|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 July, 2011

இதே நாள்...


  • சிங்கப்பூர் இன சமத்துவ தினம்
  •  பெல்ஜியம் தேசிய தினம்
  •  நெதர்லாந்து தேசிய தினம்
  •  இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்(1899)
  •  கருப்பு பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் இறந்த தினம்(2010)
  • சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையை வெளியிடஉயர் நீதிமன்றம் உத்தரவு!


    தமிழகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து திருச்சியைச் சேர்ந்த மாணவர் என். ராம்பிரசந்த் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    மாணவர் தாக்கல் செய்த மனுவில், மாணவர்கள் தரமான சுயநிதி பொறியியல் கல்லூரியை தேர்வு செய்வதில் குழப்பம் உள்ளது. இதற்காக சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள விடுதி வசதி, பேருந்து வசதி, பிற கட்டமைப்பு வசதிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடலாம்.

    அண்ணா பல்கலைக்கழகம்தான் இந்த கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தும் பொறுப்பு உள்ளது என்பதாலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பற்றிய முழு விவரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிந்திருக்கும் என்பதாலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். இது மாணவர்களுக்கு நல்ல முறையில் பயன்படும் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலளித்த அண்ணா பல்கலைக்கழகம், ஒவ்வொரு கல்லூரியின் மாணவர் தேர்ச்சி விகிதத்தையோ, வசதிகள் பற்றியோ தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சட்டப்படியான கட்டாயம் எதுவும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதி என். பால் வசந்தகுமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    விசாரணை முடிந்து நீதிபதி அளித்த தீர்ப்பில், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் தேர்வு நடத்தும் பொறுப்பில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அது தொடர்பான எல்லா விவரங்களும் இருக்கும். அதன் அடிப்படையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பயலை பல்கலைக்கழகம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிட வேண்டும்.. இது தரமான கல்லூரிகளை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள்!

    மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்

    மூலாதாரம்: முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

    சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

    ஸ்வாதிஷ்டானம்: இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    மணிபூரகம்: சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

    அனாகதம்: இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

    விசுத்தி: இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

    ஆக்ஞா சக்கரம்: இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

    பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

    சகஸ்ரஹாரம்: இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

    இதயத்திற்கு இதமளிக்கும் விளாம்பழம்!


    உடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழமும் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக்,ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.

    எலும்புகளை பலப்படுத்தும்: விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் “ஆஸ்டியோபெரோஸிஸ்” என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

    வசியம் போக்கும்: விளாம்பழத்தை ஒட்டோடு இருபத்தியொருநாள் ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்ணாசை மறந்து விடும். கெட்ட பெண்களினால் இடம்பெற்ற வசிய மருந்துகளும் முறிந்துவிடும். பழுக்காத விளாங்காயைத் தண்ணீர் விட்டு அவித்து, அதை உடைத்து, உள்ளே உள்ள சதையை எடுத்து காலை வேளையில் மட்டும் ஐந்து நாள்வரை தொடர்ந்து கொடுத்து வந்தால், சீதபேதி குணமடையும். வெறும் பேதியை கூட நிறுத்திவிடும். பேதிக்கு இது கைகண்ட மருந்து.

    இதயத்திற்கு இதமளிக்கும்: இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைதுள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது. இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.

    பித்தம் போக்கும்: பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

    தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும். ஒருவர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது. காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

    விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

    முகம் இளமையாக மாறும்: வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும். இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் 'மாஸ்க்' போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.

    விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.

    பட்டுப்போன்ற கூந்தல்: வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் - 100 கிராம், சீயக்காய், வெந்தயம் - தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.

    தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப் புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

    விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும். விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும். மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
       

    அம்மாவுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்! - அஜீத்!!

    (முதல்வர் ஜெயலலிதா) வுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அவரை நான் நேரில் போய் பார்க்காவிட்டாலும், எது உண்மை எது பொய் என்று புரிந்து கொள்வார் அவர், என்று கூறியுள்ளார் அஜீத்குமார்.

    திமுக ஆட்சியின் போதே ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொண்டவர் நடிகர் அஜீத். தேர்தலில் அவர் சொல்லாமலேயே அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர் பெரும்பாலான அவரது ரசிகர் மன்றத்தினர். சிலர் மட்டும் திமுகவை ஆதரித்தனர். இது காதுக்கு வந்ததும், உடனடியாக மன்றங்களையே கலைத்துவிட்டார் அஜீத்.

    இந்த நிலையில் தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா முதல்வரானார். தேர்தலின்போது அமைதியாக இருந்த விஜய் கூட, ஓடிப் போய் ஜெயலலிதாவைச் சந்தித்து, 'நான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றேன் அப்படியே நடந்துவிட்டது' என அதிமுக வெற்றிக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார்.

    இன்னொரு பக்கம் கமல்ஹாஸன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மங்காத்தா படம் வெளியாவதையொட்டி, குறிப்பிட்ட ஆங்கிலப் பத்திரிகைகள் மற்றும் ஆங்கில சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து வருகிறார் அஜீத்.

    சமீபத்தில் ஒரு டிவி பேட்டியின் போது, ஏன் நீங்கள் முதல்வரைப் பார்க்கப் போகவில்லை என்று கேட்டனர்.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், "முதல்வர் மேடம் எந்த அளவு பிஸியாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களை அநாவசியமாக தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இன்று அவரை நான் ஏன் பார்க்கப் போகவில்லை என்று கேட்பவர்கள், ஒருவேளை நான் போய் பார்த்தாலும் ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிப்பார்ரகள். மங்காத்தா படத்தை சிக்கலில்லாமல் ரிலீஸ் செய்ய ஜெயலலிதாவை நான் போய் பார்த்தாகக் கூட கூறுவார்கள். இவங்க பேசறதுக்கேத்த மாதிரி நான் ஆட வேண்டுமா என்ன?

    அம்மாவுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். எது உண்மை எது உண்மை இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர் அம்மாதான். எனவே என்னைப் பற்றி குறை கூறுபவர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. இவர்கள் என்ன எனது அடுத்த படத்தை தயாரிக்கவா போகிறார்கள்?", என்றார்.

    சச்சினை 100-வது சதமடிக்க விடமாட்டோம்: இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்வான்!





    இங்கிலாந்து தொடரில் சச்சினை 100-வது சர்வதேச சதமடிக்கவிட மாட்டோம் என்று இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாட்டு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை(21-ம் தேதி) லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இதுவரை விளையாடிய சர்வதேச போட்டிகளில் 99 சதம் அடித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் விளையாடவிருக்கும் அவர் 100-வது சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

    இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் கூறியதாவது,

    சச்சின் இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக விளையாடியதில்லை. அவர் ஒரு சிறந்த வீரர். அவரை வீழ்த்துவதிலேயே குறியாக இருந்தால் அது எங்கள் அணிக்கு தான் ஆபத்து. இந்திய அணியில் சச்சின் தவிர பல திறமையான வீரர்கள் உள்ளனர். சச்சினை மற்றும் குறிவைத்தால் மற்றவர்கள் ரன் குவித்துவிடுவார்கள்.

    சச்சின் 100-வது சர்வதேச சதத்தை அடிக்கக் காத்திருக்கிறார். அதற்கு அவர் இன்னும் 6 அல்லது 7 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். இந்த தொடரில் அவரை சதமடிக்கவிட மாட்டோம். கேப்டன் டோணி ஒரு முக்கியமான வீரர். அவர் முன்வரிசையில் களமிறங்கினால் அது எதிரணிக்கு ஆபத்தாகிவிடும் என்றார்.

    குறும்படம்...


    குறும்படம்!


    உள்ளாட்சித் தேர்தல்- தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள்: சீமான் கோரிக்கை!

    இலங்கையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு ஈழத் தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களின் பின்னால் சர்வதேச மயமாக்கப்பட்ட சூழ்ச்சி உள்ளது என்பதை வெளிக்கொணர்வது இத்தருணத்தில முக்கியமானதாக உள்ளது.

    சேனல் 4 வெளியிட்ட “இலங்கையின் கொலைக்களம்” என்னும் ஆவணப்படம் மற்றும் ஏப்ரல் 2-ம் தேதி ஐ. நா. நிபுணர்களால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை ஆகியவை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இலங்கை அரசாங்கமானது பன்னாட்டு அங்கீகாரத்தை பல்வேறு வழிகளில் நாடி நிற்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.

    திடீரென வடக்கில் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்களை உருவாக்கி அவற்றை வடக்கில் இருந்து வந்த சிங்களவர்களைக் கொண்டு நிறைவேற்றி வடக்கை சிங்கள மயமாக்கும் தனது மறைமுக வேலைத் திட்டத்தை அரசாங்கம் முனைப்புடன் நிறைவேற்றி வருகிறது.

    மக்களாட்சிக் கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு அரசாங்கமாக தன்னை பன்னாட்டு மட்டத்தில் காட்டிக் கொள்வதற்காக துப்பாக்கி முனையில் தேர்தல்களை நடத்துவதோடு, நிறைவேற்றப்படப்படாத வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறது.

    எங்கள் தமிழ் சொந்தங்களின் சுயநிர்ணய உரிமைக் கனவுகளைக் கொடூரமாகச் சிதைத்ததோடு அது ஒரு கேள்விக் குறியாகவும் தற்போது விடப்பட்டுள்ளது. தமிழர்களின் பாதுகாப்பு இந்த அரசுக்கு எப்போதுமே முன்னுரிமையான விஷயமாக இருக்கவில்லை.

    பன்னாட்டு அவதானிப்பாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் இவர்களின் தமிழ் எதிர்ப்புப் போக்குக்கு ஒரு சிறந்த உதாரணம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலையில் சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை நாம் எவ்வாறு உறுதி செய்ய இயலும்?

    2009-ம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 5. தற்போது அது 4 லட்சத்து 81 ஆயிரத்து 791-க குறைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தல் திணைக்களம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 பெயர்களை பட்டியலில் இருந்து அகற்றியுள்ளது. இந்த எண்ணிக்கை மாற்றத்திற்கு எந்த ஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை.

    ஆயுதப் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சிங்கள மயமாக்குதல், படித்த தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்தல், தமிழ் பண்பாட்டை அவமதித்தல், சிங்கள மொழித் திணிப்பு, அடிப்படை மனிதத் தேவைகள் மறுக்கப்படுதல், பாதுகாப்பு வளையங்கள் தொடர்ச்சியாகப் பேணப்படுதல் போன்ற செயல்பாடுகளினால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்கின்றது.

    அங்கு வாழும் மக்கள் அமைதியையும், நீதியையும் சட்ட ஒழுங்கினையும், மனிதாபிமானத்தையும் வேண்டி நிற்கின்றனர். இந்த அரசாங்கம் இவற்றில் எதையுமே செவிமடுத்ததாகத் தெரியவில்லை. இவர்களிடம் இதை எதிர்பார்ப்பதும் எமக்கு பயனுள்ளதாக  இருக்கப் போவதில்லை. இந்த அரசாங்கமானது எங்களை அடிமை நிலைக்கே இட்டுச் செல்கின்றது. இந்த நேரத்தில் மக்களாகிய நாம் இந்த அரசாங்கத்தின் கபடத்தன்மையையும், சட்ட சீர்கேட்டையும், மனிதத்துக்கு எதிரான கொடூரத் தன்மையையும் எதிர்ப்பதற்கு ஒன்றிணைந்த சக்தியாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

    முதலாவதாக போர்க்குற்றம் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்த இலங்கை அரசாங்கம் உலகிற்கு அதற்குரிய பதிலை வழங்க வேண்டும். அப்படி ஒரு நாள் வரும் வரை சிங்கள அடிவருடிகளாகச் செயல்படும் எந்த ஒரு அரசியல்வாதியையும் நாம் முற்றாக புறக்கணிக்க வேண்டும். தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. ஒன்றிணைந்த சக்தியாக முழு மனதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் வாக்களிக்க வேண்டிய தருணம் இது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம் என்பதை மனதில் நிறுத்தி நாம் வாக்களிப்போம்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில்.

    நாளை 2000வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி- பெரும் ஆர்வத்தில் ரசிகர்கள்!

    உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நாளை 2000வது போட்டி தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான இந்தப் போட்டி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் நீண்ட போட்டி என்பது டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான். 5 நாட்கள் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். தங்களது நாட்டுக்காக ஒருநாள் போட்டி, டுவென்டி 20 போட்டிகளில் விளையாடுவதை விட டெஸ்ட் போட்டியில் விளையாடத்தான் ஒவ்வொரு வீரரும் விரும்புவர்.

    1877ல் முதல் போட்டி: டெஸ்ட் போட்டிகள் தொடங்கிய வரலாற்றை அறிய 1877ம் ஆண்டுக்குப் போக வேண்டும். முதல் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே அந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி தொடங்கியது.

    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட அந்த முதலாவது சர்வதேச டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது.

    சர்வதேச அளவில் நடந்த முதல் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் போட்டித் தொடராக இது இருந்தாலும், சர்வதேச அளவில் நடந்த முதல் கிரிக்கெட் போட்டி என்ற பெருமை, 1844ம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்த போட்டிக்கே உண்டு.

    டெஸ்ட் போட்டிகளை எல்லா நாடுகளும் விளையாட முடியாது. ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அந்தஸ்தைப் பெற்ற அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியும்.

    10 டெஸ்ட் அணிகள்: டெஸ்ட் போட்டிகள் தோன்றி 100 ஆண்டுகள் ஆனதைக் கெளரவிக்கும் வகையில் 1977ம் ஆண்டு மார்ச் 12 முதல் 17ம் தேதி வரை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. உலகின் முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா இதே வித்தியாசத்தில்தான் வென்றது என்பது சுவாரஸ்யமானது.

    முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள்தான் முதன்மையானதாகும். தேசிய அளவிலான அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்தப் போட்டிகளை தற்போது 10 அணிகள் ஆடி வருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் வரிசையில் முதலாவதாக இணைந்த அணிகள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா. 2வதாக 1889ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்தது. 3வது அணியாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1928ம் ஆண்டு இணைந்தது.

    4வது அணியாக நியூசிலாந்து 1930ம் ஆண்டும், 5வதாக இந்தியா 1932ம் ஆண்டும் சேர்ந்தன.

    6வது அணியாக பாகிஸ்தான் 1952ம் ஆண்டும், 7வது அணியாக 1982ம் ஆண்டு இலங்கையும், 8வது அணியாக ஜிம்பாப்வே 1992ம் ஆண்டும் இணைந்தன.

    9வது அணியாக இணைந்தது வங்கதேசம். 2000மாவது ஆண்டு முதல் இது டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது.

    ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் என்ற நிலை இருந்தது. பின்னர் ஐசிசி அதை மாற்றி தேசிய அணிகளுக்கிடையே மடடும்தான் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று நிர்ணயித்தது.

    முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. ஆனால் ஒரு நாள் போட்டிகள் வந்த பிறகு டெஸ்ட் போட்டிகள் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது. இதனால் தற்போது கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் 3 முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடுகின்றன.

    ஆஷஸ் தொடர்: உலக அளவில் புகழ் பெற்ற டெஸ்ட் தொடர் என்றால் அது ஆஷஸ் தொடர்தான். எப்படி இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் இரு நாடுகளிலும் அக்னியைப் பரப்புகிறதோ அதேபோலத்தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும்.

    இரு அணிகளும் சேர்ந்து 1877ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தபோதிலும், 1882 முதல்தான் இரு அணிகளுக்கிடையிலான போட்டிகளும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறத் தொடங்கின.

    அந்த ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதின. அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து தனது முதல் இனனிங்ஸில் 101 ரன்களை எடுத்தது. பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 122 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையி்ல இங்கிலாந்து ஆட வந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீ்ச்சால், வெற்றி இலக்கை அடைய 8 ரன்களே தேவை என்ற நிலையி்ல இங்கிலாந்து ஆட்டமிழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் ஒரு அணி வென்றது இதுவே முதல் முறையாகும்.

    இங்கிலாந்து வெல்லும் என்ற நம்பிக்கையை விட, நமது காலணி நாடான ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து எப்படியும் வென்று விடும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் அப்படியே சமைந்து போய் விட்டனர். மைதானமே மயான அமைதியில் மூழ்கியது. இருப்பினும் அதிர்ச்சியை அமைதியாக உள்வாங்கிக் கொண்ட இங்கிலாந்து ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்களை பாராட்டி கைதட்டினர்.

    இங்கிலாந்தின் படு தோல்வியை இங்கிலாந்து பத்திரிகைகள் கிழி கிழியென்று கிழித்தெறிந்தன. அதில் படு முக்கியமானது தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ் எழுதிய தலையங்கம்தான்.

    அதில், ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது. அதன் உடல் எரிக்கப்பட்டு ஆஷஸ் அதாவது சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்று எழுதியிருந்தனர். அதுதான் உலக அளவில் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம். அன்று முதல் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர்களுக்கு ஆஷஸ் தொடர் என்றே பெயரிட்டு விட்டனர். ஆஷஸ் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஒரு முறை இங்கிலாந்தில் நடந்தால் மறு முறை ஆஸ்திரேலியா என மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 123 போட்டிகளிலும், இங்கிலாந்து 100 போட்டிகளிலும் வென்றுள்ளன. 87 போட்டிகள் டிராவாகியுள்ளன.

    டெஸ்ட் போட்டி சாதனைகள்: அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அணி - இங்கிலாந்து, 907 போட்டிகள்.

    இந்தியா விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 447. இதில் வென்றது 108, தோற்றது 139, டிராவானது 198.

    ஒரு டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணி இலங்கை - 952-6 டிக்ளேர்ட்.

    ஒரு இன்னிங்ஸில் மிகவும் குறைந்த ரன்கள் எடுத்த அணி நியூசிலாந்து - 26 ரன்கள்.

    அதிக ரன் குவித்த சச்சின்: டெஸ்ட் போட்டிகளில் அதிகம் ரன் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர்- 14,692 ரன்கள்.

    அதிக பேட்டிங் சராசரியை வைத்திருந்த வீரர் டான் பிராட்மன்- 99.94

    ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வீரர் பிரையன் லாரா - 400.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக செஞ்சுரிகள் போட்டவர் சச்சின் - 51

    அதிவேகமாக சதம் அடித்த வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் - 56 பந்துகளில் சதமடித்தார்.

    டெஸ்ட் போட்டிகளி்ல் அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர் டான் பிராட்மன் - 12

    அதிக முறை முச்சதம் போட்ட வீரர்கள் லாரா, ஷேவாக், பிராட்மன், கிறிஸ் கெய்ல் - தலா 2 முறை.

    அதிக விக்கெட் வீழ்த்திய முரளீதரன்: டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் முத்தையா முரளீதரன்- 800 விக்கெட்கள்.

    அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் முரளீதரன் - 67

    அதிக முறை 10 விக்கெட் வீழ்த்தியவர் முரளீதரன் - 22

    ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் - ஜிம் லேகர், அனில் கும்ப்ளே தலா 10 விக்கெட்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்தவர் டிராவிட் - 202

    அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர் சச்சின் - 177

    இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் கிரிக்கெட் நாளை தனது 2000வது போட்டியை ரசிகர்களுக்கு படைக்கவிருக்கிறது. இப்போட்டியில் இந்தியா வெல்லுமா, இங்கிலாந்து வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது. அதை விட முக்கியமாக இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தைப் போடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களிடம் நிலவுகிறது.

    இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்!

    இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், மற்ற இனத்தவரைப் போல சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை வந்துள்ள அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் டெல்லி வந்திறங்கினார். நேற்று அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

    இன்று அவர் தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் மாணவர்களை சந்தி்த்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இந்திய மாணவர்களை மனதார வரவேற்கிறோம். இந்தியா-அமெரி்ககா இடையேயான உறவு பலமாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தீவிரவாதத்தை அழிக்கப் பாடுபடுவோம்.

    இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை: தமிழகத்தில் தமிழர்கள் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்பது பாராட்டுக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. வாய்ப்பு தேடி அமெரிக்கர்கள் இந்தியாவைத் தேடி வரும் சூழல் வந்துள்ளது. பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம். உலக அரங்கில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது.

    இந்தியா தேர்தல் நடத்துவதில் மிகவும் புகழ் பெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தி்ன் பங்கு மிகப் பெரியது. இதேபோன்று எகிப்து, ஈராக் நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட இந்தியா உதவ வேண்டும்.ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரி்கக அதிபர் ஒபாமா ஆதரவாக உள்ளார். உலக அளவில் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் முக்கிய பங்கு இந்தியாவுக்கு உண்டு என்றார்.

    ஜெயலலிதாவை சந்தித்த ஹிலாரி: தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹிலாரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

    வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு!

    சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனியில் 21,000 சதுர அடி நிலத்தில் 1959ம் ஆண்டு முதல் 31 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். திமுக ஆட்சியில் 2008ம் ஆண்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி கே.சுரேஷ்குமார் இந்த நிலத்தில் இருந்தவர்களை விரட்டியடித்துவிட்டு, நிலத்தை ஆக்கிரமித்தார். அங்கிருந்த வீடுகளையும் இடித்துவிட்டு வேலி அமைத்தார். இது குறித்து அந்த 31 குடும்பத்தினரும் திமுக ஆட்சியில் போலீஸில் புகார் கொடுத்தும் பலனில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    நீதிமன்ற உத்தரவுப்படி பிரச்சனைக்குரிய நிலத்தைப் பார்வையிட்ட அப்போதைய கோட்டாட்சியர் ஏ.பாலகுருமூர்த்தி, அங்கம்மாள் காலனி நிலத்தில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டார். ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தவும், நிலத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு கடந்த 3 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை.

    இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 11ம் தேதி அங்கம்மாள் காலனி பொதுமக்கள் கணேசன் என்பவர் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அதில், அப்போதைய கோட்டாட்சியர் அளித்த பொய்யான அறிக்கையை ரத்து செய்யவும், நிலத்தைப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தனர்.

    இதையடுத்து சேலம் மாநகரக் குற்றப்பிரிவு போலீஸார் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், அவரது தம்பி மகனும், 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவருமான பாரப்பட்டி கே.சுரேஷ்குமார், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கெளசிக பூபதி,

    சேலம் மாநகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, முன்னாள் கோட்டாட்சியர் பாலகுருமூர்த்தி, மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஜிம் ராமு, 'கூல்' மகேந்திரன், அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தன், பெட்டிக்கடை கனகராஜ், மெக்கானிக் முருகன், அதிமுக பிரமுகரான கறிக்கடை பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதில் கிருஷ்ணசாமி, கனகராஜ், முருகன் ஆகிய மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ. 50 கோடி நில அபகரிப்பு-இன்னொரு வழக்கு: இதற்கிடையே சேலம் சாரதா கல்லூரி சாலையில் சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டிப் பறித்ததாகவும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் சேலம் தொழிலதிபர்களான ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராமநாதன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.துரைசாமி, அசோக் துரைசாமி, கீதா, சுமித்ரா தேவி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திமுக பிரமுகர் அழகாபுரம் முரளி, விஜய்பாபு ஆகிய 11 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே உள்ள பிரிமீயர் இந்த வழக்குகள் தொடர்பான எப்.ஐ.ஆர். நகலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

    இதனால் இந்த வழக்குகள் தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய சென்னை விரைந்துள்ளார். இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அவரையும் வழக்கில் தொடர்புடைய பிறரையும் பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதே நாள்...


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...