இந்தியாவில் சர்க்கரை நோயினால் தற்போது நான்கு முதல் 5 கோடி மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு 20 லட்சம் பேராக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2007ம் ஆண்டு 4 கோடியாக உயர்ந்தது. 2025ம் ஆண்டில் 7 கோடியாக உயரும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பில் சீனா இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி (இன்று) நீரிழிவு விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தற்போது உலக அளவில் 346 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030 ம் ஆண்டில் இது இருமடங்காகும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு.
நீரிழிவின் வகைகள்: ரத்தத்தில் குறிப்பிட்ட அளவை விட அதிக அளவு சர்க்கரை கலந்திருப்பது நீரிழிவு நோய் எனப்படுகிறது. கணையத்தில் உள்ள இன்சுலின் எனப்படும் சுரப்பியின் செயல்பாடு குறையும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தம் காரணமாகவும், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் பருவத்தில் எற்படும் ஹார்மோன் சுரப்பு மாறுபாட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே 30 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
சர்க்கரை நோயை சமாளிக்கலாம்: எந்த நோய் என்றாலும் வந்த பின் அதற்கான மருந்துகளை உட்கொள்வதை விட வரும்முன் பாதுகாப்பதே சிறந்தது. சர்க்கரை நோயை மூன்று வழிகளில் கட்டுப்படுத்தலாம். முறையான உணவுக்கட்டுப்பாடு, சரியான உடற்பயிற்சி, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உணவுக்கட்டுப்பாடு: உடலின் எடையை பாதுகாப்பாக வைக்கவேண்டும். தினமும் காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம் மேற்கொள்ளவேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு இருப்பவர்கள் தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும். கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், பச்சை காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள், உண்ணவேண்டும் அவ்வப்போது எடையை கண்காணிக்க வேண்டும்.
பாதங்களை பாதுகாப்போம்: சர்க்கரை நோயாளிகளை எளிதில் பாதிப்பது பாதங்களும், கண்களும்தான். எனவே எங்கு சென்றாலும் செருப்பு அணியவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. பாதங்களில் சிறு புண் ஏற்பட்டால் கூட உடனடியாக கவனிக்க வேண்டும். நீண்டநேரம் ஈரமான இடத்தில் பாதங்களை வைத்திருக்கக் கூடாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் குறித்த சரியான விழிப்புணர்வு இன்மையினாலேயே பெரும்பாலோனோர் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர். எனவே சர்க்கரை நோயின்றி ஆரோக்கியமாக வாழ உணவுக்கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
No comments:
Post a Comment