தமிழகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திருச்சியைச் சேர்ந்த மாணவர் என். ராம்பிரசந்த் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாணவர் தாக்கல் செய்த மனுவில், மாணவர்கள் தரமான சுயநிதி பொறியியல் கல்லூரியை தேர்வு செய்வதில் குழப்பம் உள்ளது. இதற்காக சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள விடுதி வசதி, பேருந்து வசதி, பிற கட்டமைப்பு வசதிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடலாம்.
அண்ணா பல்கலைக்கழகம்தான் இந்த கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தும் பொறுப்பு உள்ளது என்பதாலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பற்றிய முழு விவரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிந்திருக்கும் என்பதாலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். இது மாணவர்களுக்கு நல்ல முறையில் பயன்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அண்ணா பல்கலைக்கழகம், ஒவ்வொரு கல்லூரியின் மாணவர் தேர்ச்சி விகிதத்தையோ, வசதிகள் பற்றியோ தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சட்டப்படியான கட்டாயம் எதுவும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி என். பால் வசந்தகுமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்து நீதிபதி அளித்த தீர்ப்பில், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் தேர்வு நடத்தும் பொறுப்பில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அது தொடர்பான எல்லா விவரங்களும் இருக்கும். அதன் அடிப்படையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பயலை பல்கலைக்கழகம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிட வேண்டும்.. இது தரமான கல்லூரிகளை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment