திருவெறும்பூர் பேரூராட்சியை, திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லும்
என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு
தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது இந்த தீர்ப்பை பிறப்பித்தது
உயர்நீதிமன்ற பெஞ்ச். முன்னதாக திருவெறும்பூரை சேர்ந்த பாலசந்திரன்
என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில்,
திருவெறும்பூர் பேரூராட்சியி்ல் மட்டும் 17,000 மக்கள் உள்ளனர்.
இங்கு
புகழ் பெற்ற எறும்பீஸ்வரர் கோயில், பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி
நிறுவனங்கள் உள்ளன. கடந்த 6.9.2010 அன்று திருச்சி மாநகராட்சியுடன்
திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் பாப்பாகுறிச்சி, எல்லக்குடி, ஆலத்தூர்
ஊராட்சிகளை இணைத்து எல்லையை விரிவுபடுத்துவது என்று திருச்சி மாநகராட்சி
தீர்மானம் நிறைவேற்றியது.
இதன் அடிப்படையில் திருவெறும்பூர்
பேரூராட்சி, ஊராட்சிகளின் கருத்துக்களை தெரிவிக்கும்படி திருச்சி
மாநகராட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த இணைப்புக்கு திருவெறும்பூர்
பேரூராட்சியும், 4 ஊராட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
நிறைவேற்றின. இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு நகராட்சி நிர்வாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் 28.9.2010, 15.10.2010, 3.1.2011
ஆகிய தேதிகளில் அரசாணை வெளியிட்டார்.
இந்த அரசாணையானது தமிழ்நாடு
பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு எதிரான முறையாகும். மற்றும் திருச்சி
மாநாகராட்சி சட்டத்திற்கும் எதிரானது. ஏனெனில் இந்த அரசாணை குறித்தும்,
இணைப்பு குறித்தும் எந்த பத்திரிகைகளிலும் விளம்பர அறிவிப்பு
வெளியிடப்படவில்லை. பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படவில்லை.
இந்த
இணைப்பை குறித்து திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள்
நிறைவேற்றிய தீர்மானமும் கருத்தில் கொள்ளவில்லை. ஆகையால் இது தொடர்பான
அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். இணைப்பையும் செல்லாது என்று அறிவித்தார்.
இதையடுத்து
தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதை இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று விசாரித்தது. விசாரணையின்
இறுதியில் அரசின் மேல் முறையீட்டை ஏற்று தனி நீதிபதியின் உத்தரவை ரத்து
செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன்
இணைத்தது செல்லும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment