|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 August, 2011

மக்கள் முட்டாள்களல்ல!

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்கிற நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு மத்திய அரசின் நடவடிக்கை இருக்கிறது. ""காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்குக் கல்மாடியை நியமித்தது பாஜக அரசுதான்'' என்று இப்போது ஒரு புதிய தப்பித்தல்வாதத்தில் ஈடுபட்டிருக்கிறது.


காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுத் தலைவரான கல்மாடியை, அமைச்சர்கள் குழு பரிந்துரையைப் புறக்கணித்து நியமித்தது பிரதமர் அலுவலகம்தான் என்று இப்போது மத்திய தலைமை தணிக்கைக் குழு (சி.ஏ.ஜி.) குறிப்பிட்டுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானதால், இந்த அளவுக்குப் பதற்றத்துடன் மறுப்புத் தெரிவித்துள்ளது பிரதமர் அலுவலகம்.

 அதாவது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்தான், காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுவின் தலைவராக இருப்பார் என்ற விதியை ஏற்படுத்தியது அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான். அதனால்தான் கல்மாடி காமன்வெல்த் விளையாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அப்படி நியமிக்கப்பட்டதால்தானே இந்த ஊழல் நிகழ்ந்தது. அதனால், இத்தனை ஊழல்களுக்கும் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பொறுப்பு என்று சொல்லாமல் சொல்கிறது பிரதமர் அலுவலகம்.

இந்த வாதம் எந்த அளவுக்கு ஏற்புடையது? 2004-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவு அப்படியே தொடரத்தான் வேண்டும் என்பது என்ன கட்டாயம்? பாஜக ஆட்சி இத்தகைய முடிவை மேற்கொண்ட ஓராண்டு காலம் கழித்து, பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன் புதிய முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது என்று யாராவது இவர்களைத் தடுத்தார்களா?

 இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்தான் காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுத் தலைவராக இருப்பார் என்கிற விதிமுறையை மாற்றிவிட முடியாத அளவுக்கு அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றுத்தான் திருத்தம் செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அது என்ன அரசியல் நிர்ணயச் சட்டமா? கல்மாடியை நீடிக்கச் செய்ததன் காரணம் என்ன என்பது இன்று ஊழலின் ஊற்றுக்கண்களில் அடைபடாமல் வெளியே கசிந்து கொண்டே இருக்கும் ஊழலுக்கு அவர் துணை நின்றார் என்பதால்தானே!
 2ஜி அலைக்கற்றை வழக்கிலும் இதே அணுகுமுறையைத்தான் மத்திய அரசு மேற்கொண்டது. தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசா பதவி விலகியதும், அப்பதவிக்குப் பொறுப்பேற்ற கபில் சிபல் அளித்த முதல் பேட்டியிலேயே, பாஜக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் காலத்திலிருந்து தொலைத்தொடர்புத் துறையில் தனியாருக்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் தொடங்கி, இன்றைய நாள் வரைக்கும் அளிக்கப்பட்டுள்ள உரிமங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
 இவையாவும் பாரதீய ஜனதா கட்சியை மிரட்ட வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், ஊழல் என்கிற முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா?
 ஞாபகமறதி வியாதியில் சிக்கியதாகச் சொல்லப்பட்ட கல்மாடியை மீண்டும் சி.ஏ.ஜி. ஞாபகப்படுத்தக் காரணம், இப்போது இன்னும் அவையின் முன்பாக வைக்கப்படாத, மற்றொரு சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகள், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளன. அதாவது, ரூ.5,000 மதிப்புள்ள விளக்குகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை ரசீது கொடுத்து ஒப்பந்த நிறுவனங்கள் பணம் பெற்றுள்ளன. இதற்கு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ரூ.31 கோடிக்கு அனுமதி அளித்துள்ளார். இதனால் அரசுக்கு ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்தத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


 இதுகுறித்தும் மக்களவையில் தன்னிச்சையாக விளக்கம் அளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான், தில்லி யூனியன் பிரதேசம் இந்த விளையாட்டைப் பொறுப்பேற்று நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த முடிவைச் செயல்படுத்தத் தடையாக இருந்த அப்போதைய பாஜக அரசுதான் இன்றைய இந்த நிலைமைக்குக் காரணம். தில்லி அரசைப் புறக்கணித்துவிட்டுக் காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுவின் மூலம் நடத்தப்பட்டதால்தான் இந்த நிலைமை என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால், ஷீலா தீட்சித் பற்றி கேட்டால், அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவில்லை, அத்தகைய அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பின்னர் அதைப் படித்துப் பார்த்துத்தான் பதில் சொல்ல முடியும் என்று சொல்கிறார்.

 ஷீலா தீட்சித் பற்றிக் கேட்டால், அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் வைக்கப்படாத, பத்திரிகைகளில் மட்டும் வெளியான செய்திக்குப் பிரதமர் அலுவலகம் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறது, கல்மாடி பொறுப்பேற்றதற்குக் காரணமே முந்தைய பாஜக தலைமையிலான அரசுதான் என்று!

காமன்வெல்த் விளையாட்டு நடைபெற முடியாத அளவுக்குச் சிக்கல்கள் இருப்பதாக "காமன்வெல்த் கேம்ஸ் பெடரேஷன்' குறை கூறியபோது, 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த எம்.எஸ். கில் பேட்டியளித்தார். ""1982-ல் தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்குப் பிறகு இப்போதுதான் மிகப்பெரிய அளவில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டின் முன்பாக தனிநபர்கள் யாரும் முக்கியமில்லை என்று பிரதமர் என்னிடம் கூறினார். ஆகையால், இந்த விளையாட்டு எந்தக் குறைவும் இல்லாமல் நடைபெறும்'' என்றார்.



 2009-ம் ஆண்டிலும்கூட, கல்மாடியை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு நபரை அல்லது அதிகாரிகளை நியமித்து காமன்வெல்த் விளையாட்டை நடத்தியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? அத்தனை ஊழல்கள் நடப்பதையும் கண்டும் காணாமலும் இருந்துவிட்டு, பத்திரிகைகளும், ஏன், காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனமே பல விதிமுறை மீறல்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டியதை எல்லாம் புறக்கணித்துவிட்டு, இப்போது முந்தைய அரசின்மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் கயமைத்தனத்துக்கு முடிவே கிடையாதா?


கேப்பையில் நெய் வழிகிறது என்று சொன்னால் அதை நம்பும் முட்டாள்கள் அல்ல, இந்தியத் திருநாட்டு மக்கள்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...