வாஷிங்டன் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானியை
தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்புமாறு அந்நாட்டு
பிரதமர் யூசுப் ராசா கிலானி உத்தரவிட்டதாக வெளியான செய்தியை பாகிஸ்தான்
தரப்பு மறுத்துள்ளது. திட்டமிட்டபடி தனது பயணத்தை முடித்துக் கொண்ட பின்னரே
ஹினா நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.
பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை
அமைச்சர் ஹினா ரப்பாரி கர் அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் பாகிஸ்தான்
பிரதமர் யூசுப் ராசா கிலானிதான் அமெரிக்கா செல்வதாக இருந்தது. ஆனால் தன்னை
சந்திக்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுத்து விட்டதால் அதிருப்தி அடைந்த
கிலானி, தனக்குப் பதில் ஹினாவை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹக்கானி தீவிரவாத குழுவுக்கும், பாகிஸ்தான் உளவு
அமைப்பான ஐஎஸ்ஐக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து அமெரிக்காவுக்கும்,
பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் குறித்து கருத்து
தெரிவித்த ஹினா, அமெரிக்கா தாராளமாக பாகிஸ்தானுடனான உறவை முறித்துக்
கொள்ளட்டும். அது அவர்களது இஷ்டம். ஆனால் அதனால் நஷ்டம் பாகிஸ்தானுக்கு
கிடையாது, அமெரிக்காவுக்குத்தான் என்று கடுமையாக பதிலளித்தார். அதற்கும்
மேலாக, உலக அளவில் தீவிரவாதிகளை வளர்த்து ஆளாக்குவதே அமெரிக்காதான் என்றும்
மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், அமெரிக்கா
பாகிஸ்தானின் பொறுமையை சோதித்துப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இப்படி அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தானை குறை சொல்வதைத் தொடர்ந்தால் இரு
நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படும். அமெரி்ககாவின்
இந்த குற்றச்சாட்டிற்கு அதனிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. அமெரிக்காவே
ஹக்கானி அமைப்பை உருவாக்கிவிட்டு தற்போது அந்த அமைப்புடன் தொடர்பு
இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் கூறுகிறது. அமெரி்ககாவின் சிஐஏவுக்கு
உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. ஹக்கானி அமைப்பு
சிஐஏவுக்கு பிடித்தமான ஒன்று தான். நட்பு நாடுகளும், நண்பர்களும் ஊடகங்கள்
மூலம் பேசிக்கொள்ளக்கூடாது. வெளியுறவு விவகாரங்கள் குறித்து ஊடகங்கள்
வழியாகத் தெரிவிப்பது பாகிஸ்தானின் சட்டதிலேயே இல்லை. கடும்
போராட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்திற்கு எதிரான போர்
குறித்து மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளால்
அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். எங்களால்
தீவிரவாதத்தை எதிர்த்து தனியாக போரிட முடியும். நாங்கள் அமெரி்ககாவுடன்
நல்லுறவு வைத்துக்கொள்ளவே விரும்புகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான
போரில் உலக நாடுகளை விட பாகிஸ்தான் தான் அதிகமான மக்களை இழந்துள்ளது.
அமெரிக்கா தன் விருப்பத்திற்காக எந்த நாட்டையும் அழிக்க முடியாது.
எங்களாலும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்த முடியும். ஆனால் நாங்கள் அப்படி
செய்யவில்லை. அமெரி்ககாவில் ஒரு 9/11 தாக்குதல் தான் நடந்துள்ளது. ஆனால்
பாகிஸ்தானில் அது போன்று 311 தாக்குதல்கள் நடந்துள்ளது என்றார். இந்த
பேச்சால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவே முறிந்து போகும் அளவுக்கு நிலைமை
மோசமடைந்தது. இதையடுத்து அமெரிக்க பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக
நாடு திரும்புமாறு ஹினாவுக்கு கிலானி உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின.
அவரும் நாடு திரும்பவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால் இதை பாகிஸ்தான்
அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஹினாவை நாடு திரும்புமாறு பிரதமர்
உத்தரவிடவில்லை. அவர் திட்டமிட்டபடி ஐ.நா பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை
பேசவுள்ளார். அதன் பின்னர்தான் நாடு திரும்புகிறார் என்று கூறியுள்ளனர். இந்நிலையில்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி நேற்று ராணுவ அதிகாரிகளை
அழைத்து வரிசிஸ்தானில் ஹக்கானி அமைப்புக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும்
தாக்குதல்கள் குறித்து பேசினார். இந்த கூட்டம் சுமார் 6 மணி நேரம் நடந்தது.
No comments:
Post a Comment