ஒபாமா மீண்டும் அதிபராவதை பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விரும்பவில்லை என அங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமாவே களமிறங்குகிறார். இதற்கான பிரசாரத்தையும் அவர் துவக்கி விட்டார். இந்நிலையில், கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்/டி.ஐ.பி.பி., என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராவதை, 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வேலையிழப்பு மற்றும் பொருளாதார பிரச்னைகளை ஒபாமா சரிவர கையாளவில்லை என்பது பெரும்பாலோனோரின் கருத்தாக உள்ளது. எனினும் 40 சதவீதம் பேர் ஒபாமா மீண்டும் அதிபராவதை வரவேற்றுள்ளனர். இக்கருத்து கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா வாழ் இந்தியரான ராகவன் மயூர், இத்தேர்தலில் நடுநிலையாளர்களின் ஓட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார். அவர்களது ஆதரவு குறைவாக இருக்கும் பட்சத்தில் வெற்றி பெறுவது சந்தேகமே என்றும் மயூர் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் தற்போது தான் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வும் ஒபாமா அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதில் ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment