திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை தேமுதிக புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த
சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது தேமுதிக. இந்தத்
தொகுதியில் அதிமுக போட்டியிட தேமுதிக தனது ஆதரவைத் தந்தது. இந்
நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று நம்பிய
தேமுதிக, திருச்சி இடைத் தேர்தலிலும் அதிமுகவை ஆதரிக்கும் திட்டத்தில்
இருந்தது.
ஆனால், தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கே அழைக்காமல்
அசிங்கப்படுத்தியது அதிமுக. இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகுவதாகக்
கூட முறைப்படி அறிவிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலை
வெளியிட்டது தேமுதிக. இப்போது அதிமுகவிலிருந்து கோபித்துக் கொண்டு வரும் கட்சிகளுக்கு அடைக்கலமும் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
உள்ளாட்சித்
தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்கு தேமுதிகவைத் தள்ளியது
அதிமுக தான். ஆனால், இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், தேமுதிகவை
அதிமுக கழற்றிவிட்ட 'நேரம்' தான். காரணம், கடந்த ஒரு வாரத்துக்கு
முன்பே தேமுதிகவுக்கு கூட்டணியில் இடமில்லை என்று அதிமுக
அறிவித்திருந்தால், திருச்சி இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை நிச்சயம்
நிறுத்தியிருப்பார் விஜய்காந்த்.
ஆனால், அதைச் செய்யாமல்
உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடனும் பேசுவோம்
என்றரீதியில் அதிமுக தரப்பிலிருந்து விஜய்காந்துக்கு தகவல்கள் போனதால்,
அவர் நம்பிக்கையுடன் காத்திருந்தார். இதனால் தான் திருச்சி இடைத் தேர்தலில்
போட்டியிடுவது குறித்து அவர் யோசிக்கக் கூட இல்லை. கூட்டணிக் கட்சியான
அதிமுகவை ஆதரிப்பது என்ற திட்டத்தில் இருந்தார் என்கிறார்கள்.
இதனால்
அக்டோபர் 13ம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல்
19ம் தேதி துவங்கியது முதல், அங்கு தனித்துப் போட்டியிடும் எந்த
முடிவையும் விஜய்காந்த் எடுக்கவில்லை. இந் நிலையில், நேற்றுடன் அங்கு மனுத்
தாக்கலும் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு தேமுதிகவைச் சேர்ந்த யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
உள்ளாட்சித்
தேர்தலில் தேமுதிகவை கழற்றிவிட்ட அதிமுகவை எதிர்த்து திருச்சி இடைத்
தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று கருதப்பட்ட நிலையில், உள்ளாட்சித்
தேர்தலில் அதிமுகவுடன் ஏற்பட்டுள்ள பிரிவு தாற்காலிகமானது தான் என
விஜய்காந்த் கருதுவதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் வரை தனது
தயவு அதிமுகவுக்கும், அந்தக் கட்சியின் தயவு தனக்கும் தேவை என்பதை
விஜய்காந்த் உணர்ந்துள்ளார். இதனால் திருச்சி இடைத் தேர்தலை விஜய்காந்த்
புறக்கணித்துள்ளார் அல்லது புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளார். இதன்மூலம் மக்களவைத் தேர்தல் வரை அதிமுகவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்பதை விஜய்காந்த் சுட்டிக் காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment