|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 July, 2011

வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு!

சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனியில் 21,000 சதுர அடி நிலத்தில் 1959ம் ஆண்டு முதல் 31 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். திமுக ஆட்சியில் 2008ம் ஆண்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி கே.சுரேஷ்குமார் இந்த நிலத்தில் இருந்தவர்களை விரட்டியடித்துவிட்டு, நிலத்தை ஆக்கிரமித்தார். அங்கிருந்த வீடுகளையும் இடித்துவிட்டு வேலி அமைத்தார். இது குறித்து அந்த 31 குடும்பத்தினரும் திமுக ஆட்சியில் போலீஸில் புகார் கொடுத்தும் பலனில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி பிரச்சனைக்குரிய நிலத்தைப் பார்வையிட்ட அப்போதைய கோட்டாட்சியர் ஏ.பாலகுருமூர்த்தி, அங்கம்மாள் காலனி நிலத்தில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டார். ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தவும், நிலத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு கடந்த 3 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 11ம் தேதி அங்கம்மாள் காலனி பொதுமக்கள் கணேசன் என்பவர் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அதில், அப்போதைய கோட்டாட்சியர் அளித்த பொய்யான அறிக்கையை ரத்து செய்யவும், நிலத்தைப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தனர்.

இதையடுத்து சேலம் மாநகரக் குற்றப்பிரிவு போலீஸார் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், அவரது தம்பி மகனும், 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவருமான பாரப்பட்டி கே.சுரேஷ்குமார், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கெளசிக பூபதி,

சேலம் மாநகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, முன்னாள் கோட்டாட்சியர் பாலகுருமூர்த்தி, மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஜிம் ராமு, 'கூல்' மகேந்திரன், அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தன், பெட்டிக்கடை கனகராஜ், மெக்கானிக் முருகன், அதிமுக பிரமுகரான கறிக்கடை பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் கிருஷ்ணசாமி, கனகராஜ், முருகன் ஆகிய மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 50 கோடி நில அபகரிப்பு-இன்னொரு வழக்கு: இதற்கிடையே சேலம் சாரதா கல்லூரி சாலையில் சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டிப் பறித்ததாகவும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சேலம் தொழிலதிபர்களான ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராமநாதன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.துரைசாமி, அசோக் துரைசாமி, கீதா, சுமித்ரா தேவி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திமுக பிரமுகர் அழகாபுரம் முரளி, விஜய்பாபு ஆகிய 11 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே உள்ள பிரிமீயர் இந்த வழக்குகள் தொடர்பான எப்.ஐ.ஆர். நகலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

இதனால் இந்த வழக்குகள் தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய சென்னை விரைந்துள்ளார். இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அவரையும் வழக்கில் தொடர்புடைய பிறரையும் பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...