மைக்கேல் ஜாக்சன் தூங்குவதற்கு வசதியாக அவரது டாக்டர் கான்ராட் முர்ரே கொடுத்த சக்தி வாய்ந்த தூக்க மாத்திரைதான் ஜாக்சன் மரணத்திற்குக் காரணமாகியுள்ளது. எனவே ஜாக்சனின் மரணத்திற்கு டாக்டர் முர்ரேதான் மறைமுக காரணம் என்று கூறி அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட். தன்னையும் அறியாமல் ஜாக்சன் மரணத்திற்கு டாக்டர் முர்ரே காரணமாகியுள்ளார் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை கோர்ட் அறிவித்தபோது இறுகிப் போன முகத்துடன், அசைவில்லாமல் அமர்ந்திருந்தார் டாக்டர் முர்ரே. ஜாக்சனின் மரணத்திற்கு மறைமுக காரணமாக அமைந்துள்ளார் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் முர்ரேவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும், அவரது டாக்டர் உரிமமும் ரத்து செய்யப்படும். தீர்ப்புக்குப் பின்னர் கைவிலங்கிடப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் டாக்டர் முர்ரே. அவருக்கு ஜாமீன் தரப்படவில்லை. நவம்பர் 29ம்தேதி அவருக்கான தண்டனையை கோர்ட் அறிவிக்கும். கடந்த 2009ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் தனது 50வது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் உலகம் முழுவதும் உள்ள ஜாக்சனின் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து ஜாக்சன் எப்படி மரணமடைந்தார் என்ற சர்ச்சைகள் வெடித்தன. இதுதொடர்பாக வழக்கும் நடந்து வந்தது. அதில் டாக்டர் முர்ரே மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து கோர்ட்டுக்கு வெளியே ஏராளமான ஜாக்சன் ரசிகர்கள் கூடியிருந்தனர். தீர்ப்பைக் கேட்டதும் ஜாக்சனை வாழ்த்தியும், முர்ரேவை திட்டியும் அவர்கள் கோஷமிட்டனர். தீர்ப்பைக் கேட்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த ஜாக்சன் குடும்பத்தினர் குறிப்பாக அவரது தாயார் காத்தரின் ஜாக்சன் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறுகையில், இப்போது சற்று நிம்மதியாக உணர்கிறேன் என்றார். ஜாக்சனின் சகோதரி லா டோயா கூறுகையில், இங்கு நடப்பதையெல்லாம் ஜாக்சன் பார்த்துக் கொண்டிருக்கிறார். தீர்ப்பு எனக்குத் திருப்தி அளிக்கிறது என்றார். இதற்கிடையே, முர்ரேவின்வழக்கறிஞர் எட் செர்னாப் அதிருப்தி தெரிவித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment