அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் சார்ஜென்ட், கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகிய
பொருளியல் அறிஞர்களின் ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு இந்த ஆண்டு
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
"பொருளாதாரக்
கொள்கைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வேலைவாய்ப்பு,
முதலீடுகள் போன்ற பேரியல் பொருளாதார மாறிகளுக்கும் (Macroeconomic
variables) இடையேயான தொடர்புகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்
வகையிலான செய்முறைகளை இவர்கள் இருவரும் உருவாக்கினார்கள்" என்று நோபல்
பரிசுத் தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கட்டமைப்பு
பேரியல் பொருளாதாரம் (Structural Macroeconomics) தொடர்பான முறையை
சார்ஜென்ட் உருவாக்கினார். பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் நிரந்தரமான
மாற்றத்தை ஆய்வு செய்வதற்கு இவரது ஆய்வு பயன்பட்டது.
பொருளாதார
வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்களும், மக்களும் தங்களது எதிர்பார்ப்புகளை
மாற்றியமைத்துக் கொள்ளும்போது பேரியல் பொருளாதார மாறிகளுக்கு இடையேயான
தொடர்புகளை ஆய்வு செய்ய இவர் உருவாக்கிய முறை பயன்பட்டது என்று நோபல்
பரிசுத் தேர்வுக் குழு குறிப்பிட்டிருக்கிறது.
சிம்ஸின் முறை வேறு
மாதிரியானது. பொருளாதாரக் கொள்கையில் ஏற்படும் மத்திய வங்கிகளின் வட்டி
விகிதம் உயர்வு போன்ற தாற்காலிக மாற்றங்களால் பொருளாதாரம் எப்படிப்
பாதிக்கப்படுகிறது, எதிர்ப்பார்ப்புகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால்
என்னென்ன விளைவுகள் பொருளாதாரத்தில் ஏற்படுகின்றன என்பதை இவர் உருவாக்கிய
முறை விளக்கியது. இது கீனிஸிய தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இருவரும்
தனித்தனியே ஆய்வு செய்து பொருளாதார மாதிரிகளை உருவாக்கினாலும், இரண்டும்
ஒன்றையொன்று முழுமையடைச் செய்வதாக உள்ளன. இவர்களின் கண்டுபிடிப்புகளை உலகம்
முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வகுப்பவர்களும் பின்பற்றி
வருகின்றனர் என்றும் நோபல் குழு புகழாரம் சூட்டியிருக்கிறது.
தாமஸ் சார்ஜென்ட்: 1943-ம்
ஆண்டு அமெரிக்காவில் பிறந்த சார்ஜென்ட், நியூயார்க் பல்கலைக் கழகத்தில்
பொருளாதாரத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1968-ம் ஆண்டில்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி முடித்தார். பொருளாதாரம் சார்ந்த
பல்வேறு தேசிய விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.
கிறிஸ்டோபர் சிம்ஸ்: 1942-ம்
ஆண்டில் பிறந்த இவர், 1968-ல் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பி.எச்டி
பட்டம் வென்றார். அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பொருளாதாரம் சார்ந்த பல முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை இவர்
எழுதியிருக்கிறார். இப்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்
பணிபுரிந்து வருகிறார்.
No comments:
Post a Comment