ஆடி, ஓடி முடிந்து அமைதியாக வாழ்க்கையை வாழ வேண்டிய நேரத்தில் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் பிள்ளைகள் பெற்றவர்களை கஷ்டப்படுத்துகின்றனர். வ.தான காலத்தில் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து இருக்கத் தான் ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போதுள்ள தலைமுறை அவர்களை பிரித்து வைத்துவிடுகிறது. அம்மா தலைமகன் வீட்டில் ஒரு மாதம் இருந்தால், அப்பா இளையவன் வீட்டில் இருப்பார். அடுத்த மாதம் இருவரும் இடமாறிவிடுகிறார்கள். அதிலும் அம்மாவுக்கு தான் அதிக மவுசு. காரணம் அம்மா வீட்டு வேலகளைப் பார்த்து கொள்வாரல்லவா. கடைசி காலத்தில் தந்தைகளின் பாடு தான் கஷ்டமாகிவிடுகிறது. இருவரையும் ஒரே வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள பிள்ளைகள் சம்மதிப்பதில்லை. வயதான காலத்தில் பழைய அனுபவங்கள் பற்றி பேசி மகிழ்வது தான் அவர்களுக்கு இன்பம். அந்த இன்பத்தைக் கூட பிள்ளைகள் பெற்றோருக்கு கொடுக்க மறுக்கின்றனர். ஒன்று தந்தையையும், தாயையும் பிரித்துவிடுகின்றனர். இல்லை என்றால் எங்களால் உங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று முகத்தில் அடித்தது போல் கூறி அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றனர்.
பெற்ற பிள்ளை டாக்டராக, வழக்கறிஞராக, 1000 பேருக்கு வேலை தருபவராக இருக்கையில் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்க வேண்டிய அவல நிலை. அதை நினைத்து நினைத்து அவர்கள் தினமும் கண்ணீர் வடிக்கின்றனர். எம்புள்ளைய எப்படியெல்லாம் ஆசை, ஆசையா வளர்த்தேன் இப்படி என்னை கடைசிக் காலத்தில் வீட்டை விட்டு விரட்டினானே என்று நொந்தே சாகின்றனர். வந்தவரை வாழவைக்கும் தமிழகம் என்று பெருமையாக சொல்கிறோம். ஆனால் அதே தமிழகத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வரும் அவல நிலையை எங்கே போய் சொல்வது. வந்தவர்களை வாழவைத்துவிட்டுவிட்டு பெத்தவங்கள வெளியே தள்ளுவது தான் நம் பண்பாடா? தனக்கும் வயதாகும் என்பதை பிள்ளைகள் என்று தான் உணர்வார்களோ?
No comments:
Post a Comment