|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

உங்களின் குழந்தை ஒரு மேதை!


உங்களின் குழந்தை தற்போது வெற்றிகரமான வாழ்க்கை என்னும் மாபெரும் கடலின் கரையில் நின்று கொண்டுள்ளது. அந்தக் கடலை கடப்பதற்கு உங்களின் குழந்தைக்கு 3 விதமான அம்சங்கள் கட்டாயம் தேவை. அவை,
படைப்பாக்க ஆர்வம்(Creative curiosity)
ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன்(Inspired imagination)
சுதந்திரம்(Independence)
ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
உங்கள் குழந்தையின் செயல்பாடுகள் மீதான உங்களின் அணுகுமுறை தொடர்பாக ஆராய, சில கேள்விகள் இங்கே கேட்கப்பட்டுள்ளன. அவற்றை கவனமாகப் படிக்கவும்.
* பிஸ்கட்டுகள் நிறைந்த ஒரு டப்பாவை உங்களின் 2 வயது குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, நீங்கள் அதைக் கண்டித்து, குழந்தையிடமிருந்து டப்பாவை பிடுங்கி விடுவீர்களா?
* உங்கள் குழந்தை சகதியில் விளையாடிக் கொண்டிருந்தால், சத்தம்போட்டு, குழந்தையை சுத்தப்படுத்தி, வீட்டிற்குள், சுத்தமான பொம்மைகள் நிறைந்துள்ள இடத்தில் விடுவீர்களா?
* நீங்கள் சமையல் வேலையில் மும்முரமாக இருக்கையில், உங்கள் குழந்தை சில காலி அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுக்கும் சத்தம் கேட்டு நீங்கள் அங்கு சென்று பார்க்கையில், மேலும் ஒரு அட்டைப் பெட்டிக்காக உயரமான அலமாரியில் உங்கள் குழந்தை ஏறிக்கொண்டுள்ளது. இதனால் கோபம் கொண்டு குழந்தையை கடிந்துகொண்டு, அந்த இடத்திலிருந்து குழந்தையை அப்புறப்படுத்தி, தொலைக்காட்சியை இயக்கி அதன் முன்பாக குழந்தையை அமர வைப்பீர்களா?
* உங்களின் குழந்தை தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்து, கார்டூன் சேனல்களையோ அல்லது வர்த்தக விளம்பரங்களையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தால், உங்கள் குழந்தையைப் பார்த்து, சமர்த்து என்று சொல்வீர்களா?
* ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கையிலேயே, வேறொரு நாற்காலியை இழுக்கும்போதோ, தொலைக்காட்சி சேனலை மாற்றும்போதோ அல்லது இடத்தை விட்டு இறங்கி வேறு எதையாவது தேடி அலைந்து திரியும்போதோ, நீங்கள் பொறுமையை இழந்து, குழந்தையை அதட்டி அதன் பழைய இடத்திலேயே அமர வைப்பவரா?
* உங்களின் உதட்டு சாயத்தை(Lipstick) குழந்தைப்பார்த்து, அதை எடுத்து தனது உடலில் சாயம் பூசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால்  நீங்கள் பொறுமையை இழக்கிறீர்களா?
* உங்களின் பத்து வயது பிள்ளையானது, பல வண்ணங்களில் ஒரு கோணல்மானலான படத்தை வரைந்து வந்து உங்களிடம் காட்டினால், நீங்கள் அதை சில நொடிகள் கடமைக்காக பார்த்துவிட்டு, Good என்று சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் வேலையில் ஆழ்ந்து விடுவீர்களா?
* உங்கள் குழந்தை வரைந்ததை என்ன என்று கேட்டு, அதற்கு ஏதேனும் ஒரு மிருகத்தையோ, பறவையையோ அல்லது பொருளையோ உங்கள் குழந்தை சொன்னால், அதைக்கேட்டு ஏளனமாக சிரித்து, குழந்தை சொன்னதை மறுப்பீர்களா?
* உங்கள் 12 வயது குழந்தை உங்களிடம் வந்து, தான் ஒரு விஞ்ஞானியாக போகிறேன் அல்லது தத்துவ ஞானி ஆகப் போகிறேன் என்று சொன்னால், அது மிகவும் கஷ்டம் அல்லது முடியாத காரியம் என்று சொல்பவரா நீங்கள்?
* உங்கள் 6 வயது பெண் குழந்தை, தனது அண்ணனின் துப்பாக்கி பொம்மை அல்லது கட்டுமான அமைப்பை எடுத்து விளையாடினால், நீங்கள் அவளிடம் இது பெண்களுக்கானதல்ல, எனவே உனக்கான பொம்மையை எடுத்து விளையாடு என்று சொல்பவரா? மேற்கண்ட 10 கேள்விகளுக்கு உங்களின் பதில் NO என்று இருந்தால், நீங்கள் ஒரு PERFECT பெற்றோர். உங்கள் குழந்தை மேதையாக ஆகும் செயல்பாட்டில், நீங்கள் முழுமையாக ஒத்துழைக்கிறீர்கள் என்று அர்த்தம். அதேசமயம், 7 முதல் 9 வரை உங்களின் பதில்கள் NO என்று இருந்தால், உங்கள் குழந்தையின் மேம்பாட்டிற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, உங்களின் இதர பலவீன பகுதிகளை சரிசெய்து கொள்ளுங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு 6 மற்றும் அதற்கும் குறைவாக உங்களின் பதில் NO என்று இருந்தால், உங்கள் குழந்தையின் மேதமை வளர்ச்சியை நீங்கள் தடுக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, உங்களின் மனநிலை மற்றும் தன்மையை நீங்கள் நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

உங்களின் குழந்தை மேதையாக மாறுதல்: ஒரு மேதை என்பவர் படைப்புத்திறன் உள்ளவர். அவர் வெறுமனே விஷயங்களை எளிதாக புரிந்து கொள்பவர் அல்ல. அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர். அவர் தனக்கான ஒரு தனித்தன்மையை இந்த சமூகம் மற்றும் இந்த உலகிலிருந்து பெறுகிறார். எனவே, ஒரு குழந்தையின் படைப்புத்திறன் பெரியளவில் எழுச்சிப் பெறுவதற்கு, படைப்பாக்க ஆர்வம், கற்பனை மற்றும் சுதந்திரம் ஆகியவை அதற்கு கட்டாயம் தேவை.

படைப்பாக்க ஆர்வம்: படைப்புத்திறனுக்கான அடிப்படை தன்மையாக இந்த படைப்பாக்க ஆர்வம் திகழ்கிறது. படைப்புத்திறனை உங்கள் குழந்தையினுள் உருவாக்க, பலவித விஷயங்களைப் பற்றி கேள்விக் கேட்கும் பழக்கத்தை தூண்டுங்கள். குழந்தையானது, புதிய அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். இதன்மூலம் அக்குழந்தைக்கு புதிய எண்ணங்கள் பிறக்கும். ஒரு குழந்தை கேள்வி கேட்கும்போது, உங்களின் முழு கவனத்தையும் அதன்பால் செலுத்தவும். ஏனெனில் இதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு பொதுவாக கற்றுத் தரப்படுகிறது. நாமும் அதைத்தான் அவர்களிடம் சொல்கிறோம். ஆனால் நாம் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்மை உதாசீனப்படுத்திய பெரியவர்களை நாம் விரும்பியிருக்கிறோமா? அல்லது மனதுக்குள் மதித்திருக்கிறோமா? எனவேதான், குழந்தைக்கான முக்கியத்துவத்தை நாம் நிச்சயம் வழங்கியாக வேண்டும். உங்கள் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போது, கண்ணால் காணும் காட்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கலாம். (உ.ம். அந்த மனிதர் ஏன் செடிக்கு நீர் ஊற்றுகிறார், நின்று கொண்டிருந்த கார் எவ்வாறு ஓடியது, ஏன் கடை வைத்திருக்கிறார்கள்) இதன்மூலம் சிந்தனைத்திறன் மேம்படும். ஏன், எதற்கு என்று யோசிப்பார்கள். அதற்கு விடைகாண முயல்வார்கள்.

கற்பனை: பள்ளியில் ஒரு குழந்தைக்கு, வரலாறு, புவியியல், சமூகவியல், அறிவியல், கணிதம் போன்ற பல பாடங்களைப் பற்றிய அம்சங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கற்பனைத்திறன் சேர்வது மிகவும் முக்கியம். கற்பனையற்ற அம்சங்கள் என்பவை பசுமையில்லாத தாவரங்களைப் போன்றவை. எனவே, பாடத்திட்டத்தில், ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் என்ற அம்சம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏ¦னினில், படைப்புத்திறனின் ஆக்ஸிஜனாக இந்த ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் திகழ்கிறது. உதாரணமாக, ஒரு விஞ்ஞானி ஒரு விஷயத்தை முதலில் கற்பனை செய்து, பின்னர் அதை நிஜமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அது தோல்வியடையும்போது, மீண்டும் வேறொரு கற்பனையை மேற்கொண்டு, தனது முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த செயல்முறைதான் அனைத்து வகை துறைகளிலும் இருக்கிறது. உங்கள் குழந்தையின் கற்பனை சமயத்தில் அபத்தமாகவும், தவறாகவும் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்காக அதை திட்டுவது அதைவிட அபத்தமானது. ஏனெனில், இதன்மூலம் கற்பனை செய்யவே பிற்காலத்தில் குழந்தை பயப்படும். ஏனெனில் இதுபோன்ற கற்பனைகள்தான் வருங்காலத்தில் செம்மையான சிந்தனைகளாக மாறும்.

சுதந்திரம்: ஒரு மேதைக்கு, சுதந்திரம் என்பது ஜீவ நீரைப் போன்றது. அந்த சுதந்திரத்திற்கு தடை ஏற்பட்டால், ஒரு இளம் மேதை தன்னை ஒரு நல்ல படைப்பாளியாக உருவாக்கிக் கொள்வதில் பலவிதமான சிக்கல்களை ஏற்படும். ஒரு வளரும் மேதைக்கு பெரியளவிலான புறக்கணிப்பு ஏற்படக்கூடாது. அப்போதுதான், அந்த மேதை இன்னும் புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். ஒரு இளம் மேதையின் சுதந்திரமானது, பெற்றோர் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில்தான் அடங்கியுள்ளது.
பழைய நடைமுறைகள் மற்றும் விதிகளை மீறினால்தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். அதுதான் உலக நியதி. எனவே, உங்கள் குழந்தை அந்த விதிகளை மீறினால், நீங்கள் அதிர்ச்சியடையாமல், ஆச்சர்யமடைந்து, உங்களின் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும்.
An Elegy Written in the Country Churchyard என்ற ஆங்கில கவிதையில், தாமஸ்கிரே(Thomas Gray) என்ற கவிஞர், ஒரு கிராமத்து மயானத்தில் நின்று கல்லறைகளைப் பார்த்து இவ்வாறு பாடுவார்,
அமைதியாய் உறங்குபவர்களே,

உங்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் 
உங்களில் பலர் மில்டன்(இலக்கிய சாதனையாளர்) போன்றோ, ஆலிவர் கிராம்வெல்(அரசியல் புரட்சியாளர்) போன்றோ ஆகியிருப்பீர்கள்!ஆனால் உங்களின் சூழலுக்கு நீங்கள்பலியாகிவிட்டீர்கள்.வறுமையும், வாய்ப்புகள் கிடைக்காமையும்உங்களின் சாதனையை தடுத்துவிட்டன.உங்களின் அபூர்வ திறமைகள் அனைத்தும் வெளிவராமலேயே வீணாகிவிட்டன. ஐயோ! என்ன கொடுமை இது!
நமது குழந்தைகள் பலருக்கும் இதே நிலைதான். வறுமை என்பது ஒரு சிறு தடைதான். அதை மீறி சாதனை புரிந்தவர்கள் எத்தனையோ பேர். முறையான ஆதரவு, உற்சாகமளித்தல், திறமையை கண்டுகொண்டு உதவுதல், சுதந்திரம் அளித்தல், சோதனைகள் வந்தாலும் குழந்தையின் பக்கமே இருத்தல் போன்ற பலவித உதவிகள் கிடைக்காமல் காணாமல் போகும் மேதைகள்தான் அதிகம்!
எனவே, அவர்களுள் ஒருவராக, உங்களின் குழந்தையும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...