சுய பிம்பம் என்பது ஒரு குழந்தையின் மனநல உருவாக்கத்தில் முக்கியமானது.
பொதுவாக, ஒவ்வொரு மனிதனுக்குமே சுய பிம்பம் என்பது முக்கியமானது. ஒரு குழந்தையின் சுய பிம்பத்தை
நேர்மறையாக உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. ஒரு
குழந்தைக்கு, தான் உருவாகும் காலகட்டத்தில், நேர்மறை மற்றும் எதிர்மறை
சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு குழந்தை எதிர்காலத்தில்
வெற்றிகரமான மனிதனாக உருவாகுமா? இல்லையா? என்பதை, அந்தக் குழந்தையின் இளம்
வயது சுய பிம்பமே முடிவு செய்கிறது. ஒரு கண்ணாடியின் முன்பாக ஒரு குழந்தை நின்று தன் உருவத்தை உத்துப்
பார்க்கையில், தன்னைப் பற்றிய ஒரு சுய பிம்பம் அந்தக் குழந்தையின்
நினைவுக்கு வருகிறது. அந்த சுய பிம்பத்தில் தன்னம்பிக்கையும், நேர்மறை
எண்ணமும் நிறைந்திருக்க வேண்டும். அதை உருவாக்குவதில்தான் பெற்றோரின் கடமை
நிறைந்துள்ளது.
Separate but Equal என்ற ஆங்கிலப் படத்தில் ஒரு
அதிர்ச்சிகரமான காட்சி உண்டு. கறுப்பின குழந்தைகளைக் கொண்ட ஒரு குழுவிடம், 2
பொம்மைகள் தரப்படும். அவற்றில் ஒன்று கறுப்பு பொம்மை மற்றது வெள்ளை
பொம்மை. அந்த 2 பொம்மைகளில் எது அழகான பொம்மை என்று அந்தக் குழந்தைகளிடம்
கேட்கப்படுகையில், அந்த கறுப்பின குழந்தைகள் அனைத்துமே, கொஞ்சமும்
யோசிக்காமல் வெள்ளை பொம்மையையே அழகான பொம்மை என்று தேர்ந்தெடுக்கும். தன்
இனத்தாரை ஒடுக்கும் ஒரு இனத்தாரின் நிறமே அழகானது என்று அந்தக்
குழந்தைகளின் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்தக் குழந்தைகளின் சுய பிம்பம் சிதைக்கப்பட்டுள்ளது. தான்
ஒரு அழகற்ற, முக்கியத்துவமற்ற மற்றும் தாழ்வான பிறவி என்ற எண்ணம்
கறுப்பினக் குழந்தைக்குள் உண்டாக்கப்பட்டுள்ளது. கறுப்பர் - வெள்ளையர் இனப்
பிரச்சினையின் சமூக தாக்கம், ஒரு குழந்தையின் சுய பிம்பத்தில்
ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு எதிர்மறை சிந்தனை, அதாவது தாழ்வு மனப்பான்மை. ஒரு குழந்தையின் சுய பிம்பத்தில் நேர்மறை சிந்தனைகளை செலுத்துவதற்கு பெற்றோர்கள் பழகிக் கொள்ள வேண்டும். தனது குழந்தை ஒரு,
* அதிமேதாவி
* சாதனையாளர்
* எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவர்
* படிப்பில் சுட்டி
* விளையாட்டில் திறமைசாலி
* சுய சிந்தனையாளர் மற்றும் கடின உழைப்பாளி
* உதவி மனப்பான்மை கொண்டவர் மற்றும் பண்பாளி
* நட்புடன் பழகுபவர் மற்றும் அன்பானவர்
* பலரின் மத்தியில் நன்கு அறிமுகமானவர்
* பார்ப்பதற்கு அழகானவர்
* எங்கு சென்றாலும் சந்தோஷமாக இருப்பார் மற்றும் பிறரையும் சந்தோஷப்படுத்துபவர்
என்ற சிந்தனைகள் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருக்க வேண்டும். இந்த
எண்ணங்களையே குழந்தையிடமும் ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான்
குழந்தையின் சுய பிம்பம் தேர்ச்சி பெறும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் பலவிதமான இலக்குகளை நிர்ணயிக்கலாம். ஆனால்
அந்த இலக்கானது, அடையக்கூடிய அளவில் இருப்பது முக்கியமானது. ஒரு அடைய
முடியாத இலக்கை நிர்ணயித்து,அதன்பால் குழந்தையை ஊக்கப்படுத்தி, தோல்வியடையும்போது, உங்கள்
குழந்தையின் மனநிலை எதிர்மறையான விளைவுகளுக்கு சென்றுவிடும். தான் எதிலுமே
தோற்கக் கூடியவர் மற்றும் தன்னால் எதுவுமே இயலாது என்ற எண்ணத்திற்கு
சென்று, எந்த செயலிலும் நம்பிக்கையுடன் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். எனவே,
இலக்கு நிர்ணயிக்கும் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. சில பெற்றோர்கள் இவ்வாறு கூறுவார்கள், "நான் என் குழந்தையை பயிற்சி
வகுப்புகளுக்கு அனுப்பினேன், தேவையான புத்தகங்களை வாங்கி கொடுத்தேன்,
உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் வெற்றிபெறவில்லை. அதன் திறமை
அவ்வளவுதான்" என்பர். ஆனால் அத்தகைய பெற்றோரின் கருத்து தவறு.
ஏனெனில், வேண்டியதை செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது மட்டுமே பெற்றோரின்
கடமையல்ல. குழந்தையிடம் அன்பும், ஆதரவும் காட்டி, அவர்களின் சுய பிம்பத்தை
சிறப்பான முறையில் வார்த்தெடுக்க வேண்டும். தங்களுடைய சொந்த விருப்பங்களை குழந்தையிடம் திணிப்பது மாபெரும் தவறு.
ஒரு குழந்தைக்கு எந்த விஷயத்தில் இயல்பான விருப்பமோ, அதை நோக்கி
குழந்தையின் சுய பிம்பத்தை உருவாக்க வேண்டும். குழந்தையைப் பற்றி நேர்மறையாக நினைப்பதை, குழந்தையின் மனதிலும் பதிய வைக்க வேண்டும். ஒரு குழந்தையை வெற்றிகரமான முறையில் வளர்ப்பதைவிட, இந்த உலகத்தில் பெரிய
சாதனை எதுவுமே இல்லை என்று சொல்லலாம். வளர்க்கும்போதே முறையாக
வளர்த்துவிட்டால், பிற்காலத்தில் பிரச்சினையைப் பற்றி சிந்திக்க
வேண்டியதேயில்லை.
உங்களுக்கும் நிம்மதி! உங்கள் பிள்ளைக்கும் நிம்மதி!