ஏழைத் தொழிலாளர்களுக்காக பாடுபட்ட ஓய்வறியாத் தொண்டரும், சிந்தனைச்
சிற்பியுமான சிங்காவேலருக்கும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு
அரும்பாடுபட்ட ஆற்றல்மிகு பேச்சாளராகவும், மீனவ இனத்தின் தலைவராகவும்
விளங்கிய சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினத்துக்கும் அவர்கள் நினைவைப்
போற்றி மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விதி எண் 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை: நாட்டின்
சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகளையும் சமுதாய மேம்பாட்டிற்காகப்
பாடுபட்ட தலைவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும்; அவர்களது
பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச்
சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும் ஒரு நல்லரசின் கடமையாகும்.
தமிழ் சமுதாயத்துக்கு வாழ்வளிக்க தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த
பெருமக்களுக்கு பெருமை சேர்ப்பதில் எனது அரசு மிகுந்த முன்னுரிமை கொடுத்து
செயல்படுகிறது.
சிந்தனைச் சிற்பி என்று மக்களால் போற்றப்படும்
சிங்காரவேலர் மயிலாப்பூர் மீனவர் கிராமத்தில் 18.2.1860-ல் பிறந்து, கல்வி
பல கற்று சிறந்த வழக்குரைஞராக திகழ்ந்தவர். அந்நியருக்கு எதிராக அண்ணல்
காந்தியடிகள் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியபோது தனது வழக்குரைஞர்
அங்கியைத் தீயிட்டு கொளுத்திவிட்டு தீவிரமான விடுதலைப் போராட்ட வீரராக
மாறியவர்.
கான்பூரில் நடைபெற்ற பொதுவுடைமைக் கட்சியின் முதல்
மாநாட்டிற்கு தலைமையேற்று, தன்னைப் பெற்றெடுத்த தமிழகத்துக்கும், தான்
பிறந்த மீனவ இனத்துக்கும் தனிப்பெருமை சேர்த்தவர். சிந்தனையாலும் செயலாலும்
அல்லும் பகலும் ஏழைத் தொழிலாளர் வர்க்கத்துக்கு பாடுபட்ட உழைப்பாளர்
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்.
சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம்
11.11.1911-ல் ஏழை மீனவர் குடும்பத்தில் பிறந்து, தமிழையும் ஆங்கிலத்தையும்
சிறப்பாகக் கற்று சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். திராவிட
இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜீவரத்தினம், தமிழர் நலனிலும்,
மீனவர் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு சமுதாய மாற்றத்தைக் காண கடுமையாக
உழைத்தவர். பேரறிஞர் அண்ணாவின் அன்பையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின்
நம்பிக்கையையும் பெற்றுத் திகழ்ந்தவர்.
பழமையை விடுத்து புதுமையை
ஏற்று சமுதாய மாற்றத்தைக் காண உழைத்தவர். ஏழைத் தொழிலாளர்களுக்காக பாடுபட்ட
ஓய்வறியாத் தொண்டரும், சிந்தனைச் சிற்பியுமான சிங்காவேலருக்கும் திராவிட
இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஆற்றல்மிகு பேச்சாளராகவும், மீனவ
இனத்தின் தலைவராகவும் விளங்கிய சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினத்துக்கும்
அவர்கள் நினைவைப் போற்றி மணிமண்டபங்கள் அமைக்க வேண்டுமென பல்வேறு
தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை மிகுந்த
உவகையுடன் ஏற்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் தலைவர்களான சிந்தனைச்
சிற்பி சிங்காரவேலருக்கும்; சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினத்துக்கும்
சென்னை, பட்டினப்பாக்கத்தில் மணி மண்டபங்கள் கட்ட எனது அரசு முடிவு
செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழுக்காக தியாகம் செய்த சிதம்பரநாதனுக்கு சிலைதமிழ்
மொழியின் மீது தணியாத பற்று கொண்டு, பல தலைவர்கள் தமிழ் நாட்டிற்காக
தியாகங்கள் பல செய்துள்ளனர். அதில் குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டோடு
இணைத்திட போராட்டம் நடத்திய மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் முக்கியமானவர்
ஆவார். தியாகி சிதம்பரநாதன் 5.1.1948-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
திருவிதாங்கூர்- கொச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். விதாங்கூர்- கொச்சி
அரசில் வனம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த
சிதம்பரநாதன், திருவிதாங்கூர்- கொச்சி அரசில் அமைச்சர் பொறுப்பு வகித்த ஒரே
தமிழர் ஆவார்.
அக்காலத்தில் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் மேல்
விதிக்கப்பட்டிருந்த மானிய வரியை இவர் நீக்கினார். தாய்த் தமிழகத்துடன்
தமிழ்ப்பகுதிகளை இணைப்பது ஒன்றே திருவிதாங்கூர் தமிழர்களின் சிக்கல்களுக்கு
ஒரே தீர்வு என்ற நிலையில், தன் அமைச்சர் பதவியைத் துச்சமெனத் துறந்தார்.
தாய்த்
தமிழகத்துடன் தமிழ்ப் பகுதிகளை இணைக்கக் கோரி 4.7.1954-ல் கண்டன நாளாக
அறிவிக்கப்பட்டு, பொது மக்களை சந்திக்க மூணாறு சென்றபோது, சிதம்பரநாதன்
கைது செய்யப்பட்டு 6.7.1954-ல் திருவனந்தபுரம் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானார். சிதம்பரநான் 1956 முதல் 1969 வரை
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பல தியாகங்களை செய்த
மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில்
திருவுருவச்சிலை அமைக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் தேர்தல்
வாக்குறுதி அளித்திருந்தேன்.
அந்த வாக்குறுதியினை நிறைவேற்றும்
வகையில், மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் திருவுருவச் சிலையை, கன்னியாகுமரி
மாவட்டம், களியக்காவிளையில் அமைக்க எனது அரசு முடிவு செய்துள்ளது என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் என்று அவர் கூறினார்.