நான் சட்டசபைக்கு வரவில்லை என்று கேட்கிறார்களே, அவர்கள் மட்டும் அன்றைக்கு சட்டசபைக்குப் போனார்களா. எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவருமான விஜயகாந்த்.சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பக்ரீத்தையொட்டி குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில் கலந்து கொண்டார் விஜயகாந்த். பின்னர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், புதிய ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதனால் தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. தொகுதிப் பக்கம் போக முடியவில்லை. கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் கூட்டணி அமைத்தேன். விஜயகாந்த் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். கடந்த ஆட்சியில் ஜெயலலிதா பேரவைக்கு வந்தாரா, இப்போது கருணாநிதிதான் பேரவைக்கு வருகிறாரா? பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. இது எங்கள் கையில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கூறுகிறார். இதை கூறுவதற்கு மத்திய அரசு தேவையா? தமிழகத்தில் இருந்து எவ்வளவு அன்னிய செலாவணி மத்திய அரசுக்கு கிடைக்கிறது. அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்வை நாங்கள் கட்டுப்படுத்திக் கொள்கிறோம்.
இப்போது பெய்து வரும் மழைக்கு, தமிழகமே வெள்ளக்காடாகி உள்ளது. வெள்ளம் பாதித்தப் பகுதியை பார்வையிடுவதாக அமைச்சர்களும், மேயர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்களே தவிர, வெள்ளம் வடிய எதுவும் செய்வது இல்லை. சென்னை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை அகற்ற யாரும் எந்த முயற்சியும் செய்வது இல்லை. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாகிவிட்டது என்று சும்மா இருந்துவிடுகிறார்கள். ஆனால் வேலை நடக்கிறதா என்று கண்காணிப்பது இல்லை என்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த் பேசுவதைப் பார்த்தால் இனிமேல் சட்டசபைக்கு அதிகமாக போக மாட்டாரோ என்று கருதப்படுகிறது. வழக்கமாக ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது கருணாநிதி சட்டசபைக்கு வர மாட்டார். அதேபோல கருணாநிதி முதல்வராக இருந்தால் ஜெயலலிதா போக மாட்டார். இப்போது இதே ஸ்டைலை விஜயகாந்த்தும் பாலோ பண்ணப் போகிறாரோ என்ற கருத்து எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியி்ட்ட விஜயகாந்த், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக கழற்றி விட்டு விட்டதால் தனித்துப் போட்டியிட்டார். கூட்டணி சேர்ந்து போட்டியி்ட்டபோது 2வது இடத்தைப் பிடித்த அவர் தனியாகப் போட்டியிட்டபோது வழக்கம் போல 3வது இடத்திற்குப் போய் விட்டார். மேலும் தொடர்ந்து அதிமுகவை சாடிப் பேசி வருகிறார். எனவே வரும் நாட்களில் அவர் அதிகமாக சட்டசபைக்கு வர மாட்டார் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment