|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 November, 2011

மணிப்பூரில் பெட்ரோல் விலை ரூ 200; சிலிண்டர் ரூ 2000!


 தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு இன்றோடு 100 நாட்களாகியும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவைகள் கள்ளச்சந்தையில் பலமடங்கு விற்கப்படுகின்றன.மணிப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியிலிருந்து ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்பால்-திமாபூர்-குவாஹாத்தி நெடுஞ்சாலையும், இம்பால்-ஜிரிபாம்-சில்சார் ஆகிய இரு நெடுஞ்சாலைகளும் இப்போராட்டத்தால் முற்றிலும் முடக்கப்பட்டது. நாகா மக்கள் அதிகமாக வாழும் சேனாபதி மாவட்டத்திலிருந்து குக்கி மக்கள் அதிகம் வாழும் சாதர் மலைப்பகுதியை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று குக்கி மக்கள் ஆகஸ்ட் 1 லிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகா பகுதி மக்கள் ஆகஸ்ட் 21 லிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 200-க்கும், கேஸ் சிலிண்டர் ரூ 2 ஆயிரத்துக்கும் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன.ர்தல் நெருங்குவதால் மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக ஐக்கிய நாகா கவுன்சிலின் தகவல் தொடர்பாளர் மிலன் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கம் விலை தாறு மாறு...!

தங்கத்தின் விலை எல்லை மீறிய வீக்கத்துக்குப் போய்விட்டது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 496 அதிகரித்துள்ளதால், பெரும் ஆத்திரத்தில் உள்ளனர் நகை வாங்கும் சாதாரண பொது மக்கள். கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 21 ஆயிரத்து 80 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 496 அதிகரித்தது.சென்னை மார்க்கெட்டில் ஒரு சவரன் ரூ. 21 ஆயிரத்து 576 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,692-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 57 ஆயிரத்து 485 ஆகவும், ஒரு கிராம் ரூ. 61.45 ஆகவும் உள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு இதுவரை இல்லாத புதிய உயர்வை எட்டியதாலும் (1.1 சதவீத உயர்வு), ஐரோப்பிய நிதி நெருக்கடி காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்துவிட்டதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

வயசான காலத்தில பெத்தவங்கள அலைக்கழிக்காதீங்க..!


ஆடி, ஓடி முடிந்து அமைதியாக வாழ்க்கையை வாழ வேண்டிய நேரத்தில் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் பிள்ளைகள் பெற்றவர்களை கஷ்டப்படுத்துகின்றனர். வ.தான காலத்தில் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து இருக்கத் தான் ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போதுள்ள தலைமுறை அவர்களை பிரித்து வைத்துவிடுகிறது. அம்மா தலைமகன் வீட்டில் ஒரு மாதம் இருந்தால், அப்பா இளையவன் வீட்டில் இருப்பார். அடுத்த மாதம் இருவரும் இடமாறிவிடுகிறார்கள். அதிலும் அம்மாவுக்கு தான் அதிக மவுசு. காரணம் அம்மா வீட்டு வேலகளைப் பார்த்து கொள்வாரல்லவா. கடைசி காலத்தில் தந்தைகளின் பாடு தான் கஷ்டமாகிவிடுகிறது. இருவரையும் ஒரே வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள பிள்ளைகள் சம்மதிப்பதில்லை. வயதான காலத்தில் பழைய அனுபவங்கள் பற்றி பேசி மகிழ்வது தான் அவர்களுக்கு இன்பம். அந்த இன்பத்தைக் கூட பிள்ளைகள் பெற்றோருக்கு கொடுக்க மறுக்கின்றனர். ஒன்று தந்தையையும், தாயையும் பிரித்துவிடுகின்றனர். இல்லை என்றால் எங்களால் உங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று முகத்தில் அடித்தது போல் கூறி அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றனர். 

பெற்ற பிள்ளை டாக்டராக, வழக்கறிஞராக, 1000 பேருக்கு வேலை தருபவராக இருக்கையில் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்க வேண்டிய அவல நிலை. அதை நினைத்து நினைத்து அவர்கள் தினமும் கண்ணீர் வடிக்கின்றனர். எம்புள்ளைய எப்படியெல்லாம் ஆசை, ஆசையா வளர்த்தேன் இப்படி என்னை கடைசிக் காலத்தில் வீட்டை விட்டு விரட்டினானே என்று நொந்தே சாகின்றனர். வந்தவரை வாழவைக்கும் தமிழகம் என்று பெருமையாக சொல்கிறோம். ஆனால் அதே தமிழகத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வரும் அவல நிலையை எங்கே போய் சொல்வது. வந்தவர்களை வாழவைத்துவிட்டுவிட்டு பெத்தவங்கள வெளியே தள்ளுவது தான் நம் பண்பாடா? தனக்கும் வயதாகும் என்பதை பிள்ளைகள் என்று தான் உணர்வார்களோ?

நவ 11 ந் தேதி, 11.11 மணிக்கு, 1 நிமிடம் மவுனம் காக்க மனித நேயப் பேரவை!


 உலக சமாதானம் வேண்டி, வரும் 11ம் தேதி, ஒரு நிமிடம் மவுனமாக இருக்க மனித நேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவு பூங்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. மனித நேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவு பூங்கா அமைப்பின் கவுரவத் தலைவராக, நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா உள்ளார். இந்த அமைப்பின் தமிழக பொதுச் செயலாளர் உமைதாணு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

பயங்கரவாதம், வேலையில்லாத் திண்டாட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வறுமை, எய்ட்ஸ், போதை மருந்து கடத்தல், வன்முறை, எழுத்தறிவின்மை, சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதல், போர் போன்ற 11 கொடுமைகள் நாட்டை விட்டு ஒழிய வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக, அனைத்துக் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்க்கள், பொதுமக்கள் அனைவரும் நவம்பர் 11ம் தேதி 11.11 மணிக்கு 1 நிமிடம் மெளனம் காப்பதன் மூலம் உலக சமாதான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். எனவே இந்த நாளில் உலக சமாதானம் காக்க சபதம் ஏற்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூ.2.75 கோடி செலவில் “சுற்றுச்சூழல்” சுற்றுலா தலமாகும் கொல்லிமலை!


 பல அருவிகள், கோவில்கள், தாவரவியல் பூங்கா, மூலிகை பண்ணைகள் ஆகியவற்றை கொண்ட கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த “சுற்றுச்சூழல் சுற்றுலா” தலமாக மாற்றியமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும், பொருளாதார மேம்பாட்டிற்கு ஊக்க சக்தியாகவும் சுற்றுலா வளர்ச்சி விளங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தினை பன்னாட்டு அளவில் சிறந்த சுற்றுலா இடமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுற்றுலா வளம் நிறைந்து இருந்தும், அதிகம் பிரபலமாகாத காரணத்தால் குறைவான பயணிகள் வருகை தரும் சுற்றுலா இடங்களை தேர்ந்தெடுத்து, அவைகளை அதிக பயணிகளை கவரும் சுற்றுலாத்தலமாக மாற்றியமைக்கும் வகையிலான மேம்பாட்டு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பல அருவிகள், கோவில்கள், தாவரவியல் பூங்கா, மூலிகை பண்ணைகள் ஆகியவற்றை கொண்ட கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த “சுற்றுச்சூழல் சுற்றுலா” தலமாக மாற்றியமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.49 லட்சம்; வசலூர் பட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.53 லட்சம்; வசலூர்பட்டியில் உள்ள படகு குழாமை நன் முறையில் செயல்படுத்த ரூ.56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொல்லி மலையிலுள்ள அரப்பளேஸ்வரர் கோவிலுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சம்; மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாகவும் அவற்றில் நீராடுவதற்கான அனைத்து வசதிகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.86 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 75 லட்சம் ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!


கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும்.

மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,
1. எப்பொழுது பார்த்தாலும் நை, நை என்று நச்சரிப்பது. என்னங்க வீட்டுக்கு ஒரு புது டிவி வாங்கலாம், புது டிசைன் நகை வாங்கலாம் என்று பெரிய பட்டியல் போடுவது. கணவன் வரவுக்கேற்ப செலவழித்தால் நல்லது.

2. கேள்வி கேட்டே கொல்வது. அலுவலக்ததில் இருந்து வீ்ட்டுக்கு வர நேரமாகிவிட்டது என்றால் அவ்வளவு தான். ஏன் லேட், எங்கே போனீங்க, யாரைப் பார்த்தீங்கன்னு பல கேள்விகள். ஏற்கனவே எரிச்சலில் வந்திருக்கும் கணவனை இந்த கேள்விகள் மேலும் எரிச்சலூட்டும்.

3. நான் செய்வது தான் சரி என்கிற எண்ணம் கணவன்மார்களை கடுப்பாக்கும்.

4. என்னை ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்க விட மாட்டேன் என்கிறாள். ஆனால் அவள் மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்து என்னை வதைக்கிறாள் என்று கணவன்மார்கள் புலம்புகிறார்கள்.

5. நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டேன் என்கிறாள். அப்பொழுது கூட ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசி இம்சிக்கிறாள்.

6. அவளுக்கு உதவலாமே என்று சமையல் அறைக்குள் சென்றால், நீங்க வேலைப் பார்த்து கிழிச்சீங்க. எனக்கு ஒன்னுக்கு இரண்டு வேலை வைக்காம போங்க என்று விரட்டுகிறாள்.

7. நான் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறாள். என் பெற்றோரைக் கூட அண்டவிட மாட்டேன் என்கிறாள். என்னையே என் பெற்றோருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்கிறாள்.

8. உடன் பிறப்புகளுடன் பேசவிட மாட்டேங்கிறா. பேசினால் இட்டுகட்டி ஏதாவது குற்றம்குறை கூறுகிறாள்.

9. நண்பர்களுடன் வெளியே செல்ல முடியவில்லை. நான் முக்கியமா, இல்லை உங்களுக்கு நண்பர்கள் முக்கியமா என்கிறாள்.

10. திடீர், திடீர் என்று கோபப்படுகிறாள். காரணம் கேட்டால் திட்டித் தீர்த்து விடுகிறாள்.
என்ன பெண்களே, இந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு கணவன் மெச்சும் மனைவியாக நடக்க முயற்சி செய்வீர்களா?

தமிழ் தெரியாத நடிகைகள், செலவு வைக்கும் இசையமைப்பாளர்கள் - சேரன்!


இப்போதெல்லாம் மொழி தெரியாமல் இங்கு நடிக்க வரும் நடிகைகளை தமிழை கடைசி வரை கற்றுக் கொள்வதே இல்லை என்றும், வெளிநாட்டுக்கு கம்போசிங் போகிறோம் என்ற பெயரில் இசையமைப்பாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாகவும் சாடினார் இயக்குநர் சேரன். தெலுங்கில் பூமிகா தயாரித்த படத்தை 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்துக்கு தேவா குடும்ப வாரிசான போபோ சசி இசையமைத்திருந்தார். எனவே தேவா மற்றும் அவரது சகோதரர்கள் சபேஷ் முரளி உள்பட குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இதில் பங்கேற்ற சேரன் பேசுகையில், "தமிழ் படங்களில் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாள நடிகைகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி, டாப்சி போன்றறோர் முன்னணி நடிகைகளாக உள்ளனர். மேலும் பல புதுமுக நடிகைகளும் நடிக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது. இந்த நடிகைகள் தமிழ் கற்க வேண்டும். துள்ளி எழுந்தது காதல் படத்தின் நாயகி ஹரிப்பிரியா இங்கு பேசும்போது, 'அடுத்த முறை விழாவுக்கு வரும் போது நிச்சயம் தமிழ் பேசு வேன்' என்றார். இதே மாதிரிதான் 'முரண்' பட விழாவிலும் சொன்னார்.

ஆனால் தமிழ் கற்றுக்கொள்ளவே இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் பலர் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் கற்றுக் கொள்வது இல்லை. தமிழ்நாட்டு மருமகள் ஆகி விட்ட பிறகு தமிழ் கற்கிறார்கள். இனி வெளி மாநில நடிகைகள் ஆசிரியரை வைத்து தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். இசையமைப்பாளர்கள் இப்போதெல்லாம் வெளி நாட்டுக்கு பாடல்கள் கம்போசிங் போவதையும் ஒரு மாதம் ரீ ரீக்கார்டிங் செய்வதையும் பெருமையாக பேசுகின்றனர். இதில் என்ன பெருமை இருக்கிறது... தயாரிப்பாளர்களுக்கு அப்படி செலவு வைக்கக் கூடாது! என்னுடைய பாரதி கண்ணம்மா தொடங்கி பல படங்களில் பின்னணி இசைக்கு அதிகபட்சம் 7 நாட்கள்தான்," என்றார்.

வசனத்தை நீக்கிய இலங்கையில் இனி தமிழ்ப் படங்களை வெளியிடக் கூடாது!

சூர்யாவின் 7 ஆம் அறிவு படத்தில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வசனங்களை நீக்கிய இலங்கையைக் கண்டிக்கும் வகையில் இனி அங்கு தமிழ் திரைப்படங்களே திரையிடக்கூடாது என போராட்டம் வெடித்துள்ளது. ஈழத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாலேயே தமிழரக் விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் நீக்கி விட்டு இலங்கையில் திரையிட்டுள்ளனர். இதற்கு தமிழ் பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனிமேல் இலங்கையில் எனது படங்களை திரையிடமாட்டேன் என்று இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார்.7ஆம் அறிவு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


இதுபோல் எல்லா தயாரிப்பாளர்களும் இலங்கையில் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வற்புறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தமிழ் படங்களை திரையிட அனுப்ப மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின், சசிகுமார் ஆகியோர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். 


உலகம் முழுவதும் இலங்கை தமிழர்கள்தான் தமிழ் படங்களை பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை உலகமே கண்டித்து வருகிறது. அந்த நாட்டுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழ் படங்களையும் அனுப்புவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

ப்ரோஸ்டிரேட் கேன்சருக்கு வயது 2250-எகிப்து மம்மி மூலம்!


2,250 ஆண்டுகளுக்கு முன்பே ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2250 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து மம்மியாக பாதுகாக்கப்பட்டவர் உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில் இது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் போர்ச்சுகல் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மம்மி ஒன்றின் உடலில் நடத்திய மருத்துவ சோதனையில், அந்த நபர் 2,250 ஆண்டுகளுக்கு முன் ப்ரோஸ்ட்ரேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரிய வந்தது. இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் எம்-1 என்ற மம்மி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மம்மி குறித்த தகவல்களை பெற டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் முடிவில் அந்த நபர் ப்ரோஸ்ட்ரேட் புற்றுநோய் தாக்கி இறந்தததாக தெரிய வந்தது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,கண்டெடுக்கப்படட மம்மியின் கைகள் மடக்கிய நிலையில் புதைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இறந்தவர் ராஜ பாரம்பரையை சேர்ந்தவர் என்று தெரிகிறது. கி.மு.305 முதல் 30 வரை எகிப்தில் தாலமி மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ராஜ பாரம்பரையைச் சேர்ந்த ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த நபர் கி.மு.285 முதல் கி.மு.230 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம். மம்மியின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கவில்லை. எம்-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மம்மி 5.5 அடி உயரம் உள்ளது.


மம்மியின் உடலில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் முடிவில், மம்மியாக பாதுகாக்கப்பட்ட அந்த நபர் ப்ரோஸ்ட்ரேட் புற்றுநோய் தாக்கி இறந்தது தெரிய வந்தது. எம்-1 நபர் இறப்பதற்கு முன் அவரது இடுப்பு மற்றும் தண்டுவர இணைப்பு பகுதியில் 0.03 மற்றும் 0.59 இன்ச் அளவில் புற்றுநோய் கட்டிகள் இருந்துள்ளது. ப்ரோஸ்டேட் சுரப்பிகளில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியால் தான் அவர் உயிரிழந்துள்ளார். இந்த நபர் இறக்கும் போது 51 முதல் 60 வயது இருந்திருக்கலாம் என்று கருதுகிறோம் என்றனர். ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் 2,700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மன்னர் ஒருவரின் எலும்புக் கூடு கடந்த 2007ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. அவரும் புற்றுநோய் தாக்கி இறந்ததாக மருத்துவ சோதனைகளில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயகாந்தனுக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த விருது ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட்ஷிப்!


எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜெயகாந்தனுக்கு இந்த விருது வழங்குவது குறித்து ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதர் நிகோலாய் ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினார்.இது குறித்து அவர் கூறுகையில், "ரஷ்யாவின் உண்மையான நண்பர் ஜெயகாந்தனுக்கு விருது வழங்குவதில் பெருமையாக உள்ளது. இந்திய - ரஷ்ய உறவு வலுவாக அமைய ஜெயகாந்தன் ஆற்றிய பங்கு அபாரமானது. ரஷ்ய எழுத்தாளர் புஷ்கினின் எழுத்துக்களை தமிழில் அவர் மொழிபெயர்த்துள்ளார். அதேபோல, அவரது இலக்கியப்படைப்புகள் ரஷ்ய மொழியிலும் உக்ரேனிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தனது பணியினை சிறப்பாக ஆற்ற ஜெயகாந்தனுக்கு இந்த விருது ஊக்கத்தைக் கொடுக்கும்," என்றார். 

இந்த நட்புறவு விருது வழங்கும் விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவுக்கான ரஷிய தூதர், ரஷிய அதிபரின் தூதுக் குழுவினர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.இந்தோ-ரஷிய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் உள்ளார். இவர் தனது எழுத்துப் பணியோடு இந்திய, ரஷிய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட உன்னைப் போல் ஒருவன் (1965) திரைப்படம் ரஷிய அதிபர் விருதைப் பெற்றது.இந்தோ-ரஷிய கலாசார மற்றும் நட்புறவு மையத்தை அவர் 2006-ல் தொடங்கினார். தொடர்ந்து ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணி வருகிறார்.


மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு டாக்டரே மறைமுக காரணம்


மைக்கேல் ஜாக்சன் தூங்குவதற்கு வசதியாக அவரது டாக்டர் கான்ராட் முர்ரே கொடுத்த சக்தி வாய்ந்த தூக்க மாத்திரைதான் ஜாக்சன் மரணத்திற்குக் காரணமாகியுள்ளது. எனவே ஜாக்சனின் மரணத்திற்கு டாக்டர் முர்ரேதான் மறைமுக காரணம் என்று கூறி அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட். தன்னையும் அறியாமல் ஜாக்சன் மரணத்திற்கு டாக்டர் முர்ரே காரணமாகியுள்ளார் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை கோர்ட் அறிவித்தபோது இறுகிப் போன முகத்துடன், அசைவில்லாமல் அமர்ந்திருந்தார் டாக்டர் முர்ரே. ஜாக்சனின் மரணத்திற்கு மறைமுக காரணமாக அமைந்துள்ளார் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் முர்ரேவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும், அவரது டாக்டர் உரிமமும் ரத்து செய்யப்படும். தீர்ப்புக்குப் பின்னர் கைவிலங்கிடப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் டாக்டர் முர்ரே. அவருக்கு ஜாமீன் தரப்படவில்லை. நவம்பர் 29ம்தேதி அவருக்கான தண்டனையை கோர்ட் அறிவிக்கும். கடந்த 2009ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் தனது 50வது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் உலகம் முழுவதும் உள்ள ஜாக்சனின் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து ஜாக்சன் எப்படி மரணமடைந்தார் என்ற சர்ச்சைகள் வெடித்தன. இதுதொடர்பாக வழக்கும் நடந்து வந்தது. அதில் டாக்டர் முர்ரே மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து கோர்ட்டுக்கு வெளியே ஏராளமான ஜாக்சன் ரசிகர்கள் கூடியிருந்தனர். தீர்ப்பைக் கேட்டதும் ஜாக்சனை வாழ்த்தியும், முர்ரேவை திட்டியும் அவர்கள் கோஷமிட்டனர். தீர்ப்பைக் கேட்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த ஜாக்சன் குடும்பத்தினர் குறிப்பாக அவரது தாயார் காத்தரின் ஜாக்சன் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறுகையில், இப்போது சற்று நிம்மதியாக உணர்கிறேன் என்றார். ஜாக்சனின் சகோதரி லா டோயா கூறுகையில், இங்கு நடப்பதையெல்லாம் ஜாக்சன் பார்த்துக் கொண்டிருக்கிறார். தீர்ப்பு எனக்குத் திருப்தி அளிக்கிறது என்றார். இதற்கிடையே, முர்ரேவின்வழக்கறிஞர் எட் செர்னாப் அதிருப்தி தெரிவித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அவங்க மட்டும் சட்டசபைக்குப் போனாங்களா?- விஜயகாந்த்!


 நான் சட்டசபைக்கு வரவில்லை என்று கேட்கிறார்களே, அவர்கள் மட்டும் அன்றைக்கு சட்டசபைக்குப் போனார்களா. எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவருமான விஜயகாந்த்.சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பக்ரீத்தையொட்டி குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில் கலந்து கொண்டார் விஜயகாந்த். பின்னர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், புதிய ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதனால் தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. தொகுதிப் பக்கம் போக முடியவில்லை. கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் கூட்டணி அமைத்தேன். விஜயகாந்த் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். கடந்த ஆட்சியில் ஜெயலலிதா பேரவைக்கு வந்தாரா, இப்போது கருணாநிதிதான் பேரவைக்கு வருகிறாரா? பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. இது எங்கள் கையில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கூறுகிறார். இதை கூறுவதற்கு மத்திய அரசு தேவையா? தமிழகத்தில் இருந்து எவ்வளவு அன்னிய செலாவணி மத்திய அரசுக்கு கிடைக்கிறது. அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்வை நாங்கள் கட்டுப்படுத்திக் கொள்கிறோம்.

இப்போது பெய்து வரும் மழைக்கு, தமிழகமே வெள்ளக்காடாகி உள்ளது. வெள்ளம் பாதித்தப் பகுதியை பார்வையிடுவதாக அமைச்சர்களும், மேயர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்களே தவிர, வெள்ளம் வடிய எதுவும் செய்வது இல்லை. சென்னை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை அகற்ற யாரும் எந்த முயற்சியும் செய்வது இல்லை. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாகிவிட்டது என்று சும்மா இருந்துவிடுகிறார்கள். ஆனால் வேலை நடக்கிறதா என்று கண்காணிப்பது இல்லை என்றார் விஜயகாந்த்.

விஜயகாந்த் பேசுவதைப் பார்த்தால் இனிமேல் சட்டசபைக்கு அதிகமாக போக மாட்டாரோ என்று கருதப்படுகிறது. வழக்கமாக ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது கருணாநிதி சட்டசபைக்கு வர மாட்டார். அதேபோல கருணாநிதி முதல்வராக இருந்தால் ஜெயலலிதா போக மாட்டார். இப்போது இதே ஸ்டைலை விஜயகாந்த்தும் பாலோ பண்ணப் போகிறாரோ என்ற கருத்து எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியி்ட்ட விஜயகாந்த், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக கழற்றி விட்டு விட்டதால் தனித்துப் போட்டியிட்டார். கூட்டணி சேர்ந்து போட்டியி்ட்டபோது 2வது இடத்தைப் பிடித்த அவர் தனியாகப் போட்டியிட்டபோது வழக்கம் போல 3வது இடத்திற்குப் போய் விட்டார். மேலும் தொடர்ந்து அதிமுகவை சாடிப் பேசி வருகிறார். எனவே வரும் நாட்களில் அவர் அதிகமாக சட்டசபைக்கு வர மாட்டார் என்று கருதப்படுகிறது.

டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன்!


கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் உலகில் சாதனைகளில் அதிக இடத்தை பிடித்து கொண்டு மற்ற வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். அதிக சதம், அதிக அரைசதம், அதிக போட்டிகளில் பங்கேற்பு, அதிக ரன்கள் என்று கிரிக்கெட் போட்டியில் உள்ள எல்லா தளத்திலும் தனது முத்திரையை சச்சின் படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 49 சதங்களும், ஒருநாள் அரங்கில் 51 சதங்களும் அடித்துள்ளார் சச்சின். கடந்த மார்ச் மாதம் நடந்த உலகப் போட்டியில் தனது 99வது சதத்தை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அடித்த சச்சின், அடுத்தடுத்த நடந்த போட்டிகளில் 100வது சதத்தை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சதமடிக்க தவறிய சச்சின், பின்னர் காயமடைந்து பல போட்டிகளில் பங்கேற்கவில்லை.

தற்போது இந்தியா வந்துள்ள மேற்குஇந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் சச்சின் தனது 100வது சதத்தை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 7 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். இருப்பினும் இன்னொரு புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.இன்று நடந்த 3வது நாள் ஆட்டத்தின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரமாவது ரன்னை எடுத்தார்.

தேவேந்தர பிஷூ வீசிய பந்தில் 28வது ரன்னை எடுத்து 15,000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார் சச்சின். தற்போது 15000 ரன்களைக் கடந்து சாதனை நடை போட்டு வருகிறார்.சச்சின் இந்த புதிய மைல்கல்லை எட்டியதும் உடன் ஆடி வந்த டிராவிட் சச்சினை நெருங்கி வாழ்த்தினார். அதேபோல மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்களும் வாழ்த்தினர். ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் சச்சினை வாழ்த்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து முதலிடம்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் தொடர்ந்து சச்சினே முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். அவர் 12,775 ரன்களைக் குவித்து வைத்துள்ளார். 3வது இடத்தில், 12,487 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் இருக்கிறார்.

ஒரு கேரளா சங்கமத்தில்...!


பார்த்ததில் பிடித்தது !


சிறுபான்மையினருக்கு இலவச திரைப்பட தொழில்நுட்ப பயிற்சி!


தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (என்.எப்.டி.சி.) சார்பில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திரைப்படத் துறை தொடர்பாக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து என்.எப்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்களுக்கு திரைப்படத் துறையில், டிஜிட்டல் முறை திரைப்பட எடிட்டிங், வீடியோ காமிராவில் திரைப்படம் எடுத்தல், மல்டிமீடியா, போட்டோஷாப், இல்லஸ்டிரேட்டர், கோரல்டிரா, ஆடியோ, அனிமேஷன் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாத காலம் கூடிய இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, பாரசீக வகுப்புகளில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மிகாமலும் 35 வயதுக்குள் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு முடிந்து வகுப்புகள் துவங்க உள்ளன.

கற்பூரம் கொளுத்துவது ஏன்?


பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது. அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற முடிகிறது.கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. அதுபோல மனிதன் இறந்த பிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது. மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.

ஐஐஎம்-கே மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு!


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய நிறுவனங்களில் கோடைக்கால பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.சிட்டி பேங்க், குளிர்பான நிறுவனங்கள், எம்.என்.சி.க்கள், ஐ.பி.எல். டீம்களில் இருந்தும், ஐ.ஐ.எம்.-கேவில் பிஜிபி படிக்கும் மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 343 மாணவர்கள் பெரிய பெரிய நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஐஐஎம்-மில் வழங்கப்படும் இரண்டு ஆண்டு கால முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 8 வார கால இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டும். இம்முறைதான் அனைத்து மாணவர்களும் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை மேற்கொள்கின்றனர் என்று ஐஐஎம்-கேவின் பேராசிரியரும், பணியமர்த்தல் துறை நிர்வாகியுமான ஸ்ரீதர் தெரிவித்தார்.இதுவரை 15 குழுக்களாக மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெற்றுள்ளளனர். 35 புதிய நிறுவனங்களுடன் சேர்ந்து 100 கம்பெனிகளில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும் என்றார் அவர்.ஐஐஎம் கோழிக்கோடு மாணவர்களின் கல்வித் திறன், செயல்பாடு, அவர்களது பயிற்சி அனுபவம் ஆகியவற்றால் மாணவர்களை தேர்வு செய்ய வந்திருந்த நிர்வாகிகள் மிகவும் கவரப்பட்டனர்.இந்தியாவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸி பேங்க், காக்னிசென்ட் போன்ற பெரிய நிறுவனங்களிலும், ஹாங்காங், லண்டன், துபாயைச் சேர்ந்த நிறுவனங்களிலும் மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெற்றுள்ளனர் என்று ஸ்ரீதர் தெரிவித்தார்.

தூதரக சேவையை விரிவுபடுத்துகிறது அமெரிக்கா!


அமெரிக்க விசாக்களுக்கான தேவை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருதையடுத்து, அமெரிக்கா தனது துணைதூதரக சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த விசா சேவைகளுக்கான நிர்வாக இயக்குனர் எட் ரமோடோவ்ஸ்கி கூறியதாவது, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்து அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்‌கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில், 7.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் புதிதாக விசாவிற்கு விண்ணப்பித்திருந்தனர். இது, 2010ம் ஆண்டை கணக்கிடும்போது, 17 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் பிரேசிலில், அமெரிக்க விசாக்களின் தேவை அதிகரித்துள்ளதன் காரணத்தினால், நன்கு பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அங்கு அனுப்ப உள்‌ளோம். சீனா மற்றும் பிரேசில் நாடுகளி்ல், அமெரிக்க ‌விசாக்களின் தேவை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டில் மட்டும், அமெரிக்கா சீனாவிற்கு 35 சதவீதமும், பிரேசிலிற்கு 44 சதவீத விசாக்களும் வழங்கியுள்ளது. அமெரிக்காவி்ல் மீண்டும் திரும்பியுள்ள பொருளாதாரம் மற்றும் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புகளே, அனைவரும் யுஎஸ் விசாவை விரும்புவதற்கு காரணம். 2013ம் ஆண்டிற்குள், 2.2 மில்லியன் விசாக்கள் சீனாவிற்கும், 1.8 மில்லியன் விசாக்கள் பிரேசிலிற்கும் வழங்க ‌அமெரிக்கா திட்டமிட்டுள்ள‌‌தாக அவர் தெரிவி்ததார். சீன தலைநகர் பீஜி்ங்கில் அமெரிக்க தூதரகமும், ஷாங்காய், குவாங்சூ, செங்யாங் மற்றும் செங்டு நகரங்களில் துணை தூதரங்கள் இயங்கி வருவதாக சீனாவில் உள்ள அமெரிக்க தூதரக்ததின் குடியேற்றத்துறை அமைச்சர் சக் பென்னட் தெரிவித்தார்.

பிரபாகரன் -25 குறிப்புகள்...!


மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

ஐ.நா., சபையில் பேசிய முதல் தமிழ்ப் பெண் ஜெயா பார்த்திபன்!

திருச்சி மாவட்டம், சித்தாம்பூர் கிராமம் தான் என் பூர்வீகம். பஞ்சம் பிழைக்க மலேசியா சென்ற என் அம்மா, ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த குழந்தைவேலுவை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவிட்டார்.என்னுடன் சேர்த்து, என் பெற்றோருக்கு ஏழு பெண்கள். பள்ளிப்படிப்பை முடித்து, மலாக்கா வானொலி நிலையத்தில், கே.ஜெயா என்ற பெயரில் அறிவிப்பாளராக இருந்தேன். அங்கு பணியில் இருந்த போது, உடன் பணிபுரிந்தவரை மணந்தேன்.மலேசிய தோட்டப்புறக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயா, கொட்டகைகளின் அவல நிலைப் பற்றி அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பித்தேன். அதனால், குழந்தைப் பராமரிப்பு மையத் துணைச் சட்டத் திருத்தம் வந்தது.பின், "சலங்கை' என்ற பெயரில், மகளிர் இதழைத் தொடங்கினேன். "ஐடென்டிட்டி' என்ற மலாய் மாத இதழின் ஆசிரியர் ஆனேன். மலாய்ப் பத்திரிகை உலகில், தமிழ்ப் பின்னணியுள்ள ஒரே பெண் பத்திரிகை ஆசிரியர் நான் மட்டுமே. இதில் இருந்து ஆற்றிய பணிகள், விவரிக்க முடியாத மன நிறைவைத் தருகின்றன.கடந்த, 1971ல் மலேசிய இந்திய காங்கிரசில் சாதாரண உறுப்பினர் ஆனேன். பின், கட்சியின் செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் தலைவி, கூட்டரசுப் பிரதேச மாநில மகளிர் செயலர் என, படிப்படியாக முன்னேறி, 1999ல் பார்லிமென்ட் மேலவை உறுப்பினர் ஆனேன்.தையல் பயிற்சி, அழகுப் பொருட்கள் விற்பனை, தனித்து வாழும் தாய்மார்களுக்குப் பயிற்சி என, பல திட்டங்களைக் கொண்டு வந்தேன்.இதைத் தொடர்ந்து, ஐ.நா., சபையில் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அனைத்துலகப் பிரச்னைகள் மீதான விவாதங்கள், ஆலோசனைகளைக் கேட்ட நான், மலேசியாவின் சமூகப் பொருளாதார மேம்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தேன்; இது எதிர்பாரா வாய்ப்பு.எங்கள் பிரதமருக்கு அடுத்து, ஐ.நா., சபையில் பேசியவள் நான் மட்டுமே!

இதே நாள்...


  • இந்திய அரசியல்வாதி எல்.கே.அத்வானி பிறந்த தினம்(1927)
  •  வில்ஹெம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்(1895)
  •  மொன்டானா, அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
  •  பிரிட்டன் இந்திய பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது(1965)

ஒபாமா மீண்டும் அதிபராவதை அமெரிக்கர்கள் விரும்பவில்லை!


 ஒபாமா மீண்டும் அதிபராவதை பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விரும்பவில்லை என அங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமாவே களமிறங்குகிறார். இதற்கான பிரசாரத்தையும் அவர் துவக்கி விட்டார். இந்நிலையில், கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்/டி.ஐ.பி.பி., என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராவதை, 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வேலையிழப்பு மற்றும் பொருளாதார பிரச்னைகளை ஒபாமா சரிவர கையாளவில்லை என்பது பெரும்பாலோனோரின் கருத்தாக உள்ளது. எனினும் 40 சதவீதம் பேர் ஒபாமா மீண்டும் அதிபராவதை வரவேற்றுள்ளனர். இக்கருத்து கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா வாழ் இந்தியரான ராகவன் மயூர், இத்தேர்தலில் நடுநிலையாளர்களின் ஓட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார். அவர்களது ஆதரவு குறைவாக இருக்கும் பட்சத்தில் வெற்றி பெறுவது சந்தேகமே என்றும் மயூர் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் தற்போது தான் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வும் ஒபாமா அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதில் ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...