|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 September, 2011

கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்து வெற்றி பெறமுடியாது!


ஈ அடிச்சான் காப்பி' என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது."இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது' என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் முறையாக, வரும் மார்ச் மாதம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, பாட வாரியாக கேள்வித் தாள், "புளூ பிரின்ட்'டை, பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. பாடப் புத்தகங்களைத் தயாரித்த ஆசிரியர் குழுவே, இந்த கேள்வித் தாள்களையும் வடிவமைத்துள்ளது.சி.பி.எஸ்.இ., கேள்வித் தாள்களில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகள் அதிகம் இருக்கும். நேரடியான கேள்விகள், குறைந்த அளவே இருக்கும். அதேபோல், பத்தாம் வகுப்பு கேள்வித் தாள்களை வடிவமைத்துள்ளனர்.இந்த புதிய கேள்வித் தாள் அடிப்படையிலேயே, தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. அறிவியல், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களில், மாணவர்களின் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

"புளூ பிரின்ட்'கள், மாநிலம் முழுவதும், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து, ஆசிரியர்கள் கருத்துக் கூறவும், பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நாகராஜ முருகன், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி குப்புசாமி ஆகியோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்க, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, இந்த வாரத்திற்குள் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கையை சமர்ப்பிக்க, இரு மாவட்ட அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர். இதனடிப்படையில், தேவையான மாற்றங்களைச் செய்து, "புளூ பிரின்ட்'டை, துறை இறுதி செய்ய உள்ளது.

மாற்றங்கள் என்னென்ன?கேள்வித் தாள் அமைப்பு குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது: ஆங்கிலம்:மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, கேள்வித் தாளில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆங்கிலம் இரண்டாம் தாளில் தான் வழக்கமாக, இலக்கணப் பகுதி வரும். தற்போது, முதல் தாளிலேயே இலக்கணத்தைக் கொண்டு வந்து, அதற்கு, 25 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இரண்டாம் தாளில், ஏதாவது சில தலைப்புகளைக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி விளக்குமாறு ஐந்து மதிப்பெண் கேள்வி அமைத்துள்ளனர்.

* அதேபோல், சில வாசகங்களைக் கொடுத்து, அதை வைத்து விளம்பரங்களைத் தயாரிக்குமாறு ஒரு கேள்வி கேட்கின்றனர். இதுவும், ஐந்து மதிப்பெண் கேள்வி பகுதியில் இடம்பெற்றுள்ளது. முதல் தாளில், "ரூட் மேப்' என்றொரு புதிய பகுதி கேட்கப்படுகிறது. ஏதாவது, ஒரு இடத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு இடத்தில் இருந்து, அந்த இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.

* "பொருத்துக' என்றொரு பகுதி, வழக்கமாகக் கேட்கப்படும். இந்த முறை, இந்தப் பகுதி இல்லை. "லெட்டர் ரைட்டிங்' என்ற பகுதி வழக்கமாக இடம்பெறும். இதில், விடுநர், பெறுநர், "பாடி ஆப் தி லெட்டர்' என, ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்கள் தனித்தனியாகப் பிரித்து வழங்கப்படும். மாணவர்கள், விடுநர், பெறுநர் எழுதினாலே, இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். தற்போது, விடுநர், பெறுநர் பகுதிகள், கேள்வித் தாளிலேயே வந்துவிடுகின்றன. "பாடி ஆப் தி லெட்டரை ' மட்டும் மாணவர்கள் எழுத வேண்டும். இதுதான், மாணவர்களுக்குச் சிரமம். இதனால், மாணவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் சில மதிப்பெண்களை, புதிய முறையில் இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

* மொழிபெயர்ப்பில், ஒரு கேள்வி கேட்கப்படும். இதில், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்குமாறு தான் கேள்வி இருக்கும். இப்போது, தமிழில் இருந்து, ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
தமிழில் உள்ள கருத்துக்களை, எப்படி ஆங்கிலத்தில் எழுதப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு, "சாய்ஸ்' கொடுத்தால் நன்றாக இருக்கும். இப்படி, பல புதிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

அறிவியல் : * "அ' பகுதி, "புளூ பிரின்ட்' நன்றாக உள்ளது. மற்ற பகுதிகளில், விடை அளிக்கும் வகையிலான கேள்விகள் அதிகம் இடம்பெறவில்லை. "படங்களுக்கான பாகங்களை எழுதவும்' என்று கேள்வி கேட்கப்படும். பாகங்களை மட்டும், மாணவர்கள் எழுதுவர். தற்போது, கேள்வித் தாளில் உள்ள படத்தை, விடைத் தாளில் வரைந்து, அதன்பின் பாகங்களை எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு நேரம் வீணாகும்.

* 22வது கேள்வி, மாணவர்களின் அறிவை, மிக நுட்பமாகச் சோதிக்கும் வகையில் கேட்கப்பட்டுள்ளது. அதாவது, இதயத்தின் உள்ளமைப்பை படமாகக் கொடுத்துவிட்டு, அதில் நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழல் எங்கே இருக்கிறது, உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழல் எங்கே இருக்கிறது என்பதை, துல்லியமாகக் குறிக்க வேண்டும். இது மிகவும் சிரமம். இதனால், 2 மதிப்பெண்களை இழக்க நேரிடும்.

* 27வது கேள்வி, எது சரி, எது தவறு என குறிக்க வேண்டும். இது பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், பாடப் புத்தகத்தின் உள்பகுதியில், சில வரிகளைத் தேர்வு செய்து, அதில் இருந்து இந்த கேள்வி கேட்கப்படுகிறது. இதுபோன்ற, நுட்பமான கேள்விகள் பல, புதிதாக இடம்பெற்றுள்ளன.
* பாடப் புத்தகத்தின் முழுப் பகுதியையும் முழுமையாகப் படித்தால் மட்டுமே, அறிவியல் தேர்வை நன்றாக எழுத முடியும்.

கணிதம்: கூட்டுத் தொடர், அளவியல் ஆகிய பாடங்கள், மாணவர்களுக்கு மிகவும் சிரமமானவை. இவற்றில் இருந்து இரண்டு கட்டாயக் கேள்விகள் (கேள்வி எண் 42, 45) கேட்கப்பட்டுள்ளன. எனவே, இந்த கேள்விகளுக்கு, மாணவர்கள் அனைவரும் பதிலளிப்பார்கள் என்று கூற முடியாது. அதிகமான மாணவர்கள் விட்டுவிடக் கூடிய நிலைதான், தற்போது இருந்து வருகிறது. எனவே, கணிதப் பாடத்தில், "சென்டம்' குறைய வாய்ப்புகள் அதிகம்.

தமிழ்: * தமிழ் இரண்டாம் தாளில், ஒரு பாடலைக் கொடுத்து, இது என்ன, "பா' என்று கேட்கின்றனர். இரண்டு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டுள்ள இக்கேள்வி, மாணவர்களுக்குச் சிரமமாக இருக்கும்.எட்டு வரிகளில் கவிதை எழுதுக என்று, ஏதாவது ஒரு தலைப்பு கொடுக்கின்றனர். இதேபோன்ற கேள்வி, பிளஸ் 2விலும் வருகிறது. 500 மாணவர்களில், ஒரு மாணவர் தான், இந்த கவிதையை எழுதுகிறார். மாணவர்களில், மிகச் சிலருக்கே கவிதை எழுதும் ஆற்றல் இருக்கும்.

* சமூக அறிவியல் கேள்வித் தாள், நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு "அல்வா' :"இனிமேல், மாணவர்கள், "பிட்' அடிப்பதற்கே வழியிருக்காது' என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:வழக்கமாக, விரிவாக விடை அளிக்கும் வகையிலான கேள்விகள் தான், அதிகம் இடம்பெறும். அதனால், எந்தக் கேள்வி வரும் என்பதை, ஓரளவு யூகித்து, அதற்கான விடைகளை எடுத்துச்சென்று, தேர்வில் "பிட்' அடிப்பர். ஆனால், புதிய கேள்வித் தாள் அமைப்பு, மிக நுட்பமாக, கேள்விகள் எந்த மூலையில் இருந்து வரும் என்பதையே கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அதனால், "பிட்'டும் அடிக்க முடியாது.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இணையத்தில் "புளூ பிரின்ட்' : பாட வாரியான, "புளூ பிரின்ட்' விரைவில், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. எனவே, பகுதி வாரியாக கேட்கப்படும் கேள்விகள் மாதிரிகளை, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.ஆசிரியர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணி கூறும்போது, "சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். 6,7,8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்தின் சார்பிலும், 9,10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் மற்றும் ஆசிரியர் கல்வி இயக்ககம் ஆகிய இரு துறைகள் சேர்ந்தும் பயிற்சி அளிக்கும். இதற்கான திட்டங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் வகுத்து வருகின்றன' என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...