|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 February, 2017

அண்ணா முதல் ஓ.பன்னீர்செல்வம் வரை


தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இடையே  ஏற்பட்டுள்ள பிரச்னை போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் திராவிட இயக்கத்தில் பிளவுகளும், பிரிதல்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.  நீதிக்கட்சியில் பெரியார் இணைந்த பிறகு தீவிர முற்போக்கு இயக்கமாக அதை முன்னெடுத்தார். அதனால் அதில் முன்னோடியாக இயங்கிய ஜமீன்தார்களும், பணக்காரர்களும் அதை இடையூறாகக் கருதி வெளியேறினர். ஆனால் அது பெரிய பிளவாகவோ அந்த இயக்கத்துக்குத் தொய்வாகவோ இருக்கவில்லை. அதேசமயம் அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறிய பின்னர் அதில் உருவான சில பிரிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை.

பெரியார் - அண்ணா
தந்தைப் பெரியாருடன் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் அண்ணாவுக்கு இருந்தது. 1948-ல் முதல் இந்திய சுதந்திர தின விழாவினை ‛கறுப்பு நாள்’ எனப் பெரியார் தன் கட்டுரையில் குறிப்பிட, அதே இதழில் 'இன்ப நாள் - இனிய நாள்' என அண்ணா கட்டுரை எழுதினார். அதன் பின்னர் தமக்கு உதவியாக இருந்த மணியம்மைக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்க அவரைத் திருமணம் செய்தார் பெரியார். இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து தனியாக இயக்கம் காண முடிவு செய்தனர். அதன்படி 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்டது.
அண்ணா- சம்பத்
திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவுடன் வெளியேறிய பெரியாரின் அண்ணன் மகன் ஈ.வி.கே.சம்பத், திமுக சார்பில் 1957-ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 1961-ம் ஆண்டு 'திராவிட நாடு' என்கிற திமுகவின் தனிநாடு கோரிக்கையில், அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பத் வெளியேறினார். பின்னர் அவர் சிவாஜி கணேசன், கண்ணதாசன், பழ.நெடுமாறன் ஆகியோரை இணைத்து 'தமிழ்த் தேசியக் கட்சி ' என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.  1962-ல் அது சந்தித்த முதல் தேர்தலில் படு தோல்வி அடைந்தது.  அதன் பின்னர் அந்தக் கட்சியை காங்கிரசுடன் இணைத்துக்கொண்டார் சம்பத். 

கருணாநிதி - எம்ஜிஆர்
இந்தப் பிரிவுதான் மிகப்பெரியதும் இன்று வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்து வருகிறது. 1967-ல் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடிக்கிறது. அதன் பின்னர் இரண்டாண்டுகளில் அண்ணா மறைகிறார். அதற்கு அடுத்த நாளே, யார் பொதுச்செயலாளர், யார் முதல்வர் என்கிற பிரச்னைகள் ஒருசேர எழுகிறது.  இதில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் இடையே பிரச்னை எழுகிறது. பெரியார் தலையிட்டு சமரசம் செய்தும் நெடுஞ்செழியன் ஒப்புக்கொள்ளவில்லை.  

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் கருணாநிதிக்கு இருந்தது.  அவர் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நெடுஞ்செழியனுக்கு அண்ணா வகித்த பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது; கருணாநிதி தலைவரானர்.  வெகுவிரைவில் கட்சியின் அதிகாரங்கள் முழுக்க தலைவருக்கு இருக்குமாறு பொதுக்குழுவினை கூட்டி முடிவெடுக்கப்பட்டு நெடுஞ்செழியன் டம்மியாக்கப்பட்டார்.  
1971-ல் அரசைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தலை கருணாநிதி சந்திக்கிறார். அவருக்கு அவரது நண்பரும் நடிகருமான எம்ஜிஆர் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். எம்ஜிஆர் திமுகவின் பொருளாளராகவும் இருந்தார். மிகப்பெரிய வெற்றியை அந்தந் தேர்தலில் திமுக பெறுகிறது.  அடுத்த ஆண்டு திமுகவின் கணக்குகளை பொது மேடையில் கேட்டதற்காக எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அந்த நடவடிக்கையை மக்கள் ரசிக்கவில்லை என்பதை அவருக்குக்  கிடைத்த  ஆதரவு காட்டியது. 75-ம் ஆண்டு மிசா சட்டத்தின் அடிப்படையில் திமுக கலைக்கப்பட்ட பின் அடுத்த 14 ஆண்டுகளுக்கு கருணாநிதியால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. 72-ம் ஆண்டே அதிமுக என்கிற கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் 77-ல் ஆட்சியைப் பிடித்து 87-ம் ஆண்டு சாகும் வரை ஆட்சி செய்தார். 
ஜானகி - ஜெயலலிதா
எம்ஜிஆர் காலமான உடன் நாவலர் நெடுஞ்செழியன் காபந்து முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கட்சி உறுப்பினர்கள் இணைந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகியை முதல்வராகத் தேர்வு செய்தனர். ஆனால் அடுத்த 28 நாட்களிலேயே சட்டமன்றத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஒருவருக்கொருவர் அடித்து மண்டையை உடைத்துக் கொண்டனர். கட்சி ஜானகி அணி  - ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது. எம்ஜிஆரை பதவிக்காக மோரில் விஷம் வைத்து ஜானகி கொன்று விட்டார் என ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அரசியல் குளறுபடியை காரணம் காட்டி அன்றைய அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதிமுகவின் பிரபல சின்னமான 'இரட்டை இலை'க்கு இரண்டு தரப்பும் உரிமை கோரியதால் அந்த சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஜானகி அணி படு தோல்வி அடைந்தது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக செயல்படத் தொடங்கியது.
கருணாநிதி - வைகோ
'திமுகவில் செங்குத்தான பிளவு' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'தீக்கதிர்' ஏடு எழுதியது. அது எம்ஜிஆர் பிரிந்தபோது கூட இப்படிக் குறிப்பிடவில்லை. வை.கோபால்சாமி என்கிற வைகோ அக்டோபர் மாதம் 23-ம் தேதி நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் 5 பேர் தீக்குளித்து இறந்தனர். அந்தளவுக்கு பெரும் தாக்கத்தை அந்தக் கட்சியில் இந்த நீக்கம் ஏற்படுத்தியது. வைகோவின் பின்னாலும் மிகப்பெரிய இளைஞர் கூட்டம் கூடியது. அவரது பிரிவுக்கு பின்னர் உடனடியாக வந்த மயிலாப்பூர்,பெருந்துறை ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களில் அவரின் கட்சி போட்டியிட்டது. இதில் பெருந்துறையில் இரண்டாம் இடத்துக்கு வைகோவின் கட்சி வந்து ஆச்சரியமளித்தது. திமுக தன் முடிவுகளால் இன்னொரு எம்ஜிஆரை உருவாக்கிவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர். ஆனால் வைகோவினால் அதைத் தக்கவைக்கும் அளவுக்கு அரசியல் சூழல் ஏற்படவில்லை. 

சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் பிரிவுக்கு வழிவகுக்குமா? அல்லது ஜெயலலிதாவைப்போல கட்சியைக் கைப்பற்றுவாரா? ஒருவேளை பிரிந்தார் என்றால் அதைப் பெரிய பிளவாகக் கருதும் அளவுக்கு இருக்குமா எனப் போகப்போகத்தான் தெரியும். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...