ஒரு சிற்றூர் இருந்தது. அங்கே அடர்ந்த காடும், அதனருகில் ஒரு தடாகமும் இருந்தன. அழகிய அமைதியான இடம். அந்த தடாகத்தில் இறங்கி குளித்து விளையாட, தேவ கன்னிகை கள் வருவது வழக்கம். இப்படி ஒரு நாள், தேவ கன்னிகைகள் குளிக்கும் போது, கைகளால், தண்ணீரை வாரி இறைத்து விளையாடினர். அந்த சமயம், அந்தக் குளத்துக்கு வந்தார் ஒரு முனிவர். தேவ கன்னிகைகள் தண்ணீரை வாரி இறைத்து விளையாடும்போது, அந்த தண்ணீர், முனிவர் மேல் விழுந்தது. முனிவருக்கு கோபம் வந்தது. உடனே, அந்த தேவ கன்னிகைகளை, பேயாகும்படி சாப மிட்டார். அவர்களும் பேய்களாகி, பக்கத்தில் இருந்த மரத்தின் கிளை களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த காட்டுக்குள் சென்று, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, தேவேந்திரனைக் குறித்து தவம் செய்தார் முனிவர். ஆனால், அவர் முன் தோன்றவே இல்லை தேவேந்திரன். தேவேந்திரன் சபைக்கு தேவ கன்னிகைகள் வராததால் தேவசபை, களை இழந்திருந்தது. இதற்கு காரணம் என்ன என்று தேவேந்திரன் யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார் நாரதர்.
தன் கவலையை அவரிடம் தெரிவித்தார் தேவேந்திரன். நாரதரும் தன் ஞான திருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து, தேவேந்திரனை சமாதானப்படுத்தி, தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் போய், "நீங்கள் எதற்காக தவம் செய்கிறீர்கள்?' என்று கேட்டார். முனிவரும், தேவேந்திரனை குறித்து தவம் செய்வதாகச் சொன்னார். "தேவேந்திரன், உங்கள் கண் முன் வர மாட்டார். நீங்கள் ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று கூறுங்கள்...' என்றார் நாரதர். "குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், என் மீது தண்ணீர் படும்படி குளித்ததால், கோபம் கொண்டு, அவர்களை பேயாகும்படி சபித்து விட்டேன். அதன் பிறகு, இங்கு வந்து தேவேந்திரனை குறித்து தவம் செய்கிறேன். ஆனால், தேவேந்திரன் நேரில் வரவில்லை...' என்றார் முனிவர். அதற்கு நாரதர், "முனிவரே! நீர் தவறு செய்து விட்டீர். தபசிகளுக்கு கோபமே வரக் கூடாது. மற்றவர்கள் மேல் எதற்கும் கோபப் படக் கூடாது. நீர் கோபப்பட்டு, தேவ கன்னிகைகளை பேயாகும்படி சபித்து விட்டீர். அவர்கள் பேயாக உருக்கொண்டு, குளக்கரையில் உள்ள மரத்தில் தொங்குகின்றனர். "இந்திர சபைக்கு தேவ கன்னிகைகள் வராத காரணம் தெரிந்து, தேவேந்திரன் உங்கள் தவத்தை அங்கீகாரம் செய்யாததால், உமக்கு எதிரில் வரவில்லை. நீங்கள் உடனே குளக்கரைக்குச் சென்று, தேவ கன்னிகைகளுக்கு கொடுத்த சாபத்தை திரும்பப் பெற்று, தேவேந்திரனிடம் மன்னிப்பு கேளுங்கள்...' என்றார். முனிவரும் அதேபோல் செய்தார். "இன்னும் பல ஆண்டுகள் நீர் தவம் செய்தால்தான், தேவேந்திரன் உம் முன் தோன்றுவார்.. என்று சொல்லி மறைந்து விட்டார் நாரதர். மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தார் முனிவர்; இன்னும் செய்து கொண்டே இருக்கிறார். தேவேந்திரன் தான் இன்னும் வரவில்லை.