|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 October, 2011

நீராவியில் ஓடும் உலகின் மிகப் பழமையான கார் ரூ.22 கோடிக்கு ஏலம்!


Oldest Car
கடந்த 1884ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நீராவியில் இயங்கும் உலகின் மிகப் பழமையான கார் ரூ.22 கோடிக்கு ஏலம் போய் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டி டியோன் பூட்டன் இடி டிரிபார்டாக்ஸ் தாஸ் ஏ தாஸ் ஸ்டீம் ரன்எபவுட்(அப்பாடா...இப்பவே கண்ணை கட்டுதே) என்ற நீண்ட திருநாமத்தை கொண்ட இந்த கார் கடந்த 1884ம் ஆண்டு பிரான்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. நீராவியில் இயங்கும் எஞ்சின் கொண்ட இந்த கார் காலத்தை கடந்து வென்று நிற்கிறது.

ஆம், உலகின் மிகப்பழமையான கார் என்பது மட்டுமல்ல, ஓடும் நிலையில் உள்ள உலகின் ஒரே பழமையான கார் என்ற பெருமையும் அட நம்ம ... ரன்எபவுட்டுக்குத்தான் சொந்தம். கடந்த 1887ம் ஆண்டு நடந்த கார் பந்தயத்தில்(அப்போதைய பார்முலா 1 பந்தயமாம்) மணிக்கு 37 மைல்(60 கிமீ) என்ற அசுர வேகத்தில் ஓடி சாம்பியன் பட்டத்தை வென்றதாம் இந்த ...ரன்எபவுட்.

இந்த காரில் 4 பேர் எதிரெதிர் திசையில் அமர்ந்து பயணம் செய்யலாம். மேலும, காரில் உள்ள இருக்கைகள் அனைத்தும் 40 கேலன் கொள்ளளவு கொண்ட தண்ணீர்தொட்டியின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி அல்லது சாதாரண கரிக்கட்டைகளை கொண்டு நீராவியை உருவாக்கி அதன் மூலம் செல்லும் இந்த காரை ஸ்டார்ட் செய்வதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும். காரில் பொருத்தப்பட்டிருக்கும் தொட்டிகளில் உள்ள தண்ணீர் மூலம் நீராவியை உற்பத்தி செய்து 20 மைல் (32 கிமீ) வரை செல்ல முடியும்.

20 மைல் தூரம் சென்றவுடன் மீண்டும் தண்ணீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். இந்த காரை பிரபல ஆர்எம் ஏல நிறுவனம் சமீபத்தில் ஏலம் விட்டது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.2.40 கோடி நிர்ணயிக்கப்பட்டது.இந்த கார் அதிகபட்சம் ரூ.10 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாக ஆர்எம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால், கணிப்புகளை பொய்யாக்கி இந்த கார் ரூ.22 கோடிக்கு ஏலம் போய் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

காரை ஏலத்தில் எடுத்தவர் ரன்எபவுட்டின் 5 வது உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...