திருமணத்திற்கு மறுத்த காதலன் வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தி, பிடிவாதமாக காதலனை மணந்த பெண், வரதட்சணைக் கொடுமையால் தீக்குளித்து பலியானார். கும்மிடிப்பூண்டி அடுத்த, துராபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜம் மகள் பிரமிளா, 21. ஆசிரியர் பயிற்சி படித்து முடித்தவர். இவருக்கும், தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ஜெயின், 24, என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, குடும்பத்தினருக்கு தெரியாமல், பிப்ரவரி மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டு, தனித்தனியே அவர்கள் வீட்டில் வசித்து வந்தனர்.
முறையாக திருமணம் செய்து சேர்ந்து வாழ பிரமிளா கட்டாயப்படுத்திய போது, வீட்டினர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடியாது என, காதலன் தெரிவித்திருக்கிறார். காதலனை கரம் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு, ஜெயின் வீட்டின் முன், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து, ஊர் பெரியவர்கள் கேட்டுக் கொண்டதன்படி, இருவருக்கும் செப்டம்பர் மாதம் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் கணவன் வீட்டார், பிரமிளாவிடம், 50 சவரன் நகை, இரண்டரை லட்சம் பணம் ஆகியவற்றை வரதட்சணையாகக் கேட்டு கொடுமைப்படுத்தினர்.
இதில் மனமுடைந்த பிரமிளா, 9ம் தேதி மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை, சிகிச்சைக்கென சென்னை கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து, பிரமிளாவின் தந்தை ராமானுஜம் கொடுத்த புகாரின்படி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி சில மாதங்களே ஆனதால், பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி விசாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment