மன்னார் வளைகுடா கடல் பகுதியில் புதிய ஆக்டோபஸ்
இனத்தை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக இக்கல்லூரியின் மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இயக்குநர்
வை.கி. வெங்கடரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள துடுப்புடைய மற்றும் ஓடுடைய மீன்களின்
உயிரினப் பல்வகைமைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தபோது, கல்லூரியின் முதுநிலை
ஆராய்ச்சியாளர் தி. வைத்தீஸ்வரன் புதிய மெல்லுடலி ஒன்றைக் கண்டறிந்துள்ளார். அந்த
மெல்லுடலி, பழுப்புதாள் யானைக்கை (ஆர்கோனோடா ஹையன்ஸ்) என்ற ஓடுடைய பேய்க்கணவாய் (ஆக்டோபஸ்)
ஆகும்.
இப்புதிய மெல்லுடலியை, தூத்துக்குடி கடல் பகுதியில் 300 முதல் 310 மீ.
ஆழத்தில் அவர் சேகரித்துள்ளார். புற அமைப்பு மற்றும் ஓடு அமைப்பின் அடிப்படையில்
இவ்வுயிரினமானது ஆர்கோனோடா ஹையன்ஸ் என்ற ஓடுடைய பேய்க்கணவாய் சிற்றினத்தைச்
சேர்ந்தது என உதவிப் பேராசிரியர் ந. ஜெயக்குமார் இனம் கண்டறிந்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை இந்த உயிரினம் தற்போதுதான் முதன் முதலாக பதிவு
செய்யப்பட்டுள்ளது. இது, மெல்லுடலிகள் தொகுப்பின் கீழ்வரும் தலைக்காலிகள் வகுப்பைச்
சேர்ந்தது. இது 15.4 செ.மீ., நீளமும் 15 கிராம் எடையும் கொண்டுள்ளது. உலகளவில் இதுவரை
நான்கு ஓடுடைய பேய்க்கணவாய் இனமானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதியில்
இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உயிரினத்தின் ஓடானது யானைக்கை என்றழைக்கப்படும் நாட்டிலஸ் இனத்தின்
ஓட்டைப்போல் தோற்றமளித்தாலும், இவை ஓடுடைய பேய்க்கணவாய் வகையைச் சார்ந்தவை. இதன் ஓடானது தாளை போன்று மெல்லியதாகவும், பழுப்பு நிறத்துடனும் இருப்பதால்
பழுப்புத்தாள் யானைக்கை என அழைக்கப்படுகிறது. இவை,மீன்களை உண்டு வாழும். இவை ஜெல்லி மீன்களை ஒட்டி வாழும். பெண் இனத்துக்கு
மட்டுமே ஓடு உள்ளது. ஆண் இனம் உருவில் மிகச்சிறிய அளவிலே உள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment