|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 April, 2012

அபார பலத்துடன் முல்லைப் பெரியாறு அணை -ஐவர் குழு

தமிழகத்திற்கு மிகப் பெரிய நற்செய்தியை உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது அறிக்கை மூலம் கொடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலத்துடன் உள்ளது. அதில் நீர் இருப்பு அளவை தாராளமாக அதிகரிக்கலாம் என்பதே அந்த நற்செய்தியாகும்.முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் ஐவர் குழு கூறியுள்ளது.முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி விட்டது, இடிந்து விடும், இடிந்தால் பல லட்சம் கேரள மக்கள் சாவார்கள் என்று தேவையில்லாமல் பீதியைக் கிளப்பி பிரச்சினை செய்து வருகிறது கேரள அரசு. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதி்மன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தீர்ப்பை மதிக்காமல் தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கி விட்டது கேரள அரசு.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு அமைத்தது.இதில் தமிழகத்தின் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருவர் என மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்றனர்.இந்தக் குழு கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், சோதனைகள், விசாரணைகளில் ஈடுபட்டு வந்தது. மொத்தம் 8 வல்லுநர் குழுக்களை அமைத்து அணையின் பலத்தை ஆய்வு செய்தது. இதையடுத்து இறுதிக் கட்ட விசாரணை நடந்தது. அதன் பின்னர் கடந்த 22ம் தேதி ஐவர் குழு கூடி இறுதி அறிக்கையை தீர்மானித்தது.இதைத் தொடர்ந்து 206 பக்கங்கள் கொண்ட அறிக்கை சீல் வைத்த கவரில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்பளிக்கப் போவதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்துள்ளதால் அறிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் இரு மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய விஷயங்கள் சில கசிந்துள்ளன. அதில் பிரதானமானது முல்லைப் பெரியாறு அணை நல்ல பலத்துடன் இருப்பதாக ஐவர் குழுவினர் தெரிவித்துள்ளதுதான். அணை நல்ல பலத்துடனும், ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை தாராளமாக அதிகரிக்கலாம் என்றும் ஆனந்த் குழு தெரிவித்துள்ளதாம்.அதேசமயம், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய அணை கட்டுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், அதில் கேரளாவின் கருத்துக்கு மதிப்பளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.தற்போதைய வழக்கு முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்தது என்பதால் அணை பலமாக உள்ளது என்ற ஐவர் குழுவின் பிரதான கருத்தே முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அறிக்கையானது தமிழகத்திற்கு நிச்சயம் சந்தோஷம் தரக் கூடிய ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.ஐவர் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் மே 4ம் தேதி பரிசீலனைக்கு எடுக்கவுள்ளது.

விண்கற்களில் பிளாட்டினத்தை வெட்டியெடுக்க திட்டம்.


பிளாட்டினம் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை வெட்டி எடுத்து வர விண்கற்களுக்கு (asteroids) 'புல்டோசர்களை' அனுப்பப் போகிறது Planetary Resources Inc என்ற அமெரிக்க நிறுவனம்.இந்தத் திட்டமே சயின்ஸ் பிக்சன் சினிமா மாதிரி இருந்தாலும், இதற்கு நிதியுதவி செய்ய கூகுள் நிறுவன அதிபர்களான லேரி பேஜ், எரிக் ஸுமிட் உள்ளிட்ட பல பெரும் தலைகள் முன் வந்துள்ளனர்.முதல்கட்டமாக பூமிக்கு அருகாமையில் சுற்றி வரும் எரிகற்களை (near-Earth asteroids) இந்த நிறுவனம் குறி வைக்கப் போகிறது. சுமார் 1,500 எரிகற்கள் பூமியை மிக நெருக்கமாகவே சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே நாஸாவின் ஒரு செயற்கைக் கோள் ஒரு எரிகல்லில் லேண்ட் ஆகி, அதில் சில ரசாயன சோதனைகளையும் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எரிகற்களில் தரையிறங்குவது கொஞ்சம் ஈசியான விஷயம் தான். நிலவிலோ அல்லது வேறு கோள்களிலோ நுழைந்து தரையிறங்க அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளும், பாராசூட்களும், பெரும் கவசங்கள் கொண்ட விண் கலன்களும் தேவை.ஆனால், எரிகற்களில் ஈர்ப்பு விசையும், அழுத்தமும் மிக மிகக் குறைவு. சுமார் 20 சதவீத எரிகற்கள் பனிகட்டிகளால் ஆனவை தான். மற்றவை கல்- கனிமங்களால் ஆனவை. இதனால், அங்கு ஒரு ரோபா போன்ற கருவியை தரையிறக்குவது கொஞ்சம் எளிதான விஷயம் தான்.இங்கு சுரங்கம் தோண்டும் ரோபாக்களை அனுப்பி, தேவையான கனிமத்தை வெட்டி எடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிடலாம் என்கிறார் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆண்டர்ஸன்.ஒரு அவுன்ஸ் பிளாட்டினம் 1,500 டாலர்கள் விலை போகும் நிலையில், எரிகற்களுக்கு ரோபோவை அனுப்பி அங்கிருந்து பிளாட்டினத்தை வெட்டி எடுத்து வருவது நிச்சயம் லாபகரமான தொழிலாகவே இருக்கும் என்கிறார்.

இந்த நிறுவனத்தின் இன்னொரு நிறுவனரான பீட்டர் டையமன்டிஸ் ஏற்கனவே 'விண்வெளி டூர்' நிறுவனத்தை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 8 பெரும் பில்லியனர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு இவர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா மற்றும் ரஷ்ய விண்வெளி அமைப்பு மூலம் சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளார். இதில், நாஸாவும் ரஷ்யாவுக்கும் பெரும் லாபம் கூடவே டையமன்டிசும் பெரும் பணத்தைப் பார்த்துவிட்டார்.இதையடுத்தே எரிகற்களை தோண்டி பிளாட்டினம் எடுக்கும் ஆசை இவருக்கு வந்துள்ளது. தனது நிறுவனத்தின் தலைவராகவும் தலைமைப் பொறியாளராகவும் நாஸாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் லெவிக்கியை நியமித்துள்ளார். இவர் நாஸாவின் மார்ஸ் (செவ்வாய்) கிரகத்துக்கு செயற்கைக் கோள்களை அனுப்பும் திட்டத்துக்கான மேலாளராக இருந்தவர்.

மேலும் எரிகற்களைத் தோண்ட லேசர்களை பயன்படுத்தும் முடிவில் இருக்கும் இந்த நிறுவனம் சுமார் 25 லேசர் தொழில்நுட்ப வல்லுனர்களையும் வேலைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளனர். வாஷிங்டனின் பெல்வியூ பகுதியில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.கூகுள் நிறுவனர்கள் தவிர பேரோட் சிஸ்ட்ம்ஸ் நிறுவன அதிபரான ரோஸ் பெரோட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை சாப்ட்வேர் ஆர்கிடெக்ட்டான சார்லஸ் சிமோன்யி (இவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு டூர் போய் வந்தவர்) ஆகியோரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.நாஸாவின் ஸ்பேஸ் ஷட்டில் விண்கல வீரரான (பலமுறை விண்வெளிக்குப் போய் வந்தவர்) தாமஸ் ஜோன்ஸ் மற்றும் அவதார்- டைடானிக் படங்களின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் அட்வைசர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக ஒரு அதிக சக்தி கொண்ட டெலஸ்கோப் மற்றும் லேசர் ஆய்வுக் கருவிகள் அடங்கிய ஒரு சிறிய செயற்கைக் கோளை பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் விண் கல்லுக்கு அனுப்பவுள்ளது இந்த நிறுவனம். அடுத்து சில கனிமவியல் விஞ்ஞானிகளை நேரடியாக விண் கற்களுக்கு அனுப்பி சோதனை நடத்திவிட்டு, அடுத்த கட்டமாக கனிமங்களை தோண்டும் வேலையை ஆரம்பிக்கவுள்ளது.பூமிக்குள் வந்து விழுந்த விண்கற்களில் சிலவற்றில் மிக அதிகளவிலான பிளாட்டினம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்று... கால்பந்தாட்ட மைதான அளவுள்ள ஒரு விண் கல்லை ராக்கெட்டுகள் மூலம் பூமிக்கு அருகே நகர்த்தி வந்து, அதில் கனிமங்களை அள்ளுவது!

1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் செட்டிலாகிவிட விருப்பம் .

 நீங்கள் எந்த நாட்டில் குடியேற விரும்புகிறீர்கள்? என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் செட்டிலாகிவிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சீனர்கள்தான் அதிகமாக அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் குடியேறுவது குறித்து கால்,அப் என்ற அமைப்பு 151 நாடுகளை சேர்ந்தவர்களிடம் ஆய்வு நடத்தியது. அதில், உலகின் மொத்த இளைஞர்களில் 15 விழுக்காடு அதாவது 64 கோடி பேர் வெளிநாடுகளில் குடியேற விருப்பம் தெரிவித்தனர். குறிப்பாக, அமெரிக்காவில் குடியேற அதிகமானோர் விரும்புகின்றனர்.அமெரிக்காவில் குடியேற அதிகபட்சமாக சீனர்கள் 2.2 கோடி பேர், 1.5 கோடி நைஜீரியர்கள், 1 கோடி இந்தியர்கள் விருப்பம் தெரிவித்தனர். பிரேசில், வங்கதேச நாட்டவர்களும்கூட அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்ந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியாவில் செட்டிலாகும் கனவும் இளைஞர் சமூகத்திடம் இருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தலைவராக தண்டபாணி குப்புசாமி

வட அமெரிக்காவில் உள்ள, ஐக்கிய அமெரிக்கா மாகாணங்கள் மற்றும் கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்களை ஒரு குடையின் கீழ்க் கொண்ட கூட்டமைப்பாக, கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளக வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை இயங்கி வருகிறது. இப்பேரவையானது எதிர்வரும் ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் பால்டிமோர் நகரில் தனது வெள்ளி விழாவையும் கொண்டாடவிருக்கிறது. வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின், 2012-2014 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாக, தேர்தல் அலுவலர் திரு.சிவானந்தம் மாரியப்பன்(மின்னசோட்டா தமிழ்ச்சங்கம்) அவர்களின் மேற்பார்வையில் இடம் பெற்றன.இத்தேர்தலில், கிட்டத்தட்ட 26 தமிழ்ச்சங்கங்கள், பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள் எனப் பலரும் நேரடியாகப் பங்கு பெற்றார்கள். முடிவில், கீழ்க்கண்டவர்கள் பேரவை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி நியூயார்க் நகரில் அறிவித்தார்.

தலைவர்: முனைவர் தண்டபாணி குப்புசாமி
(பனை நிலம் தமிழ்ச் சங்கம் - சார்ள்சுடன் - தென் கரோலினா)

துணைத் தலைவர்: பீட்டர் யெரோணிமூஸ்
(வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் - வாசிங்டன் டி.சி.)

செயலாளர்: பதிவர் பழமைபேசி என்கிற மெளன.மணிவாசகம் 
(தென்-மத்திய தமிழ்ச் சங்கம் - மெம்ஃபிசு - டென்னசி)

துணைச்செயலாளர்: செந்தாமரை பிரபாகர்
(சார்லட் நகர தமிழ்ச் சங்கம் - வட கரோலினா)

பொருளாளர்: தங்கமணி பாலுச்சாமி
(அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் - அட்லாண்டா - ஜார்ஜியா)

இயக்குநர் 1: கரு மலர்ச்செல்வன்
(பேரவை ஆயுட்கால உறுப்பினர் - க்யூசுடன் - டெக்சாசு)

இயக்குநர் 2: யோபு தானியேல்
(மிசெளரி தமிழ்ச் சங்கம் - செயிண்ட் லூயிசு - மிசெளரி)

இயக்குநர் 3: பிரகல் திரு
(கனடியத் தமிழர் பேரவை - கனடா)

இயக்குநர் 4: சாரங்கபாணி குகபாலன்
(இலங்கை தமிழ்ச் சங்கம் - அமெரிக்கா)

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் அரசு செல்லையா, முன்னாள் தலைவர் க.தில்லைக்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும், ஜூலை மாதம் பால்ட்டிமோர் நகரில் கோலாகலமாய் இடம் பெறவிருக்கும் பேரவை வெள்ளிவிழாவில் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

இதே நாள்...


  • அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தினம்
  • தான்சானியா தேசிய தினம்
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி பிறந்த தினம்(1762)
  • கணித மேதை ஸ்ரீநினாச ராமானுஜன் இறந்த தினம்(1920)
  • தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை இறந்த தினம்(1897)

நெல்லிக்காயின் மகத்துவம்.

நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர். நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. அட்சய திருதியை தினம் ஒன்றில் தான் அம்பிகையைப் போற்றி கனகதாரா துதியினைப் பாடி தங்க நெல்லிக்கனி மழையைப் பொழியச் செய்தாராம் ஆதிசங்கர மகான். நெல்லி மரத்தில் திருமாலும் திருமகளும் சேர்ந்து உறைவதாகச் சொல்கின்றன புராணங்கள். ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது. அங்கே துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும். நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர். அமாவாசை தினங்களிலும், இரவு நேரத்திலும் நெல்லிக்கனியை உண்பது கூடாது.  

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம் குறைந்து விடும்.

பி ஃபார் பாம், சி ஃபார் சாக்கு(கத்தி)

உத்தரப் பிரதேச பள்ளிகளில் மாணவர்களின் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடங்கள் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாம் படிக்கும்போது ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பால், சி ஃபார் கேட் என்றுதான் படித்திருப்போம். ஆனால் உத்தரப் பிரதேச பாடங்களில் பி ஃபார் பாம்(வெடிகுண்டு), சி ஃபார் சாக்கு(கத்தி) என்று இடம்பெற்றுள்ளது.தனியார் நர்சரி பள்ளிகளின் பாடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.இது தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் புத்தக வெளியீட்டு நிறுவனமான பிரிஸம் ஹவுஸ் பப்ளிகேஷன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து ஸ்ருதி அகுஜா என்பவர் கூறுகையில், இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மிகவும் சிறிய வயதில் உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற வார்த்தைகளை கற்றுக்கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்கீழ் இந்த பாடம் கற்பிக்கப்படுவதால் சிபிஎஸ்சி நிர்வாகிகளும் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 32 பக்க புத்தகத்தின் வெளியீட்டாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்சி நகர ஒருங்கிணைப்பாளர் ஜாவீத் ஆலம் தெரிவித்தார்.
இது ஒரு குளறுபடி என்றால் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடி 5 இடங்களில் தலைகீழாக அச்சடிக்கப்பட்டுள்ளது.இந்த 2 விவகாரங்களும் உத்தரப் பிரதேச கல்வித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

15 வயதுக்கு முன்பு உறவு பெண்களே அதிகம்.

 இந்தியாவில் 15 வயதுக்கு முன்பு ஆண்களைவிட பெண்களே அதிகமாக உறவுவைத்துக் கொள்கின்றனர் என்பது கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 8 சதவீதம் பெண்கள் 15 வயதுக்கு முன்னரே பாலியல் உறவு கொண்டுள்ளனர். ஆனால் அதே வயதில் ஆண்களில் 3 சதவீதம்பேரே உறவுகொண்டுள்ளனர்.கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 வயதுக்கு முன்பு 17 சதவீதம் பெண்கள் உறவு வைத்துக் கொள்கின்றனர். இந்தியாவும் படிப்படியாக அந்த நிலையை நோக்கி முன்னேறி வருவதை யுனிசெப் கணக்கெடுப்பு தெரிவி்க்கிறது.இதுபோல குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே உறவுகொள்வது எச்ஐவி நோய்த்தொற்றை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் தாயான 1000 பெண்களில் 45 பெண்கள் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களாக உள்ளனர்.2010-ம் ஆண்டில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 49 ஆயிரம் சிறுவர்களுக்கும், 46 ஆயிரம் சிறுமிகளுக்கும் எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...