில்லியில் உள்ள அரசு பங்களாவை ஆக்கிரமித்துள்ள வகையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, 1.98 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமுக்கு, டில்லியில், அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 1986ல், இவர் மறைந்தார். ஆனாலும், அந்த பங்களாவில், ஜெகஜீவன் ராமின் மனைவி இந்திராணி தேவி மற்றும் அவரின் மகளும், தற்போதைய லோக்சபா சபாநாயகருமான மீரா குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கியிருந்ததாகவும், இந்த வகையில், அரசுக்கு அவர்கள் வாடகையாக, 1.98 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சுபாஸ் சந்திர அகர்வால் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அளித்த பதிலில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, சபாநாயகர் மீரா குமார் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து, சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "இந்த பங்களாவை, கடந்த 2002லேயே இந்திராணி தேவி குடும்பத்தினர் காலி செய்து விட்டனர். இதுகுறித்த தகவலும், அப்போதே அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது' என்றன.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30,000 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு திட்டம்!

பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, அடுத்த 10 ஆண்டுகளில், 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஏர் இந்தியா நிறுவனம், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தின் இழப்பை ஈடு செய்து, மீண்டும் லாப பாதைக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இந்நிறுவனம் ரொக்க லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, நிறுவனம் லாப பாதைக்கு திரும்பும் நிலையில், மத்திய அரசு, இந்நிறுவனத்தை கண்காணித்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், குழு ஒன்றை அமைக்க உள்ளது. இக்குழுவில், மத்திய நிதி அமைச்சகத்தின் பிரதிநிதியும் இடம் பெறுவார். நிறுவனத்தின் செயல்பாடு, செலவினங்களை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.

ஏர் இந்தியா நிறுவனம், தற்போது, மொத்த இருக்கைகளில், 67 சதவீத பயணிகளுடன் இயங்கி வருகிறது. இது, வரும் 2015ம் ஆண்டிற்குள், 73 சதவீதம் என்றளவில் மேம்படுத்தப்படும். மேலும், நிறுவனத்தின் விமானங்கள், தற்போது, 71.7 சதவீத அளவிற்கு குறிப்பிட்ட நேரத்தில் விமான சேவையை வழங்கி வருகின்றன. இது, வரும் 2015ம் ஆண்டிற்குள், 90 சதவீதம் என்றளவில் உயர்த்தப்படும்.ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களின், மனித வளம் குறித்த கொள்கை திட்டம், மறு பரிசீலனை செய்யப்படும். அடுத்த மூன்று மாதங்களில், தன் விருப்ப ஓய்வுத் திட்டம் குறித்தும் முடிவெடுக்கப்படும்.கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலுமாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு, 20 ஆயிரத்து, 320 கோடி ரூபாயாக உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, நிறுவனத்தின் இழப்புகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு லாபம் ஈட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லாபம் ஈட்ட தொடங்கியவுடன், ஏர் இந்தியா தொடர்ந்து நன்கு செயல்படும் வகையில், சிறந்த கூட்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தவும், அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டேம் 999 படத்தை தடை செய்ய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கோரிக்கை!

முல்லைப்பெரியாறு அணை உடைவதாகக் காட்டும் டேம் 999 என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். திரையிட்டால் அத்திரையங்கம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி அறிவித்துள்ளது.



இதுகுறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதாகவும், அணை உடைத்து ஆயிரக்கணக்கான மக்கள் பலியாவர் என்றும் சித்தரித்து கேரள அரசு தொடர்ந்து பொய்பரப்பி பீதியை கிளப்பி விடுகிறது. அதன் உச்சக்கட்டமாக தற்போது டேம் 999 என்ற திரைப்படத்திற்கு நிதி வழங்கி தனியார் நிறுவனம் மூலம் தயாரித்து திரையிட உள்ளது. இப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைவது போலவும், அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் பலியாவதும் போலவும் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஏற்கனவே வல்லுநர் குழு ஆய்வின் அடிப்படையில் அணை வலுவாக உள்ளதாக ஒருமுறைக்கு இருமுறை உச்சநீதிமனறம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இப்படம் திரையிடப்பட்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலாகும். நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கை இது கடுமையாக பாதிக்கும். மக்களிடையே அச்ச உணர்வை பரப்பி இந்தியாவில் வாழும் இருமொழி இனங்களுக்கிடையே பகைமையைத் தீவிரப்படுத்தும் செயலாகும். எனவே மத்தியஅரசு டேம் 999 திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். தமிழக திரையரங்குகளில் இத்தமிழர் விரோத படத்தை திரையிட்டால் திரையிடப்படும் அரங்குகள் முன்பு தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி மறியல் போராட்டத்தை நடத்தும் என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கு விசாரணை இனி திகார் சிறையில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் என தில்லி உயர்நீதிமன்றம்!


2ஜி வழக்கு விசாரணை இனி திகார் சிறையில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் என தில்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி.சைனி இன்று 2ஜி வழக்கு குற்றவாளிகளிடம் தெரிவித்து வியாழக்கிழமையில் இருந்து திகார் சிறையில்தான் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார். திடீரென இந்த அறிவிப்பைக் கேட்டதும் 2ஜி வழக்கு குற்றவாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் திகார் சிறை நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு தடைவிதிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்திடம் கோரப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள் வைக்க புதிய கட்டுப்பாடுகள்!


தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள் (பிளாகார்டு) வைப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் எஸ்.கருத்தையா பாண்டியன் வெளியிட்டுள்ள அரசாணையில்,   ‘’ டிஜிட்டல் பேனர், விளம்பர தட்டி வைக்க விரும்புபவர்கள் 15 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் ஒரு பேனர் அல்லது விளம்பரத் தட்டி வைக்க ரூ.200 செலுத்த வேண்டும். நகராட்சி பகுதியில் ரூ.100-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.50-ம் செலுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் கடந்த 16-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன’

கள்ளக்காதலனை கொன்ற பெண் கணவருடன் கைது கலிகாலம்!


மதுராந்தகம் அருகே உள்ள உத்திரமேரூரைச் சேர்ந்தவர் தினதயாளன். இவருக்கு வயது 23. இவர் கடந்த 19ஆம் தேதி விசூர் ஏரியில் பிணமாக கிடந்தார். பெருநகர் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். 


பிரேத பரிசோதனையில் அவர் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டது தெரிய வந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் கள்ளக் காதல் விவகாரத்தில் தீன தயாளன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தீனதயாளனுக்கு அதே ஊரைச் சேர்ந்த அம்மு என்கிற அந்தோணியம்மாளுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு இருந்தது. அம்முவுக்கு திருமணம் ஆன பிறகும் இவர்களது கள்ளத் தொடர்வு நீடித்தது. 

சம்பவத்தன்று தீனதயாளன் அம்மு வீட்டுக்கு சென்று அம்முவிடம் உல்லாசமாக இருந்தார். இதனை அம்முவின் கணவர் ஜான் நேரில் பார்த்துவிட்டார். இதனை உணர்ந்த அம்மு தான் உத்தமி என்றம் தீனதயாளன்தான் தகாத முறையில் நடந்து கொண்டான் என்றும் நாடகமாடினார். ஆத்திரம் அடைந்த ஜான் மனைவியுடன் சேர்த்து தீனதயாளனை தாக்கினார். மேலும் தீனதயாளனை ஜான் பிடித்துக்கொள்ள அம்மு துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். 

தீனதயாளன் பிணமாக சாய்ந்ததும் அம்முவின் சகோதரர் ரூபன், சூசைராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீனதயாளன் பிணத்தை மோட்டார் சைக்கிளில் தூக்கி வந்து ஏரிக்கரையில் வீசி விட்டு தப்பிவிட்டனர். டிஎஸ்பி ராஜ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பொன் ஜெயராமன் விசாரித்து அம்மு, அவரது கணவர் ஜான், சகோதரர்கள் ரூபன், சூசைராஜ், ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

டேம் 999 - அது என்ன டேம் 999?

சர்ச்சைக்குரிய டேம் 999 படத்தின் பிரிவியூ காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டதால், காட்சி ரத்து செய்யப்பட்டது.


மலையாள திரைப்பட இயக்குநர் சோஹன் ராய் இயக்கியுள்ள ஹாலிவுட் படம் டேம் 999. இப்படத்தின் பிரிவியூ காட்சி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இதை திரையிடக்கூடாது என வலியுறுத்தி ம.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பிரிவியூ காட்சி ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக மல்லை சத்யா உள்ளிட்ட ம.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.

கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் டேம் 999 என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டேம் 999 திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது. எனவே இந்த திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் கடுமையாக வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்;ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம் 999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும் விலங்குகளும் மனிதக் கூட்டமும ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப் பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டி விட்டார். உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால், இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை 999 என்ற படம் எடுக்கப்பட்டுள்;ளது.

முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்ற வில்சாரணையில் உள்ளது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்;களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்.

இந்தப் படம் உலகத்தில் எங்கும் திரையிடப்படக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் இனக்கலவரம் மூளும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடாமல் தடை செய்ய வேண்டும். அதற்கு இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். வருகிற 25 நவம்பர் 2011 அன்று அணை 999 படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் அந்த திரையரங்குகளின் முன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தி படம் திரையிடா;ப்படாமல் மறியல் நடத்தும். தமிழ் இன உணர்வாளர்கள்; இப்போராட்டத்திற்கு திரளாக வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...