சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சில மாணவர்களிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்கள் உண்மை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவ்வாறு மாணவர்களிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த தொகையை மாணவர்களிடமேய திரும்ப வழங்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் குறித்து வரும் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு துவக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குள் 14 கல்லூரிகள் மீது புகார்கள் வந்தன. புகார்கள் மீதான விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடத்தப்படும் விசாரணை குறித்து குழுவின் தலைவர் வி. ஜெயபாலன் கூறுகையில், மாணவர்களிடம் இருந்து வந்த புகாரினை அடுத்து சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.சென்னை அருகே உள்ள மற்றொரு கல்லூரியில் மாணவர்களிடம் இருந்து கூடுதலாக 20 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரசீது தராததால், வங்கிக் கடன் பெற முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியும், முதல்தலைமுறை மாணவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை கல்விக் கட்டணமாக வசூலித்திருப்பது தெரிய வந்தது.விசாரணை நடத்தப்பட்ட கல்லூரிகளிடம், மாணவர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத் தொகையை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment