அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல்
கலாம் அவர்களே,பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு
முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து
வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில்
தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.அணுவிஞ்ஞானியான நீங்கள்
இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது பெருமிதம்கொண்ட
தமிழர்களில் நானும் ஒருவன்.கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நீங்கள்
தலையிட முடிவு செய்தபோது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளையும், தமிழக
மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு நல்லதொரு முடிவுக்கு வருவீர்கள் என
நம்பினோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சென்று பார்வையிட்டு,
அதன் பிறகு அதனருகிலேயே போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்காமல்
நாளிதழில் நான்கு பக்கம் வரும் அளவுக்கு நீண்டதொரு அறிக்கையைக்
கொடுத்துள்ளீர்கள்.கூடங்குளத்தைப் பார்வையிட்ட அன்று இரவோடு இரவாக இந்த
அறிக்கையை எழுதி மறுநாள் வெளியிட்டிருக்க முடியாது. நீங்கள் கூடங்குளம்
வருவதற்கு முன்னாலே அறிக்கையை எழுதிவிட்டு அதற்குப் பின்னால் கூடங்குளம்
அணு உலையைச் சோதனை செய்ததில் ஏதாவது அர்த்தம் உண்டா?அந்த அறிக்கையில்
முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின்
நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது
மிகவும் முக்கியம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள்
குறிப்பிட்டபடி செய்தீர்களா? கூடங்குளத்திலும் சுற்றிலும் வசிக்கும்
மக்களைச் சந்திக்காமல், அவர்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் எப்படிப்
புரிந்துகொண்டீர்கள்?
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விபத்துகளால்
ஒரு சிறிதும் பாதிக்கப்படாத அளவுக்கு கூடங்குளம் அணு உலையில்
செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெருமையுடன் உறுதி
தந்திருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லும்போதுகூட கூடங்குளத்தில் மிகப்பெரிய
அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறியிருக்கிறீர்களே
தவிர, பூகம்பம் வரவே வராது என அறுதியிட்டு உறுதிதர உங்களால் இயலவில்லையே
ஏன்?இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி அணு உலை
அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் 30 கி.மீ. சுற்றளவில் 10 லட்சத்துக்கும்
அதிகமான மக்கள் வசிக்கக்கூடாது. அப்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
வசிக்கக்கூடிய இடங்களில் அணு உலையை அமைக்கக்கூடாது என்றும்
கூறப்பட்டுள்ளது. இந்த விதி உங்களுக்குத் தெரியாமல் வகுக்கப்பட்டிருக்க
முடியாது.கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17
லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசின் ஒழுங்குமுறை
ஆணைய விதிகளுக்கு எதிராகக் கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது
என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விதிமுறையை ஆணையம் வகுத்ததற்கே காரணம்
அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மக்கள் 30 கி.மீ. அப்பால்
தப்பிச் செல்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணு உலையில்
விபத்தே ஏற்படாது என்பது உண்மையானால் இந்த விதியை வகுக்க வேண்டிய அவசியம்
என்ன?
அணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட திடக்கழிவுகளைப் பாதுகாப்பது
குறித்து விரிவாகக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறாமல்விட்ட ஓர் உண்மை
என்னவென்றால் கூடங்குளம் அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு 20 ஆயிரம்
கோடி ரூபாய் செலவாகும் என்பதை அணு உலையை நிறுவுவதற்கு 17 ஆயிரம் கோடிதான்
முதலீடு, ஆனால், அதன் ஆயுள்காலம் முடிந்தபிறகு புதைப்பதற்கு 20 ஆயிரம் கோடி
செலவாகும். இந்தச் செலவுகளையெல்லாம் மொத்தமாகக் கூட்டினால் மின்சார
உற்பத்திச் செலவு அணு உலையில் மிகமிக அதிகம். அணு மின்சாரம் மலிவாகக்
கிடைக்கிறது என்கிற தங்கள் கூற்று அடிபட்டுப் போகிறது.
இந்தியா
2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் பெற வேண்டும் என்கிற இலக்கு
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சியை நாம்
எட்டினால்கூட 2030-ம் ஆண்டுக்குள் 4 லட்சம் மெகாவாட்தான் உற்பத்திசெய்ய
இயலும். ஆனாலும் இந்த 4 லட்சம் மெகாவாட்டில் 50 ஆயிரம் மெகாவாட்
மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம் மட்டுமே பெற முடியும் என்று
குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் இன்றைக்கு நம் நாட்டில் அணுசக்தியின்
மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. எனவே, மீதமுள்ள
45 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு அணுசக்தியைத் தவிர, வேறு
வழியில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.இந்தியாவில் அணு ஆற்றல்
துறையின்கீழ் வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுக்கான அமைப்பு, நாட்டின்
ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் எனக்
கூறியுள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?
திறம்பட்ட
ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பல பெரிய
தொழில் நிறுவனங்கள், அதன் மூலம் பெருமளவு மின்சேமிப்பைச் செய்துள்ளன. கடந்த
10 ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் 2,194 மெகாவாட் அளவு
மின்சாரத்தைச் சேமித்திருக்கின்றன என்ற உண்மையைக் கூறுவதும் இந்திய அரசின்
ஆற்றல் துறைதான்.கூடங்குளம் அணுமின் நிலைய மின்சக்தித் திறனைக் காட்டிலும்
கூடுதலான மின்சக்தித் திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர் என
மின்னணுவியல் துறை பேராசிரியர் முனைவர் வே. பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையில்
குறிப்பிட்டிருக்கிறார். 2011 முதல் 2015-க்குள் 19 ஆயிரம் மெகாவாட்
மின்சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறை.இந்தியாவில்
கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்திய அணுசக்தித் துறையில் மின்
உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என்று கூறிவிட்டு அதற்கேற்ற தொழில்
நுட்பம் உலகில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில்
இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதை நாம்
பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.யுரேனியத்தைக்
காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்டது தோரியம்
என்றும் குறைந்த கதிரியக்கக் கழிவைக் கொடுக்கக்கூடியது தோரியம் என்றும் அணு
ஆயுதம் செய்ய இயலாத தோரியம் என்றும் நீங்களே உங்கள் அறிக்கையில்
குறிப்பிட்டிருக்கிறீர்கள்.அப்படியானால் யுரேனியத்தின் கதிரியக்கம் ஆபத்தை
விளைவிக்கக்கூடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவேதான்
தோரியத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வது பற்றிய ஆராய்ச்சி இன்னும்
முடியவில்லை, வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது எனக் கூறும் நீங்கள் அந்த
ஆராய்ச்சி முற்றுப் பெறும்வரை பொறுத்திருக்கக்கூடாதா? அதற்குள் அவசரப்பட்டு
ஆபத்தான கதிரியக்கத்தைப் பரப்பும் யுரேனியத்தைப் பயன்படுத்தி கூடங்குளம்
அணு உலையைச் செயல்பட வைப்பதற்கு அவசரப்படுவது ஏன்?
கூடங்குளம்
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு ரூ. 200
கோடி செலவில் "புரா' திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று
அறிவித்திருக்கிறீர்கள். அதாவது நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களில்
ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டமாகும்.1988-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின்
உலை குறித்து இந்தியாவுக்கும் சோவியத் நாட்டுக்குமிடையே உடன்பாடு
கையெழுத்தாயிற்று. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கூடங்குளம் பகுதி மக்கள்
மீது 22 ஆண்டுகாலமாக ஏற்படாத கரிசனம் மத்திய அரசுக்கு இப்போது திடீரென
ஏற்படுவானேன்?22 ஆண்டுகாலத்துக்கு மேலாக வறட்சியான அந்தப் பகுதியின்
வளர்ச்சியிலோ, ஏழ்மை நிறைந்த அந்த மக்களின் முன்னேற்றத்திலோ, இந்திய
அரசுக்குக் கொஞ்சமும் கவலை ஏற்படவில்லை. அணு உலைக்கு எதிராகப் போராடும்
கூடங்குளம் மக்களைச் சரிக்கட்டத்தானே இந்தப் "புரா' திட்டம்
அறிவிக்கப்பட்டிருக்கிறது?
அணு சக்தி என்பது இறைவன் மனித
குலத்துக்குக் கொடுத்தது. அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் மனித
குலத்தின் கையில்தான் உள்ளது. எனவே, கூடங்குளத்தின் மூலமும் இந்தியாவின்
மற்ற பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களின் மூலமும் உற்பத்தியாகும் அணு
மின்சாரம் கண்டிப்பாக நமக்குத் தேவை என உங்கள் அறிக்கையில் அழுத்தம்
திருத்தமாக வற்புறுத்தி இருக்கிறீர்கள்.ஆனால், இந்திய அரசின் அணுசக்தி
ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கைக்கா, நரோரா,
தாராபூர், கல்பாக்கம் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள அணு உலைகள்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவினாலேயோ அடிக்கடி
விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டு உள்ளது என்றும்,
கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச்சூழலில் கலந்துள்ளது
என்றும் பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்திய
அரசிடமிருந்தோ அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ உங்களிடமிருந்தோ அவருக்கு இதுவரை
எத்தகைய பதிலும் கூறப்படவில்லையே அது ஏன்?
இனி தமிழ்நாட்டின் மின்
பற்றாக்குறைப் பிரச்னைக்கு வருவோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில்
செல்லவேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும்.
இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில
ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற
இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய செய்தியாகும். கிட்டத்தட்ட 20
ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது.
இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம்
தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ
முயற்சி செய்திருக்கிறீர்கள்.
உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம்
ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத்
தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத்
துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும்
கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.கூடங்குளம் அணுமின்
நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில்50 % மட்டுமே தமிழகத்துக்கு
அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள
மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு
உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு
மட்டுமே. இது என்ன நியாயம்?
ஏற்கெனவே நெய்வேலியில் உற்பத்தியாகும்
மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு
26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின்
மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா? நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும்
தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம்
இருக்காதே.தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு
நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை
உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3,000
மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி
அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால்
மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள
மின் பற்றாக்குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு
இலவசமாகவும் பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப்படுவதும்தான்
காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தமாகவே அனல் மற்றும் காற்று
மின்உற்பத்தியைச் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு
உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும்
குறுந்தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.காவிரியில் பெருகிவரும்
வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கவும், வளம் பெருக்கவும்
கரிகாலன் கல்லணையைக் கட்டினான். ஆனால், மக்களுக்கு அபாயத்தை அளிக்கும்
கூடங்குளம் அணு உலைக்காக வாதாடும் நீங்கள் கரிகாலனையும் கல்லணையையும்
எடுத்துக்காட்டாகக் காட்டுவது சற்றும் பொருத்தமற்றதாகும். தமிழ்நாட்டு
மக்களை ஏமாற்றுவதற்காக உங்களைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். அதை நீங்கள்
ஏன் உணரவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
No comments:
Post a Comment