கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் உலகில் சாதனைகளில் அதிக இடத்தை பிடித்து கொண்டு மற்ற வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். அதிக சதம், அதிக அரைசதம், அதிக போட்டிகளில் பங்கேற்பு, அதிக ரன்கள் என்று கிரிக்கெட் போட்டியில் உள்ள எல்லா தளத்திலும் தனது முத்திரையை சச்சின் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 49 சதங்களும், ஒருநாள் அரங்கில் 51 சதங்களும் அடித்துள்ளார் சச்சின். கடந்த மார்ச் மாதம் நடந்த உலகப் போட்டியில் தனது 99வது சதத்தை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அடித்த சச்சின், அடுத்தடுத்த நடந்த போட்டிகளில் 100வது சதத்தை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சதமடிக்க தவறிய சச்சின், பின்னர் காயமடைந்து பல போட்டிகளில் பங்கேற்கவில்லை.
தற்போது இந்தியா வந்துள்ள மேற்குஇந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் சச்சின் தனது 100வது சதத்தை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 7 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். இருப்பினும் இன்னொரு புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.இன்று நடந்த 3வது நாள் ஆட்டத்தின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரமாவது ரன்னை எடுத்தார்.
தேவேந்தர பிஷூ வீசிய பந்தில் 28வது ரன்னை எடுத்து 15,000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார் சச்சின். தற்போது 15000 ரன்களைக் கடந்து சாதனை நடை போட்டு வருகிறார்.சச்சின் இந்த புதிய மைல்கல்லை எட்டியதும் உடன் ஆடி வந்த டிராவிட் சச்சினை நெருங்கி வாழ்த்தினார். அதேபோல மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்களும் வாழ்த்தினர். ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் சச்சினை வாழ்த்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து முதலிடம்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் தொடர்ந்து சச்சினே முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். அவர் 12,775 ரன்களைக் குவித்து வைத்துள்ளார். 3வது இடத்தில், 12,487 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் இருக்கிறார்.
No comments:
Post a Comment