கடந்த 8 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்நத பழங்குடியினப் பெண்கள் 20,000 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.பியுமான அஜித் ஜோகி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடியினப் பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 20,000 பழங்குடியினப் பெண்கள் கடத்தப்பட்டு டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்களில் விற்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, அந்த பெண்கள் ஜஷ்பூர், சர்குஜா மற்றும் ராய்கர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள் கடத்தப்பட்டார்கள். பெண்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவிக்கு வந்ததில் இருந்தே பாஜக அரசு இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதனால் தான் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆள் கடத்தல் அதிகரித்துள்ளது என்றார். சத்தீஸ்கரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சர்குஜா, கோர்பா, ஜஷ்பூர், கொய்ரா மற்றும் ராய்கர் மாவட்டங்கள் ஆள்கடத்தலுக்கு பெயர் போனவை. அந்த பகுதிகளில் வாழும் ஏழைப் பெண்களை வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பெரிய நகரங்களில் விபச்சாரத்தில் தள்ளிவிடுகின்றனர். கடந்த 10ம் தேதி ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் 14 பெண்கள் உள்பட 20 பேரைக் கடத்தியுள்ளார்.
No comments:
Post a Comment