மதுரையில் மகளை கழுத்தறுத்தும், தடுத்த மனைவியை கத்தியால் குத்தியும், தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்த ஆசிரியரால், பரபரப்பு ஏற்பட்டது. மன அழுத்தத்தால், ஆசிரியர் எடுத்த இந்த விபரீத முடிவால், சிறுமி உயிருக்குப் போராடுகிறார்.மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்,35. ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில், தமிழாசிரியராக உள்ளார். நேற்று காலை 7 மணிக்கு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் ஜென்சியை,11, சிறு கத்தியால் கழுத்தறுத்தார்.ஜென்சி அலறலைக் கேட்டு, சமையல் அறையில் இருந்து ஓடிவந்த மனைவி சகாயம்,30, கணவரின் செய்கையால் அதிர்ச்சி அடைந்து, தடுக்க முயன்றார். ஆத்திரமடைந்த செல்வராஜ், சகாயத்தை குத்தியதில், கையில் காயம் ஏற்பட்டது.
செல்வராஜ் தானும் கழுத்தறுத்துக் கொள்ள, வீட்டிற்கு வெளியே ஓடிவந்து சகாயம் அலறினார். பின், ஆட்டோவில் மூவரும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின், மேல் சிகிச்சைக்காக, ஜென்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு, மதியம் ஆபரேஷன் நடந்தது. இவர், 6ம் வகுப்பு படிக்கிறார்.மன அழுத்தம் தான் காரணமா?கரிமேடு போலீசில், சகாயம் கொடுத்த புகாரில், கணவர் செல்வராஜுக்கு அடிக்கடி தலைவலி வரும். பள்ளி ஆசிரியர் சங்க செயலர் பதவியில் இருந்து, அவர் மாற்றப்பட்ட பின், மனச்சோர்வாக இருந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், அவர் இம்முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், கொலை முயற்சி, தற்கொலைக்கு முயன்றதாக, செல்வராஜ் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவருக்கும், சகாயத்திற்கும் ஏற்பட்ட பிரச்னையால், இது நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதை மறுத்த போலீஸ், ""மன அழுத்தத்தால் தற்கொலை செய்ய, செல்வராஜ் முடிவு செய்தார். தான் இறந்த பின், மனைவியும், மகளும் கஷ்டப்படுவார்களே எனக் கருதி, அவர்களைக் கொல்ல முயற்சித்துள்ளார். வேறு காரணம் இல்லை'' என்றனர்.
ஆசிரியர்கள் கூறுவதென்ன?புனித பிரிட்டோ பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது :ஆறு மாதங்களாகவே செல்வராஜ் சோர்வாக, கவலையுடன் இருந்தார். இதுகுறித்து, நாங்கள் கேட்டபோது, "ஒன்றுமில்லை' என்றார். அவரின் மனைவி கொடுத்த புகாரில், பள்ளி ஆசிரியர் சங்கச் செயலர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால், மனச்சோர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இப்பதவிக்கு ஆட்கள் மாற்றப்படுவர். இதனால் தான், அவர் இந்த முடிவை மேற்கொண்டார் என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. வேறு காரணங்கள் இருக்கலாம்.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர். மதுரையில் நீளும்கழுத்தறுப்பு பட்டியல்:வழக்கமாக, கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள் தான் கழுத்தறுக்கும் முறையை கையாளுவர். சிறு கத்தி இருந்தாலே போதும் என்பதால், மதுரையில் சமீபகாலமாக, கழுத்தறுப்பதும், கழுத்து நெரித்து கொலை செய்வதும் அதிகரித்திருக்கிறது.இந்தாண்டு மார்ச் 19ல், ஊர்மெச்சிக்குளத்தில் நேரு,52, என்பவர் கழுத்தில் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். ஏப்.,2ல் விராட்டிப்பத்தில், 3 பவுன் நகைக்காக, லதா என்பவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார். ஜூன் 20ல் முடக்குச்சாலை இந்திரா நகரில், மூன்றரை பவுன் நகைக்காக சிவகாளி தேவி,24, என்பவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இவ்விரு வழக்குகளும், இன்னும் மர்மமாகவே உள்ளன.
செப்.,3ல், புதுராமநாதபுரம் தமிழன் தெருவில், காதல் மனைவி ஸ்டெல்லா மேரியை,31, கணவர் வெங்கடேஷ் கழுத்து நெரித்துக் கொலை செய்தார். செப்.,20ல், காமராஜர் ரோடு நவரத்னபுரம் 2வது தெருவில், விஜயகுமாரின் மனைவி துர்காதேவி, மகன் ஸ்ரீராம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். அக்.,16ல், ஊமச்சிகுளம் உசிலம்பட்டியில் வெள்ளையம்மாள்,75, 2 பவுன் நகைக்காக, கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். அக்.,22ல், மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், மனைவி மீனாட்சி,33, மகன் தினேஷை,10, கழுத்து நெரித்துக் கொலை செய்துவிட்டு, மகள்களுடன் தலைமறைவான திருப்பதி என்ன ஆனார் என்று, இதுவரை தெரியவில்லை.நேற்று முன்தினம் சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில், மனைவி முத்துலட்சுமியை,40, கணவர் கண்ணன்,43, கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இன்று, இந்த "கழுத்தறுப்பு பட்டியலில்' ஆசிரியர் செல்வராஜும் சேர்ந்துள்ளார்.
மன அழுத்தம் மோசமான வியாதி!மன அழுத்தம் உடையவர், கொலை செய்ய கத்தியை எடுக்கும்போது, அந்த எண்ணத்திலிருந்து விடுபட முடியாதா என, மதுரை அரசு மருத்துவமனை மன நல டாக்டர் ராமானுஜத்திடம் கேட்ட போது கூறியதாவது:மன அழுத்தம் மிக மோசமான வியாதி, விளைவு விபரீதமாக இருக்கும், பாதிக்கப்பட்டவர், அந்த நேரத்தில் எடுக்கும் முடிவிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தாலும், மூளை செயல்பட விடாது.ஒருவர் மனச்சோர்வாக இருக்கிறார் என்று, குடும்பத்தினர் அறிந்தால், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முறையான சிகிச்சையால், முழுமையாக குணப்படுத்தி, சாதாரண மனிதர்கள் போல் வாழச் செய்ய முடியும்.ஆனால், குடும்பத்தினர் செய்வதில்லை. செல்வராஜ் மனச்சோர்வாக இருந்தார் என்று, அவரின் மனைவி கூறியிருக்கிறார். இது, முன்கூட்டியே தெரிந்திருந்தும், முறையான சிகிச்சைக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தால், இந்த விபரீதத்தை தடுத்திருக்கலாம்.இவ்வாறு, டாக்டர் ராமானுஜம் கூறினார்.
No comments:
Post a Comment