கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு ‘இக்சி‘ எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது.கடந்த மார்ச் மாதம் பெருமாள்சாமியின் உயிரணுக்களை எடுத்து, ரத்தினத்துக்கு கருவூட்டப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி ரத்தப் பரிசோதனையும், 21ம் தேதி ஸ்கேன் பரிசோதனையும் செய்ததில் கருவுற்றது உறுதிப்படுத்தப்பட்டது.வயது மற்றும் ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்தினத்துக்கு சிறப்பு மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி ரத்தினம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் செந்தாமரைச் செல்வி, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களது உடலில் உயிரணு உற்பத்தி இருக்கும். எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறலாம் என்றும் மருத்துவர் கூறினார்.
No comments:
Post a Comment