சென்னையில் இன்று நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பொறுப்பாக ஆடி, வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி காத்திருக்கிறது.சென்னை அணியின் ஆட்டம் நிலையில்லாமல் உள்ளது. முதலில் மும்பையிடம் வீழ்ந்தது. பின் டெக்கான் அணியை வென்றது. அடுத்து டில்லி அணியிடம் தோல்வியை சந்தித்தது. இன்று சொந்த மண்ணில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சாதிப்பாரா ஜடேஜா:சென்னை அணிக்கு கடந்த மூன்று போட்டியிலும் சிறந்த துவக்கம் கிடைக்கவில்லை. பிளசிஸ், முரளி விஜய் ஜோடி எழுச்சி பெறும் பட்சத்தில் நல்ல துவக்கம் கொடுக்கலாம். ரெய்னா நிலைத்து நின்று ஆட வேண்டும். தோனி, பத்ரிநாத், டுவைன் பிராவோ ஆகியோர் மந்தமான ஆட்டத்துக்கு விடைகொடுத்து, அதிரடிக்கு மாறுவது அவசியம். ரவிந்திர ஜடேஜா தனது திறமையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டும். கடந்த போட்டியில் நான்கு பேர் ரன் அவுட்டானது சிக்கலை ஏற்படுத்தியது. இத்தவறு தொடரக் கூடாது.சென்னை அணியின் வேகப்பந்துவீச்சில் ஆல்பி மார்கல், போலிஞ்சர் நம்பிக்கை அளிக்கின்றனர். சொந்த மண்ணில் இன்று அஷ்வின், ஜகாதி. ஜடேஜா "சுழல்' ஜாலம் காட்டினால் நல்லது.
கெய்ல் எதிர்பார்ப்பு:பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. கோல்கட்டா அணிக்கு எதிராக ஏமாற்றிய கிறிஸ் கெய்ல், இன்று சிக்சர் மழை பொழியலாம். இவருக்கு புஜாரா ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், சிறந்த துவக்கம் கிடைக்கும். "மிடில்-ஆர்டரில்' விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ், சவுரப் திவாரி அதிரடி காட்டும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பெறலாம்.
ஜாகிர் நம்பிக்கை:கோல்கட்டாவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சில் ஆறுதல் அளித்த ஜாகிர் கான், இன்றும் கைகொடுக்கலாம். இவருக்கு வினய் குமார் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், விக்கெட் வேட்டை நடத்தலாம். சுழலில் அனுபவ முரளிதரன் இருப்பது பலம். ஏற்கனவே இவர், சென்னை அணியில் இருந்ததால், வீரர்களின் பலம், பலவீனம் குறித்து நன்கு அறிந்திருப்பார். இவருக்கு கேப்டன் வெட்டோரி கைகொடுக்கும் பட்சத்தில், சென்னை அணிக்கு சிக்கல் தான்.
இதுவரை...ஐ.பி.எல்., அரங்கில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் 12வது முறையாக மோத உள்ளன. முன்னதாக விளையாடிய 11 போட்டியில் சென்னை 6, பெங்களூரு 5 போட்டியில் வெற்றி பெற்றன
No comments:
Post a Comment